இலங்கை

சட்டத்தை திருத்தித் தந்தால் மாகாண சபைத் தேர்தலை எந்நேரத்திலும் நடத்தத் தயார்; தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர்

மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்கு தேவையான சட்டத் திருத்தத்தை செய்து தந்தால் எவ்வேளையிலும் அந்தத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயார் நிலையிலேயே இருக்கின்றது என்றும், இதனால் அந்த சட்டத் திருத்தத்தை செய்து தேர்தலை நடத்துவதற்காக பின்னணியை ஏற்படுத்தித் தருமாறு சகல அரசியல் கட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கேட்டுக்கொள்வதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழவில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மாகாண சபைகள் தேர்தல் தொடர்பில் அடிக்கடி கேட்கப்படுகின்றது. மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்கு சட்டப்படி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தற்போதைக்கு முடியாத நிலைமையே உள்ளது. அது தொடர்பில் சட்ட ரீதியான இடையூறுகள் உள்ளன. நீண்ட காலமாக மாகாண சபைகள் தேர்தலை நடத்தாமல் இருப்பதால் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அடிக்கடி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி வருகின்றது.

குறிப்பாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்ட பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொள்வதானது, முடியுமான வரையில் துரிதமாக பாராளுமன்றத்தின் ஊடாக செய்ய வேண்டிய சட்ட மறுசீரமைப்பை மேற்கொண்டு மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தேவையான பின்னணிகளை ஏற்படுத்தித் தருமாறு கோருகின்றோம். அவ்வாறான சட்ட மறுசீரமைப்பை செய்த உடனேயே மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகவே இருக்கின்றது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *