டுபாயிலும் பணத்தை பதுக்கியுள்ள ராஜபக்ஷக்கள்

உகண்டாவில் மட்டுமன்றி டுபாயிலும் ராஜபக்ஷக்கள் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். அது தொடர்பில் விசாரணகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ராஜபக்ஷக்களுக்கு எதிராக கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பில் பல்வேறு விசாரணைகள் நடக்கின்றன. சீஐடி, இலஞ்ச ஊழல் மோசடி ஆணைக்குழு ஆகியவற்றுக்கு பலர் அழைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். ஏற்கனவே சிலருக்கு எதிராக வழக்குககள் தொடரப்பட்டுள்ளன. இவ்வாறாக பல நடவடிக்கைகள் நடக்கின்றன. நாங்கள் குற்றங்கள் நிறைந்த இராச்சியத்தையே பெற்றோம். இந்நிலையில் உகண்டாவுக்கு பின்னால் மட்டும் போகாமல் டுபாய் உள்ளிட்ட நாடுகளில் உள்ள பணம் தொடர்பிலும் விசாரணைகள் நடக்கின்றன.
எவ்வாறாயினும் டுபாயில் உள்ள பணத்தை கொண்டுவரகின்றீர்களா? என்று நாமல் ராஜபக்ஷ எப்போதாவது கூறியதாக தெரியவில்லை. இது தொடர்பான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகின்றது. கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்புகளை பேணிய அரசியல்வாதிகள் ஒவ்வொருவராக சீஐடிக்கு அழைக்கப்படுகின்றனர். இதன்போதான வாக்குமூலங்களுக்கு அமைய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
![]()