கவிதைகள்
உயிர்ப்புடன் வாழ வேணும்!…. கவிதை… ஜெயராமசர்மா

ஆழி சூழ் உலக மெங்கும்
அமைதியே நிலவ வேணும்
போரினை எண்ணும் எண்ணம்
பொசுங்கியே போக வேணும்
நீதியை எண்ணும் ஆட்சி
நிலைத்துமே நிற்க வேணும்
வேதனை செய்யும் மாந்தர்
விலகியே ஓட வேணும்
பாதகம் எண்ணும் மாந்தர்
பாதையை மாற்ற வேணும்
வேதனை உணர்ந்து மண்ணில்
பாதகம் தவிர்த்தல் வேணும்
ஊழ்வினை என்று சொல்லி
உழைப்பினைத் தடுக்க வேண்டாம்
உண்மையை உரமாய் கொண்டு
உயிர்ப்புடன் வாழ வேணும்
தாழ்மையே உயர்ந்த பண்பு
தலைக்கனம் தகர்க்க வேணும்
பூமியே போற்றும் வண்ணம்
வாழவே எண்ண வேணும் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()