இலங்கை

மாகாண சபைத் தேர்தலை உடனே நடத்துங்கள்: லக்ஷ்மன் யாப்பா சவால்! – “தேர்தலைக் கண்டு அஞ்சமாட்டோம்

இலங்கையில் நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை தற்போதைய அரசு உடனடியாக நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும், முன்னாள் அமைச்சருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன வலியுறுத்தியுள்ளார். இதற்குப் பதிலளித்துள்ள அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, தேர்தல் முறைமையிலுள்ள சிக்கல்கள் தீர்க்கப்பட்டதும் உரிய முறையில் தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டார்:

தேர்தல்களை ஒத்திவைப்பது ஜனநாயகத்திற்கு அழகல்ல. அரசு தன்னிடம் மக்கள் செல்வாக்கு இருப்பதாக நம்பினால், காலங்கடத்தாமல் உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும்.

புதிய அரசு பதவியேற்றபோது இருந்த எதிர்பார்ப்புகள் தற்போது மக்கள் மத்தியில் அதிருப்தியாக மாறியுள்ளன.

மக்கள் ஆணை யாருக்கு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள இந்தத் தேர்தல் ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமையும்.

லக்ஷ்மன் யாப்பாவின் சவாலுக்குப் பதிலடி கொடுத்து உரையாற்றிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ:

மாகாண சபைத் தேர்தலைக் கண்டு அரசு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. ஆனால், கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் மக்கள் ஏற்கனவே தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர்.

தேர்தல் முறைமைகளில் உள்ள சட்டச் சிக்கல்களைத் தீர்த்து, முறையான மற்றும் நேர்மையான தேர்தலை நடத்தவே அரசு திட்டமிட்டுள்ளது. இதில் எவ்வித அரசியல் காலதாமதமும் இல்லை.

கடந்த கால ஊழல் மற்றும் மோசடிகள் மீது அரசு எடுத்து வரும் கடும் நடவடிக்கைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே லக்ஷ்மன் யாப்பா போன்றோர் தேர்தல் கோஷத்தை எழுப்புகின்றனர்.

“நாட்டைப் பொருளாதார ரீதியாகவும், ஊழலற்ற நிர்வாக ரீதியாகவும் கட்டியெழுப்புவதே எமது முதன்மை நோக்கம். அதற்குக் குந்தகம் விளைவிக்கும் எவ்வித அழுத்தங்களுக்கும் அரசு பணியாது,” என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *