கவிதைகள்

பக்குவம் பெற்றால் பரமனே தெரிவான்!… கவிதை… ஜெயராமசர்மா

நாணய மில்லா வாழ்வது முறையா
நம்பிக்கை யில்லா நடப்பது சரியா
ஏழ்மையை இழிவாய் கொள்வது தகுமா
எண்ணியே பார்ப்பது கண்ணிய மாகும்

அணைத்திட வருவார் அழிப்பது சரியா
அல்லலைக் கொடுப்பதில் ஆனந்தம் வருமா
அடுத்தவர் அழுதிட வைப்பது முறையா
அழுதிடும் கண்ணீர் அனைத்தையும் அழிக்கும்

பசித்திடும் வயிறை வதைத்திட வேண்டாம்
பட்டினிப் பேயை ஓட்டிட வேண்டும்
சுவைத்துமே சாப்பிட்டு சுகத்துடன் இருப்பார்
பசித்திடு வயிற்றைப் பார்த்திடல் வேண்டும்

இரக்கும் நிலையை இல்லா தொழிப்போம்
ஏற்பார் இல்லா நிலையைக் காண்போம்
உருக்கம் இரக்கம் உளத்தில் கொள்வோம்
தருக்கம் தவிர்த்து தயைவுட னிருப்போம்

பசித்தவர்க் களித்தால் படைத்தவன் ஏற்பான்
படைத்தவன் ஏற்றால் பாவமே அகலும்
பாவம் அகன்றால் பக்குவம் கிடைக்கும்
பக்குவம் பெற்றால் பரமனே தெரிவான் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *