அண்டனூர் சுரா கட்டுரைத் தொடர் – 06 …. மட்டைப்பந்து விளையாட்டில் ஏன் இட ஒதுக்கீடு வேண்டும்?… அண்டனூர் சுரா

உலகக் கோப்பை இருபது – இருபது மட்டைப் பந்து போட்டி தொடங்கிவிட்டது. உலக மட்டைப் பந்து விளையாட்டுப் பிரியர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான் இரு நாடுகளுக்கு இடையிலான போட்டி நடைபெறுமா? என்கிற கேள்விக்குப் பதில் கிடைத்து இரு நாடுகளுக்கு இடையேயான போட்டி உறுதியாகியுள்ளது.
அதேநேரம் உலகக் கோப்பை போட்டியில் வங்கதேசம் அணி இடம் பெறாமல் போனது ஏமாற்றம். அந்நாட்டின் இடத்தை ஸ்காட்லாந்து பிடித்துள்ளது. இந்த உலகக் கோப்பை போட்டியில் இத்தாலி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கனடா, அமெரிக்கா, ஓமன் நாட்டின் அணிகள் இடம் பெற்றுள்ளன.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய மட்டைப்பந்து அணி உலக மட்டைப்பந்து ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொண்டாட்ட மனநிலையினூடே நாம் இந்திய அணியில் யாரேனும் ஒருவர் தலித், பழங்குடி, வடகிழக்கு மாநிலங்களிலிருந்து ஒருவர் இடம் பெற்றுள்ளாரா என்கிற கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது.
மட்டைப்பந்து விளையாட்டில் இடஒதுக்கீடா? என்கிற கேள்வி விளையாட்டுத் துறையைத் தாண்டி சலனப்படும் கேள்வியாக இருந்துவருகிறது. இந்தியாவில்தான் இப்படி? தென்னாப்பிரிக்கா மட்டைப்பந்து தேர்வுக்குழுவில் கறுப்பின வீரர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்றதும் அங்கே இப்படியான சலனம் எழுந்தாலும் இக்கேள்வியில் நியாயம் இருப்பதாக பரிசீலனை செய்தார்கள். மிக நீண்ட காலம் இவ்விளையாட்டில் ஆப்பிரிக்க வெள்ளையர்கள் செலுத்திவந்த ஆதிக்கத்திற்கு மாற்றாக கறுப்பின ஆப்பிரிக்கர்களுக்கு இடம் கொடுத்தார்கள். இன்று தென்னாப்பிரிக்கா விளையாடும் அணியில் இடம் பெறும் கறுப்பின வீரர்களின் பங்களிப்பு ஓரளவு ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கிறது.
இந்தியாவில் மட்டைப்பந்து விளையாட்டில் இடஒதுக்கீடு கோரினால் ‘இது வன்முறை உணர்வுகளைத் தூண்டக்கூடியது’ ‘ஆபத்தானது’, ‘ஒரு விதமான அச்சுறுத்தல்’ , ‘முழுமையான பைத்தியக்காரத்தனம்’, ‘பிரிவினைவாதம்’ என்பதாக எதிர்வினை எழுகிறது.
சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பது கிளர்ச்சியையும் இனவாதத்தின் மீதான உணர்ச்சியையும் தூண்டுகிறது என்பதாகவே பலரும் பார்க்கிறார்கள். மேலும் இடஒதுக்கீடு என்பது பிச்சைக்குச் சமமானது என்பதாக நினைக்கிறார்கள். சிலர் இந்த யோசனையை மறுத்தும், ஆதரித்தும், எதிர்த்தும் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள்.
இட ஒதுக்கீடு என்பது பிச்சை இடுவதும் அல்ல, பெறுவதும் அல்ல. தொடர்ச்சியாக உரிமை மறுக்கப்பட்டவர்களுக்கான சமத்துவ உரிமை. சிலர் விளையாட்டுத் துறையில் கோரப்படும் இட ஒதுக்கீட்டை தகுதியற்ற ஒன்றைத் தேர்வு செய்யும் நிலையை நோக்கித் தள்ளும் என்று கவலைப்படுகிறார்கள். விளையாட்டில் இடஒதுக்கீடு என்பது வேலைவாய்ப்பு துறையில் இருப்பதைப் போன்று வெளிப்படையாக இருக்க வேண்டியதில்லை. அணிக்கு வீரர்களைத் தேர்வுசெய்கையில் தலித் வீரர்களையும் வடகிழக்கு மாநில வீரர்களையும் பழங்குடியினர்களையும் உள்ளடங்கி வீரர்களைத் தேர்வு செய்தால் போதுமானது. இது மட்டைப்பந்து விளையாட்டை வளர்த்தெடுக்கும் என்பதை விடவும் இந்தியர்களிடம் அவ்வப்போது எழும் வேற்றுமை உணர்வைத் தணித்து ஒற்றுமையை மேலும் பலப்படுத்தும்.
இந்தியாவில், 27 சதவீத மக்கள், தினம் தினம் தீண்டாமையை ஒரு நடைமுறை பழக்கமாகக் கடைப்பிடித்து பழகிக் கொள்வதாக இந்திய மனித வள மேம்பாட்டு கள ஆய்வு – 2 சுட்டிக்காட்டுகிறது. இன்றைக்கும் ஒரு தலித் மணமகன் திருமண நாளன்று குதிரையில் பவனி வர உயிர் பாதுகாப்பு கருதி தலையில் தலைக்கவசம் அணிந்து கொள்ளும் நிலையில்தான் சாதிய கொடுமை இருக்கிறது. அப்படியாக தலைக்கவசம் அணிந்துகொள்ளாத ஒரு மணமகன் உயர் சாதியினரின் கொடும் தாக்குதலுக்கு உள்ளாகி மரணமடைந்த சம்பவம் கேரளாவில் நடந்தேறியது. இத்தனைக்கும் கேரளா மற்ற மாநிலங்களை விடவும் மனித வள மேம்பாட்டில் முன்னேறிய மாநிலம்.
பல நூற்றாண்டு கால சாதியும் சாதியின் வழியிலான ஒடுக்குமுறையும் மொத்த
மக்கட்தொகையில் ஒரு பெரும் பகுதியினரைச் சமூக கட்டமைப்பின் கடைசி படியை நோக்கித் தள்ளியுள்ளது. தலித் மற்றும் பழங்குடிகள் சமூக – பொருளாதார குறிக்கோள் மட்டத்தில் தொடர்ந்து அடிமட்டத்தில் இருந்து வருகிறார்கள். சில துறைகளில் அவர்களுக்கு இடஒதுக்கீடு இருந்த போதிலும் அத்துறையிலும் அவர்களின் பொருளாதார முன்னேற்றம் பின்தங்கியதாகவே இருக்கிறது.
இதற்கிடையில் இந்திய அணி என்கிற பெயரில் தேர்வு செய்யப்படும் மட்டைப்பந்து விளையாட்டு ஆட்டக்காரர்களின் பட்டியலில் தலித், பழங்குடிகளுக்கு இடமில்லை என்பதாக தொடர்ந்து உருவாகி வரும் சூழல் ஆரோக்கியமானதில்லை. தலித் மற்றும் பழங்குடிகள் இந்திய மொத்த மக்கட் தொகையில் கால் பகுதியினராக இருக்கிறார்கள். ஆனால் அத்தகையவர்களுக்கு மட்டைப்பந்து விளையாட்டில் ஒதுக்கீடு இல்லாதது, அது குறித்து பேசாமலிருப்பது அதிர்ச்சி தரக்கூடிய ஒன்றைத் தவிர வேறென்ன?. இந்தியாவிலுள்ள தலித் மற்றும் பழங்குடிகளின் மக்கட்தொகை என்பது அமெரிக்காவின் மொத்த மக்கட் தொகைக்குச் சமம். ஆனால் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் என்பது பூஜ்ஜியம் அல்லது பூஜ்ஜியத்திற்கு மிக அருகில் என்கிற அளவில் இருக்கிறது.
அமெரிக்காவின் மொத்த மக்கட்தொகையில் ஆப்பிரிக்காவினர் 12 விழுக்காடு. இவர்கள் ஒரு காலத்தில் மிகக் கொடூரமான அடிமை இனத்தவர்களாக இருந்து இனவெறி தாக்குதலுக்கு உள்ளானவர்கள். 1947 ஆம் ஆண்டு வரைக்கும் பெரும் கூட்டிணைவு அடிப்பந்தாட்டம் ( MAJOR LEAGUE BASEBALL) மற்றும் அத்துடன் இணைந்த விளையாட்டுகளில் விளையாட முடியாத நிலையிலேயே ஆப்பிரிக்க – அமெரிக்க இனத்தவர்கள் இருந்தார்கள். ஆனால் இன்று அந்த விளையாட்டுகளில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் இவர்களே.
ஆனால் இந்தியாவில் மட்டைப்பந்து விளையாட்டில் உயர் சாதியினரின் பிரதிநிதித்துவம் 50 – 60 விழுக்காடு என்கிற அளவில் இருக்கிறது. இத்தனைக்கும் இந்திய சாதிய படிக்கட்டுகளில் இவர்கள் இந்திய மொத்த மக்கட்தொகையில் 6.4 விழுக்காடு மட்டுமே. விளையாட்டில் இடஓதுக்கீட்டு முறையை நாம் கேலி செய்துகொண்டு உயர் சாதி ஆட்டக்காரர்களுக்கு நிகராக மாற்று சாதியினரைத் தேர்வு செய்வதில் நாம் பின் தங்கிவிடுகிறோம். மகளிர் மட்டைப்பந்து அணியில் தலித் மற்றும் பழங்குடிகளின் பிரதிநிதித்துவம் மேலும் பின் தங்கிய நிலையில் இருப்பதாக கௌரவ் பவானி மற்றும் சுபாம் ஜெயின் ஆய்வுகள் கூறுகின்றன.

மட்டைப்பந்து விளையாட்டில் தலித் மற்றும் பழங்குடியினர் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது ஆரோக்கியமானதன்று. இதுவொரு தற்செயல் நிகழ்வு என்றும் இந்தியனாக விளையாடும் இவ்விளையாட்டில் யாரையும் சாதி அல்லது மதம் சார்ந்த ஒன்றைக் கொண்டு பார்க்கக்கூடாது என்று விலகிச் சென்றுவிட முடியாது. ஒர் இந்திய மட்டைப்பந்து அணி இந்தியர் என்கிற ஒற்றை அடையாளத்தின்கீழ் விளையாடுகிறது என்றால் இந்தியா எப்படி பல இனங்களின் அருங்காட்சியமாக இருக்கிறதோ, அப்படியாகத்தானே அந்த அணியின் தேர்வு முறையும் இருக்க வேண்டும்? அதற்கு மாறாக, ஒரு தேசிய அணியில் ஒரு சில பேரின சாதியினர் மட்டும் விளையாடுவதை இந்திய தேசிய அணியாக எப்படி ஏற்க முடியும்? மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் மட்டைப்பந்து அணி, வெளிப்படையான ஜனநாயகத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?
மட்டைப்பந்து விளையாட்டில் இட ஒதுக்கீடு வேண்டியதில்லை என்கிற கருத்தில் இருப்பவர்கள் மட்டைப்பந்து வீரர் ‘அனில் குருவ்’ பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். இவர் ஒரு காலத்தில் மும்பையின் ‘விவ் ரிச்சார்ட்ஸ்’ என அழைக்கப்பட்டவர். சச்சின் டெண்டுல்கர் இவரது அணித் தலைமையின்கீழ் விளையாடியிருக்கிறார். ஒரு காலத்திற்குப் பிறகு ‘மட்டைப்பந்து எங்களின் மதம், சச்சின் டெண்டுல்கர் அதன் கடவுள்’ என்று ரசிகர்களால் மட்டைப்பந்தும் சச்சினும் கொண்டாடப்பட காரணமாக இருந்தவர் இவரே. இவர் மும்பையில் சேரி குடியிருப்புகளில் வளர்ந்தவர் என்பது இந்தத் தலைமுறையினர் தெரிந்து வைத்திருக்க வாய்ப்பில்லை. இவர் ராமகாந்த் அச்ரேகர் என்பவரால் இந்திய அணிக்கான பயிற்சியாளராகத் தேர்வு செய்யப்பட்டவர். இவரது வாசகம் ஒன்று இன்றைக்கும் பொருந்தக்கூடியது. “பின்னணிதான் எல்லாவற்றிருக்கும் காரணமாக இருக்கிறது.” இந்திய அணியில் தலித் மற்றும் பழங்குடியினர் இடம் பெறாமல் போக இதுவே காரணம்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜான் மாகுயர், உள்நாட்டு அணியில் விளையாடிய மட்டை பந்தாட்டக்காரர். இவர் உள்நாட்டுப் போட்டியைத் தாண்டி தேசிய மற்றும் வெளிநாட்டு சுற்றுலா போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்பட்டதில்லை. அவர் ஒரு முறை நேர்க்காணலில் சொன்னார். “ஆஸ்திரேலியா மட்டைப்பந்து விளையாட்டு ரசிகர்கள் இந்த விளையாட்டை பந்தயமாக பார்க்குமளவிற்கு இன வெறியர்கள் அல்ல. அவர்களின் தேர்வில் சிறந்த விளையாட்டு வீரர்களில் பலர் கறுப்பின ஆஸ்திரேலியர்கள் இருக்கிறார்கள்.” அவரது இந்தக் கருத்து பிற்காலத்தில் ஆஸ்திரேலிய அணியில் ஒரு பழங்குடியினரை இடம்பெற வைத்தது.
உஸ்மான் கவாஜா இந்திய பாகிஸ்தான் எல்லையொட்டிப் பிறந்து, ஆஸ்திரேலியாவில் வாழ்ந்த மிகச்சிறந்த மட்டைப் பந்தாட்டக்காரர். அவர் ஒரு முறை சொன்னார். “நான் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடுபவன். ஆனால் என்னை வெளிநாட்டு அணியுடன் மோதும் போட்டிகளுக்குத் தேர்வு செய்ததில்லை. காரணம் நான் கறுப்பினத்தவன், இந்திய பாகிஸ்தானி.”
இந்திய மட்டைப்பந்து ஆட்டக்காரர்களுக்கான தேர்வில் நாம் எதிர்ப்பார்ப்பது ஒன்றுதான். இந்த விளையாட்டில் பன்முகத்தன்மையும் பிரதிநிதித்துவமும் அதிகரிக்கப்பட வேண்டும். இந்திய மட்டைப்பந்து கட்டுப்பாட்டு வாரியம் இடஒதுக்கீட்டின்கீழ் வீரர்களை தேர்வுசெய்வதில் விருப்பம் காட்டுவதாக இல்லை. சாதிய பிரதிநிதித்துவத்திற்கு ஊக்கமளிப்பது மட்டுமன்று, பிராந்திய பிரதிநிதித்துவத்தை விரிவுபடுத்துவதற்கு அவ்வாரியம் தயக்கம் காட்டுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு மட்டைப்பந்து வாரியத்தின் ஆலோசகரில் ஒருவர், உச்சநீதி மன்றத்தில் இவ்வாறு வாதிட்டார். “ரஞ்சி கோப்பைக்காக விளையாடும் இந்திய உள்நாட்டு அணியில் பதினொரு பேர்களில் ஒருவர் கூட வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை.”
ஆஸ்திரேலியாவில் மட்டைப்பந்து விளையாட்டில் பழங்குடியினருக்கென்று தனியாக ஒரு வாரியமும் பட்டியலும் உள்ளது.

2011 – 12 ஆம் ஆண்டுகளில் உள்நாட்டு மட்டைப்பந்து பழங்குடி வீரர்களின் எண்ணிக்கை 8000 அளவிற்கு இருந்து 2016 – 17 ஆம் ஆண்டில் 54,000 என்கிற எண்ணிக்கையை எட்டியது. தற்போது இந்த எண்ணிக்கை இன்னும்கூட உயர்ந்திருக்கும்.
இந்தியா, விளையாட்டுத் துறை சார்ந்த தேர்வு முறைகளில் உள்ளடங்கிய மேலோட்டு இயக்கு முறையைப் பின்பற்றுவது அவசியம். சாதிகள் கட்டமைப்பும், பிரித்துணர்வு பாகுபாடும் கொண்ட மிகப்பெரிய தேசத்தில் சமூகத்திற்கான பிரதிநிதித்துவம் ஒதுக்கப்பட வேண்டும் என்பதை மட்டைப்பந்து கட்டுப்பாட்டு வாரியம் ஏற்க வேண்டும். சாதிகளை முற்றிலும் அழித்தொழிப்பிற்கான விவாதம், முன்னெடுப்பு நடவடிக்கைகளில் இந்திய அரசு ஈடுபட்டிருந்தால் மட்டைப்பந்து உட்பட எந்த விளையாட்டிலும் ஒதுக்கீடு கோரும் கோரிக்கை எழுந்திருக்காது.
சாதியும் அதன் கட்டமைப்பும் முன்னே விடவும் பலமாக வேர்விட்டு வரும் இக்காலத்தில் தலித், பழங்குடி, வடகிழக்கு மாநில மட்டைப்பந்து வீரர்களைப் பிரதிநிதித்துவ அடிப்படையில் அங்கீகரிப்பதற்கான நேரம் வந்திருக்கிறது என்பதை இந்திய மட்டைப்பந்து கட்டுப்பாட்டு வாரியம் உணர்வதோடு இவ்விளையாட்டின் ரசிகர்கள் உணர வேண்டும்.
![]()
