திருமலை புத்தர் சிலை 4 பிக்குகள் உள்ளிட்ட 10 பேருக்கும் பிணை!; கடும் நிபந்தனைகள், மீறினால் பிணை இரத்து

திருகோணமலை கடற்கரை சட்டவிரோத கட்டுமானம் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர்சிலை விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 4 பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேருக்கும் பல நிபந்தனையின்கீழ் திருகோணமலை மேல் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை பிணை வழங்கியது.
இந்தச் சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 10 பேரும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் , பத்தாயிரம் ரூபா பெறுமதியான காசுப்பிணையிலும் பல முக்கிய நிபந்தனையின் கீழும் மேல் நீதிமன்றால் நேற்று பிணை வழங்கி விடுதலை செய்யப்பட்டதுடன் வழக்கானது நீதவான் நீதிமன்றில் மீண்டும் எதிர்வரும் 17.06.2026 அன்று விசாரணைக்காக திகதியிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கானது நேற்று புதன்கிழமை காலை திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது மேல் நீதிமன்றில் இடம்பெற இருந்த வழக்கிற்காக மாலை வரை ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர் மேல் நீதிமன்றில் குறித்த வழக்கானது விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மேல் நீதிமன்றினால் குறித்த நபர்கள் பல நிபந்தனையின்கீழ் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
மீண்டும் வழக்கானது மாலையளவில் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது குறித்த வழக்கு தொடர்பில் எதிரிகளாக குறிப்பிட்டு வழக்கில் முன்னிலையாகாத 4 பேரையும் எதிர்வரும் வழக்குத் தவணையின்போது முன்னிலையாகுமாறும், சர்ச்சைக்குரிய புத்தர்சிலையை கொண்டு வந்த வாகனத்தை துறைமுக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேல் நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி, மேற்படி வழக்கு தொடர்பில் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் நடைபெறும் அனைத்து வழக்குத் தவணைகளுக்கும் எதிராளிகள் அனைவரும் தவறாது சமூகமளிக்க வேண்டும், வழக்கு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் ,வழக்கு முழுமையாக முடிவுறுத்தப்படும்வரை வழக்கு தொடர்பாக எங்கும் விமர்சிக்கக்கூடாது, இந்த வழக்கின் வழக்காளி மற்றும் சாட்சிகள் எவரையும் அச்சுறுத்தல் மற்றும் இடையூறுகளை ஏற்படுத்தக்கூடாது, இந்த காலப்பகுதியில் பிரதேசத்தில் எவ்விதமான பொது அமைதிக்கோ, சமய,சமூக சகவாழ்வுக்கோ இடையூறு எதனையும் ஏற்படுத்தக்கூடாது.
இவற்றில் ஒன்றை அல்லது அனைத்தையும் மீறினால் வழங்கப்பட்டுள்ள பிணை இரத்து செய்யப்பட்டு மீண்டும் விளக்கமறியல் உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் குறித்த நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
![]()