புதிய அரசியலமைப்பு ஏக்கிய இராச்சிய யாப்பாகவே இருக்கும்

புதிய அரசியலமைப்பொன்று 2029ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும். அவ்வாறு நிறைவேற்றப்படும் அந்த அரசியலமைப்பு தமிழ் மக்களுடைய அரசியல் அதிகாரங்களை முற்று முழுதாகக் கைவிடுவதற்குரிய அரசியலமைப்பாக இருக்கும்.
நாங்கள் கவனமாக இருந்தாலும் அது ‘ஏக்கிய இராச்சிய’ அரசியலமைப்பாகவே இருக்கும். ஏக்கிய இராச்சிய அரசியலமைப்பு தமிழ் மக்களின் ஆதரவோடு நிறைவேற்றப்படுவதாக இருந்தால் தமிழ் மக்கள் தமக்கு இனப்பிரச்சினை இருக்கிறது என்பதை உச்சரிப்பதைக் கூட சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளாது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசிய பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் ஏற்பாட்டில் தமிழ் தேசியப் பேரவை, தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளுக்கும் இடையில் இடம்பெறவிருக்கும் சந்திப்பொன்றை முன்னெடுக்க முயற்சிகள் இடம்பெற்றதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. “தமிழ் தேசியப் பேரவையின் அழைப்பின் பேரில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 15ஆம் திகதி வடக்கு கிழக்கை மையப்படுத்திய சிவில் சமூக அமைப்புகளையும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கட்சிகளுக்கும் இடையில் இனப் பிரச்சினை தீர்வு தொடர்பான புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்காக பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்த முயற்சி எடுத்திருந்தோம்.
அதன் காரணமாக சுவிஸ் அரசாங்கத்தால் ஏற்கனவே எதிர்வரும் 19 ஆம் திகதி ஒழுங்கு செய்யப்பட்டுள்ள தமிழ் தேசியப் பேரவைக்கும் தமிழரசுக் கட்சிக்கும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் இடையில் இடம்பெற்றிருந்த பேச்சுவார்த்தைக்கான முயற்சி சுவிஸ் அரசாங்கத்துக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. இது முற்றிலும் தவறான கருத்தாகும். இந்த விடயம் தொடர்பில் சுவிஸ் தூதரகத்தை நேரடியாக தொடர்புகொண்டு 19ஆம் திகதி இடம்பெறவிருந்த கூட்டம் கைவிடப்பட்டிருக்கிறதா? தமிழ் தேசியப் பேரவை 15ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ள கூட்டம் காரணமாக சுவிஸ் தூதரகம் அதிருப்தியடைந்து அந்த முயற்சியை கைவிட்டதா? என்று வினவினேன். அதனை சுவிஸ் தூதரகம் முற்று முழுவதாக மறுத்தது. தாங்கள் அந்த முயற்சியை கைவிடவில்லை.
தமிழ்த் தேசிய பேரவைக்கும் தமிழரசுக் கட்சிக்கும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் சிலவேளை அதுவொரு பிரச்சினையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்ததே தவிர, தங்களுக்கு அப்படியான செய்தி வெளிவந்ததில் தமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று தூதரகம் கூறியிருந்தது. 19ஆம் திகதி இடம்பெறவிருந்த கூட்டத்தை உறுதிப்படுத்த முடியாத நிலையில் இருப்பதற்கான காரணம், இந்த சந்திப்பை தமிழரசுக் கட்சியே கோரியிருந்த நிலையில் அதே தரப்பு, தமிழ்த் தேசியப் பேரவை 15ஆம் திகதி இதேபோன்றதொரு கலந்துரையாடலை ஒழுங்கு செய்திருப்பதாகவும் தங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் ஒரே விடயத்துக்கு இரு கலந்துரையாடல்கள் அவசியமில்லை என்பதால் இதில் தங்களுக்கு குழப்பமாக இருப்பதாகவும் 19ஆம் திகதி இடம்பெறவிருக்கும் கலந்துரையாடலில் கலந்துகொள்வதில் தங்களுக்கு உறுதிப்படுத்த முடியாது என்று கூறியிருந்ததாக தூதரகம் தெரிவித்திருந்தது.
அரசியலமைப்பு விடயத்தை பொது புள்ளியில் கையாள வேண்டும் என்று 2024 ஆம் ஆண்டிலிருந்து கூறி வருகிறோம். ஏனைய தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது போன்று சிவில் அமைப்புகளுடனும் இதுதொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம். அதிலொரு முயற்சியாகவே சிவில் அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம். அதிலொரு விளைவாகவே இந்த பேச்சுவார்த்தையை பிற்போடக் கூடாது என்பதற்காக பெப்ரவரி மாதத்தின் ஆரம்பப் பகுதியில் அல்லது இரண்டாவது கிழமையில் கொள்கையளவில் இணங்கியிருந்தோம். ஒரு மாதத்துக்கு முன்பே இந்தத் தீர்மானங்களை எடுத்திருந்தோம். 14 அல்லது 15 ஆம் திகதிகளில் இந்தச் சந்திப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த பின்னணியிலேயே சுவிஸ் தூதரகம் தமிழரசுக் கட்சியினர் பேச்சுவார்த்தையை நடத்த விரும்புகிறார்கள் எங்களையும் இணைந்து கொள்ளுமாறு வினவியிருந்தார்கள்.
இந்த நிலையிலேயே தமிழரசுக் கட்சிக்கும் ஜனநாயக தேசிய முன்னணிக்கும் இடையில் பேச்சுவார்த்தைக்கான அழைப்பிதழை விடுக்கப்போவதாக சிவில் அமைப்புகளுடன் கலந்துரையாடி தீர்மானத்துக்கு வந்திருந்தோம். எங்களைப் பொருத்தவரையில், 19ஆம் திகதி சந்திப்புக்கு நாங்கள் எந்த விதத்திலும் இடையூறாக இருக்கவில்லை. 15ஆம் திகதி சந்திப்பை நடத்துவதற்கு உறுதிப்பாடுகள் ஏற்பட்டிருந்த நிலையில் தான் அவசர அவசரமாக இந்த சந்திப்பை நிறுத்துவதற்காக 19ஆம் திகதி இவர்களை சந்திக்க தயார் என்று கூறப்பட்டது.
திட்டமிட்டு இந்த இரு கூட்டங்களையும் சிக்கலுக்குள்ளாக்கி பொய்யான கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு தமிழரசுக் கட்சி செய்த சதியாகவே நாங்கள் கருதுகிறோம். 19ஆம் திகதி கூட்டம் அவசியமில்லை என்றால் 15ஆம் திகதி கூட்டத்துக்கு தமிழரசுக் கட்சி கட்டாயம் வரவேண்டும். 2029ஆம் ஆண்டுக்குள் புதிய அரசியலமைப்பொன்று நிறைவேற்றப்படும். அவ்வாறு நிறைவேற்றப்படும் அரசியலமைப்பு தமிழ் மக்களுடைய அரசியல் அதிகாரங்களை முற்று முழுதாக கைவிடுவதற்குரிய அரசியலமைப்பாக இருக்கும். ஏக்கிய இராச்சிய அரசியலமைப்பு தமிழ் மக்களுடைய ஆதரவோடு நிறைவேற்றப்படுவதாக இருந்தால் தமிழ் மக்கள் தமக்கு இனப்பிரச்சினை இருக்கிறது என்பதை உச்சரிப்பதைக் கூட சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளாது’’ என்றார்.
![]()