ராஜபக்ஷ கூட்டணியை சிறையில் அடைப்பதே அநுர அரசின் ஒரே குறி – ரோஹித எம்.பி. கடும் சாடல்

தேசிய மக்கள் சக்தி அரசு நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விடுத்து, ராஜபக்ஷக்களைப் பற்றியும், அவர்களின் சகாக்கள் பற்றியுமே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பதுடன், அவர்களைச் சிறையில் அடைப்பதிலேயே குறியாக இருக்கின்றது என புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன சாடியுள்ளார்.
ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:-
அநுர அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து அரசியல் பழிவாங்கல்களிலேயே அதிக கவனம் செலுத்தி வருகின்றது. ஓர் அரசின் பணி அரசியல் எதிரிகளைச் சிறைக்கு அனுப்புவது அல்ல. இத்தகைய கீழ்த்தரமான அரசியல் கலாசாரம் நாட்டுக்கு எவ்வித நன்மையும் தராது. ராஜபக்ஷக்களைப் பழிவாங்குவதை ஒரு கொள்கையாக வைத்துக்கொண்டு இந்த அரசு இயங்கி வருகின்றது.
ஏன் இன்று மகா சங்கத்தினர், அரசு ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் இந்த அரசுக்கு எதிராக வீதியில் இறங்குகின்றார்கள் என்பதை அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும். குறுகிய காலத்துக்குள்ளேயே இவ்வளவு பெரிய மக்கள் அதிருப்தி ஏன் எழுந்துள்ளது? மக்களின் உண்மையான பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு செயற்படுவதை விடுத்து, பழிவாங்கல் அரசியலில் ஈடுபட்டால் அதன் விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும். என்று எச்சரிக்கை விடுத்தார்.
அநுர அரசு தமக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதாக இன்னமும் நம்பினால், துணிச்சலுடன் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும். மக்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தால் தேர்தலை அறிவியுங்கள். எதிர்க்கட்சியாகிய நாங்கள் எந்நேரமும் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கின்றோம்.
அதிகாரத்தில் இருப்பவர்கள் அது நிரந்தரமானது என்று எண்ணக் கூடாது, அதிகாரம் என்பது தற்காலிகமானது என்பதை வரலாறு உணர்த்தும். அதிகாரம் பறிபோகும் போது மக்கள் எங்களை எள்ளிநகையாடினார்கள், ஆனால் இப்போது ஆளும் தரப்பினரை மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றார்கள என்றும் அவர் அறிவுறுத்தினார்.
![]()