பலதும் பத்தும்

இலங்கையில் மூளையைத் தூண்டி மனச்சோர்வை நீக்கும் அதிநவீன இயந்திரங்கள்

இலங்கையின் மனநல சிகிச்சை முறைகளை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கில், வட அமெரிக்க இலங்கை மருத்துவச் சங்கம் (SLMANA) இரண்டு அதிநவீன Transcranial Magnetic Stimulation இயந்திரங்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
இந்த இயந்திரங்களில் ஒன்று கொழும்பு தேசிய மருத்துவமனைக்கும், மற்றொன்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் நாட்டின் தெற்கு மற்றும் வடக்கு ஆகிய இரு பகுதிகளிலும் உள்ள நோயாளிகள் நவீன சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாண மருத்துவமனையில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பது, நீண்டகாலமாக விசேட மனநல சிகிச்சை வசதிகள் குறைவாக இருந்த வட மாகாண மக்களுக்கு ஒரு பெரிய ஆறுதலாக அமையும்.

Transcranial Magnetic Stimulation என்பது அறுவை சிகிச்சை அல்லாத (Non-invasive), அமெரிக்காவினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நவீன சிகிச்சை முறையாகும். இது காந்த அலைகளைப் பயன்படுத்தி மூளையின் குறிப்பிட்ட பகுதிகளைத் தூண்டி, மனச்சோர்வு (Depression) மற்றும் ஏனைய நரம்பியல் குறைபாடுகளைக் குணப்படுத்த உதவுகிறது.

வழக்கமான மருந்துகள் அல்லது உளவியல் ஆலோசனைகள் மூலம் குணமடையாத, “சிகிச்சைக்கு கட்டுப்படாத மனச்சோர்வு” (Treatment-resistant depression) கொண்ட நோயாளிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்தநிலையில் வட அமெரிக்க இலங்கை மருத்துவச் சங்கம் தலைவரும், மருத்துவருமான தாரிக் பெரேரா இது குறித்துக் கூறுகையில்,”இலங்கையில் மேம்பட்ட மனநல சிகிச்சைகளுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன.

மருந்துகளைத் தாண்டி மாற்று வழிகள் இல்லாத நோயாளிகளுக்கு இந்த இயந்திரங்கள் ஒரு சிறந்த தீர்வை வழங்கும்.” என குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் இந்த சிகிச்சை முறையை விசேட மருத்துவ நிபுணர் ஷெஹான் வில்லியம்ஸ் தலைமையிலான குழு முன்னெடுக்கவுள்ளது.

தற்போது 30ஆவது ஆண்டைக் கொண்டாடும் வட அமெரிக்க இலங்கை மருத்துவச் சங்கம், இந்த இயந்திரங்களை இயக்குவதற்கான விசேட பயிற்சிகளை உள்ளூர் மனநல மருத்துவர்களுக்கு வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

இன்னும் சில மாதங்களில் இந்த இயந்திரங்கள் முழுமையான பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *