இலங்கை

கோத்தபாயவுக்கு எதிரான வழக்கு; பதிலளிக்க மறுத்த நீதி அமைச்சர்; சபையில் கடும் தர்க்கம்

பாதுகாப்பு அமைச்சின் செயலராக இருந்தபோது கோத்தபாய ராஜபக்ச அரச நிதியை மோசடி செய்து, தனது தாயின் நினைவிடம் அமைத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு எதிராக, தொடுக்கப்பட்ட வழக்கு, அவர் ஜனாதிபதியானதும் வாபஸ் பெறப்பட்டது. தற்போது அந்த வழக்கை மீண்டும் தாக்கல் செய்ய முடியுமாக இருக்கின்றபோதும் ஏன் அரசாங்கம் கோத்தபாயவுக்கு எதிரான குறித்த வழக்கை மீண்டும் தாக்கல் செய்யவில்லையென அஜித் பி பெரேரா எம்.பி. எழுப்பிய கேள்விக்கு நீதி அமைச்சர் பதிலளிக்க மறுத்ததால், சபையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது.

பாராளுமன்றத்தில்  இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் மேலதிக வினாவை எழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. அஜித் பி பெரேரா , 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஊழல் ஒழிப்பு மூவரடங்கிய நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில், அரச நிதியில் தனது தாயின் நினைவிடம் அமைத்தார் என்பது தொடர்பில் பாதுகாப்பது அமைச்சின் செயலராக இருந்த கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணை இடம்பெற்றுக்கொண்டிருக்கையில், அவர் நோய்வாய்ப்பட்டு வெளிநாடு சென்றார். சில காலம் சென்றபின்னர் மீண்டும் நாட்டுக்கு வந்தார். அதன் பின்னர் நாட்டின் ஜனாதிபதியானார்.

அவர் ஜனாதிபதியான மறுதினமே, ஜனாதிபதிக்கு உரிய சிறப்புரிமைக்கமைய அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது. தற்போது கோத்தாபய ராஜபக்சவுக்கு அந்த சிறுப்புரிமை இல்லை. அதனால் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக ஊழல் ஒழிப்பு மூவரடங்கிய நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையில், பாதியளவு முடிவுக்கு வந்த நிலையில் வாபஸ்பெறப்பட்ட அந்த வழக்கை அரசாங்கம் மீண்டும் ஏன் தாக்கல் செய்யவில்லை ?

அதனால் அரச பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவந்த இந்த வழக்கை மீண்டும், தாக்கல் செய்வதற்கு அரசாங்கம் சட்டமா அதிபருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்குமா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார பதிலளிக்கையில், இந்த கேள்வி பிரதான கேள்வியுடன் தொடர்புபடாததால், இந்த கேள்விக்கு பதிலளிக்க முடியாது என்றார்.

இதனையடுத்து எழுந்த அஜித் பி பெரேரா எம்.பி. அப்படியானால் இவர்கள் தங்களுக்கு தேவையான வழக்குகளை தெரிவு செய்தே வழக்கு தொடுக்கின்றார்கள். வாபஸ் பெறப்பட்ட இவ்வாறான 42 வழக்குகள் இருக்கின்றன. அந்த வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்வதாக ஜனாதிபதி மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்யாமல் இருப்பது ஏன் அவர்களுக்கு அரசாங்கம் பயமா? அல்லது அவர்களுடன் ஏதாவது டீல் இருக்கிறதா என மீண்டும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு நீதி அமைச்சர் பதிலளிக்கையில், பிரதான கேள்விக்கு ஏற்புடைய மேலதிக கேள்விகளுக்கு பதலளிக்க தயார். ஆனால் சம்பந்தமில்லாத கேள்விக்கு பதிலளிக்க நான் கடமைப்படவில்லை. அதேநேரம் கோத்தபாய ராஜபக்ச அதிகாரத்தில் இருக்கும்போது கட்டிலுக்கு கீழ் ஒளிந்திருந்தவர்கள் தற்போது வீரர்கள்போல் பேசுகின்றனர் என்றார்.

இதன்போது பிரதான எதிர்க்கட்சிக்கும் ஆளும் தரப்புக்குமிடையில் சபையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது. இறுதியாக சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி சபையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து சபை நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுத்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *