வழங்கிய வாக்குறுதிகளை அரசு மீறியே வருகிறது; ஐரோப்பிய ஒன்றியத்திடம் தமிழ் அரசுக் கட்சி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறிக்கொண்டு வருகிறது என ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவிடம் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய தூதுக் குழுவினரை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் கொழும்பில் நேற்று புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.
ஐரோப்பிய வெளிவிவகாரச் சேவையின் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான பதில் முகாமைத்துவப் பணிப்பாளரும், ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டுக் குழுவின் இணைத் தலைவருமான
பாவ்லா பம்பலோனி, ஐரோப்பிய ஒன்றியத் தூதுவரும் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவின் தலைவருமான கார்மென் மோரேனோ ஆகியோர் இந்தச் சந்திப்பில் ஈடுபட்டனர்.
இந்தச் சந்திப்பு தொடர்பில் தினக்குரலுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுமந்திரன் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்காமல் வைத்திருப்பதுக்கான மூலோபாயமே, அதை விட மோசமான சட்டங்களை கொண்டுவருதற்காகவேஎன்பதை சுட்டிக்காட்டினோம்.
இருக்கிற சட்டத்தை நீக்குவது என வாக்குறுதியை கொடுத்துவிட்டு அதைவிட மோசமான சட்டத்தை கொண்டு வருவதன் மூலம் அவர்களுடைய நோக்கம் அதைவிட மோசமான வரைவை கொண்டு வரும் போது அதை தாக்குவோம்.
பின்னர் அதை நிறுத்துவதாக சொல்வார்கள். ஆனால் தொடர்ந்தும் பயங்கரவாத தடைச் சட்டம் இருக்கும். அதற்காகவே வேண்டும் என்றே மோசமான சட்ட வரைவுகளைக் கொண்டு வருகிறார்கள் என்பதை சுட்டி காட்டினோம்.
மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது . அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை மீறி வருகின்றது என்பதை தெரிவித்தோம்.
நல்லிணக்க செயன் முறைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்கள். அது ஒழுங்காக நடைபெறவில்லை என்றும்
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் ஒழுங்காக இயங்கவில்லை என்ற விடயங்களை சுட்டிக் காட்டினோம் – என்றார்.
![]()