இலங்கை

காணிக்குள் கால் வைத்தால் சுடுவோமென மிரட்டுகிறார்கள்! ஜனாதிபதியிடம் நீதி கோரும் வெற்றிலைக்கேணி விவசாயிகள்

யாழ்ப்பாணம் – வடமராட்சிக் கிழக்கு வெற்றிலைக்கேணி கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விவசாயிகள் விவசாயம் செய்துவந்த பல ஏக்கர் அரச காணி தனி நபர் ஒருவரால் அடாத்தாக சுவீகரிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது

அத்தோடு குறித்த பகுதிக்கு செல்ல முற்பட்டால் இடியன் துவக்கால் சுடுவோம் என்றும், பொலிசாரை வைத்து கைது செய்வோம் என மிரட்டுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விவசாயிகள்,

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி J/ 432 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மக்கள்  விவசாயம் செய்துவந்த நிலையில் அப்பகுதியில் காணப்பட்ட பல ஏக்கர் கணக்கான அரச காணி தனி நபர் ஒருவரால் சுவீகரிக்கப்பட்டுள்ளது.

அத்துமீறி அடைக்கப்பட்ட குறித்த காணி அரசகாணி எனவும் நிலைமை தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிராம சேவையாளருக்கு பிரதேச செயலர் உத்தரவிட்டுள்ள நிலையில் இதுவரை உரிய அதிகாரிகளால் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையென விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆரம்ப காலத்தில் இருந்தே பயன்தரும் மரங்களை நட்டு காலாகாலம் நாம் விவசாயம் செய்துவந்த பகுதியை தனி நபர் ஒருவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி சுவீகரித்துள்ளார்

குறித்த பகுதிக்கு நாம் செல்ல முற்பட்டால் இடியன் துவக்கால் சுடுவோம் என்றும்,பொலிசாரை வைத்து கைது செய்வோம் என மிரட்டுவதுடன்,

காலா காலம் நாம் பாதுகாத்து வந்த மணல் மற்றும் காடுகள் இரவோடு இரவாக அழிக்கப்பட்டு சட்டவிரோதமாக ஏனைய இடங்களுக்கு கடத்துவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறித்த காணி அரச காணியென பிரதேச செயலர் அறிவித்தும் இதுவரை சம்மந்தப்பட்டவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமைக்கான காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பியதுடன்,

தமது நிலத்தை மீட்டு தம்மிடமே ஒப்படைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *