இலங்கை

மரபுரிமை இடங்கள் இருப்பதால் சிங்கள பௌத்தர்களின் பிரதேசம் வட, கிழக்கே

வடக்கு, கிழக்கே சிங்களவர்கள் மற்றும் பௌத்தர்களின் மரபுரிமை பிரதேசங்கள் என்றும், அங்கே அதிகளவான தொல்பொருள் இடங்கள் இருக்கின்றன என்றும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

பொதுபல சேனாவினால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிக்குகள் தொடர்பில் தவறான வகையில் கதைப்பவர்கள் இருக்கின்றனர். மகாசங்கத்தினரின் மாநாடு தொடர்பிலும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறு பிக்குகளுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும். அதற்காக நிதியை எவரும் வழங்கலாம்.

இதேவேளை எமது வரலாற்றை எடுத்துக்கொண்டால் 1215ஆம் ஆண்டில் காலிங்க மாகல ஆக்கிரமிப்பின் போதும், சோழர் காலத்திலும் பௌத்த மதத்தை அழிக்க முயன்ற பொதும் அது நடக்கவில்லை. அதன்பின்னர் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் உள்ளிட்ட ஆக்கிரமிப்பாளர்களாலும் எமது நாட்டில் பௌத்தத்தை இல்லாமல் செய்ய முடியாது போனது. ஆனால் இப்போது பௌத்த மதத்திற்கும் பிக்குகளுக்கும் எதிராக நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. அவர்களுடன் மோதுவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்.

இதேவேளை எமது பிக்குகள் வடக்கிற்கு போகத் தேவையில்லை என்று பேராசிரியர் என கூறிக்கொள்ளும் தேரர் ஒருவர் தெரிவித்துள்ளார். அவ்வாறானவர்களிடம் அரசாங்கம் ஆலோசனை கேட்டால் நாடு நல்ல நிலைக்கு செல்லாது. அவர் எங்கிருந்து பேராசிரியர் பட்டத்தை பெற்றார் என்று தெரியவில்லை. குறிப்பாக வடக்கு, கிழக்கிலேயே சிங்களவர்களினதும், பௌத்தர்களினதும் இராச்சியத்தை உருவாக்கிய சிங்களவர்களின் மரபுரிமை வடக்கு கிழக்கிலேயே இருக்கின்றன. அங்கு தொல்பொருள்கள் நினைவிடங்கள் 277 உள்ளன. மட்டக்களப்பில் மாத்திரம் 1080 தொல்லியல் இடங்கள் உள்ளன. அங்கிருந்து சிங்களவர்கள், பௌத்தர்கள் துரத்தப்பட்டார்கள் என்று அந்தத் தேரருக்கு தெரியவில்லையா? பிக்குகள் நாட்டுக்காக எவ்வளவு பணிகளை செய்துள்ளனர். அதனை புரிந்துகொள்ள வேண்டும். இதனால் பிக்குகளுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *