கவிதைகள்
எண்ணி எண்ணிப் பார்க்கின்றார்!…. கவிதை…. ஜெயராமசர்மா

விண் மீன்கள் நடுவினிலே
வெளிச்சந் தரும் வெண்நிலவு
தன் னிலைமை அறியாமல்
தனித்து உலா வருகிறது
தேயும் நாள் என்பதனை
எண்ணி அது கலங்காமல்
வளரும் நாள் மகிழ்வுடனே
ஒளி கொடுத்து மலர்கிறதே
விண் மீனாய் இருக்கின்றார்
மேதினியில் பல பேர்கள்
வெளிச்சந் தரும் நிலவாக
இருக்கின்றார் பல பேர்கள்
விண் மீன்கள் ஒளிகுறைவு
வெண் நிலவே ஒளிநிறைவு
மண் மீது இருப்பவர்கள்
வெண் நிலவை விரும்புகிறார்
காதலர்க்கு வெண் நிலவு
களிப் பூட்டி நிற்கிறது
பிரிந்தவர்கு வெண் நிலவு
பெருந் துன்பம் கொடுக்கிறது
வெளிசந் தரும் வெண்நிலா
விதம் விதமாய் உணர்வுகளை
மேதினி வாழ் மனங்களுக்கு
வழங்கி அது வளர்கிறது
வெண் நிலவை விரும்புகிறோம்
விண் மீனை விரும்புகிறோம்
மண் இருப்பார் யாவருமே
எண்ணி எண்ணிப் பார்க்கின்றார் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()