இலங்கை

வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரத்தில் அநுர, பிமல், நளிந்த மோசடி செய்தவர்கள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க , ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் கடந்த காலங்களில் வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரத்தை பெற்று அவற்றை விற்பனை செய்து அந்த பணத்தை கட்சியின் நிதியத்தில் வைப்பிலிட்டுள்ளார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட எம்.பி.யான எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ‘வலுசக்தி துறையில் காணப்படும் பிரச்சினைகள்’ தொடர்பான சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

ஜே .வி.பி.யின் பெரும்பாலான உறுப்பினர்கள் கடந்த காலங்களில் வாகன இறக்குமதி பத்திரத்தை பெற்றுக்கொண்டு அவற்றை விற்பனை செய்து அந்த பணத்தை கட்சியின் நிதியத்துக்குச் செலுத்தினார்கள்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சபை முதல்வரான அமைச்சர் பிமல்ரத்நாயக்க மற்றும் ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் வாகன இறக்குமதி பத்திரத்தை பெற்றுக்கொண்டுள்ளார்கள். அதற்கான பத்திரங்களை சபைக்கு சமர்ப்பிக்கின்றேன்.

கடந்த காலங்களில் சகல சிறப்பு சலுகைகளையும் பெற்று விட்டு இன்று இவர்கள் தூய்மையானவர்களை போன்று பேசுகிறார்கள். நாங்கள் தூய்மையானவர்கள், ஊழல் மோசடியில்லை. உண்மையை மட்டும் பேசுபோம் என்று குறிப்பிட்டவர்களின் சுயரூபம் நாளாந்தம் அம்பலமாகின்றது

மக்கள் ஆணை இன்றும் உள்ளது. ஜனாதிபதி மீதான மக்களின் நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது என்று ஆளும் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். அவ்வாறாயின் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள். அப்போது மக்களின் அபிலாஷைசையை நன்கு அறிந்து கொள்ள முடியும் .

ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் தற்போது மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. மக்களுக்கு வழங்கிய போலியான வாக்குறுதிகள் மற்றும் பொய்கள் தற்போது வெளிப்பட்டுள்ளன . தேர்தலை நடத்துங்கள் யாருக்கு மக்கள் ஆதரவு உள்ளது என்பதைப் பார்ப்போம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *