பலதும் பத்தும்

யாழில் ஒன்பது மாதங்களாக அதிபர் இன்றி இயங்கும் பாடசாலை

யாழ். வடமராட்சி கிழக்கு, தாளையடி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை கடந்த ஒன்பது மாதங்களாக அதிபர் இன்றி இயங்கி வருவதனால், பாடசாலையின் கல்வி சார் மற்றும் நிர்வாகச் செயற்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இப்பாடசாலையில் நீண்டகாலமாக அதிபராகக் கடமையாற்றியவர் பணி ஓய்வு பெற்றுச் சென்றதைத் தொடர்ந்து, அந்த இடத்திற்குப் புதிய அதிபர் எவரும் இதுவரை நியமிக்கப்படவில்லை.

இதனால் கடந்த ஒன்பது மாதங்களாக ஆசிரியர்களும் மாணவர்களும் வழிநடத்தல் இன்றிப் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

புதிய அதிபரை நியமிக்கக் கோரி, தாளையடி புனித அந்தோனியார் ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை ஜஸ்ரின், வடமாகாண ஆளுநரை நேரில் சந்தித்து இது குறித்த கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

இருப்பினும், இதுவரை கல்வித் திணைக்கள அதிகாரிகள் தரப்பில் இருந்து எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பின்தங்கிய பிரதேசத்தில் அமைந்துள்ள இப்பாடசாலை மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, நிலவும் அதிபர் வெற்றிடத்தை உடனடியாக நிரப்புமாறு உரிய அதிகாரிகளிடம் மக்கள் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *