இலங்கை

புலம்பெயர் தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பால் நாமலின் உரையின் நேரத்தை திடீரென மாற்றிய ‘ஒக்ஸ்போர்ட்’; திட்டமிட்டபடி போராட்டம் என்கின்றனர் ஈழத்தமிழர்

புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ்மக்களின் கடும் எதிர்ப்பால் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவிருந்த நாமல் ராஜபக்சவின் உரை ரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில் ஒக்ஸ்போர்ட் யூனியன் (Oxford Union), நாமல் ராஜபக்ச இன்று திங்கட்கிழமை பங்கேற்கும் நிகழ்வின் நேரத்தை மாற்றியுள்ளது

புகழ்பூத்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆகியவற்றில் எதிர்வரும்-25 ஆம் திகதியும் உரையாற்ற வருமாறு சிறீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை உரையாற்ற வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு எதிராக புலம்பெயர் ஈழத் தமிழ்மக்கள் போர்க் கொடி தூக்கினர். பிரித்தானியாவின் 20 இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களின் தமிழ் மாணவர் சங்கங்கள் மற்றும் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு இணைந்து நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த வாய்ப்பை உடனடியாக ரத்துச் செய்யுமாறு வலியுறுத்தின.

இந்த அழைப்பின் மூலம் பிரித்தானியத் தமிழ் சமூகத்திற்கும், போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இழைக்கப்பட்ட அவமதிப்புக்காக ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் சங்கங்கள் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். யுத்தக் குற்றங்கள், இனப் படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு மேடை வழங்காத கொள்கையைப் பல்கலைக்கழகங்கள் பின்பற்ற வேண்டும்.

ராஜபக்ச குடும்பத்தினர் முன்னெடுத்த போரால் இடம்பெற்றதாகக் கூறப்படும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், பாலியல் வன்முறைகள் மற்றும் ஆள் கடத்தல்கள் தொடர்பான பொறுப்புக்கூறலிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தப்பிக்க முடியாது. அவர் ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல அந்த இனப்படுகொலை இயந்திரத்தின் வாரிசு மற்றும் பாதுகாவலர் எனவும் குற்றம்சாட்டின.

இவ்வாறான நிலையில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ்மக்களின் கடும் எதிர்ப்பால் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவிருந்த நாமல் ராஜபக்சவின் உரை ரத்துச் செய்யப்பட்டு, உரையாற்றுவோர் பட்டியலிலிருந்து அவரைப் பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நீக்கியது.

எனினும் ஒஸ்போர்ட் யூனியன் (Oxford Union), நாமல் ராஜபக்ச பங்கேற்கும் நிகழ்வின் நேரத்தை இன்று 23ஆம் திகதி , திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு மாற்றியுள்ளது.

தேம்ஸ் வேலி பொலிஸாரிடம் போராட்டம் நடத்த விடுக்கப்பட்ட கோரிக்கைகளைத் தொடர்ந்து, ஒஸ்போர்ட் யூனியன் இந்த நிகழ்வின் நேரத்தை இரகசியமாக மாற்றியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தாங்கள் திட்டமிட்டபடி இன்று திங்கட்கிழமை போராட்டத்தை முன்னெடுப்போம் என்று செயல்பாட்டாளர்கள் தற்போது பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *