நிகழ்வுகள்

மகா சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீச்சரம் நோக்கிய பாத யாத்திரை செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பம்

மகா சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு உலக சைவத் திருச்சபை, திருக்கேதீச்சரம் திருத்தலப் பாதயாத்திரிகர்கள் சேவா சங்கம் இணைந்து நடாத்தும் வரலாற்றுப் புகழ்மிக்க திருக்கேதீச்சரம் ஆலயம் நோக்கிய சிவலிங்கப் பெருமானுடன் கூடிய அலங்கரிக்கப்பட்ட ஊர்தியைத் தாங்கிய சிவனடியார்களின் பாதயாத்திரை நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை 9.15 மணியளவில் தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பமானது.

பூசை வழிபாடுகளில் பாத யாத்திரைக்கு எடுத்துச் செல்லும் வேல், சூலம் என்பன வைத்து வழிபாடுகள் நடாத்தப்பட்டது. தொடர்ந்து உலக சைவத்திருச் சபையின் தலைவர் சைவசித்தாந்த பண்டிதர் சிவஸ்ரீ.கதிர்குமாரசுவாமி சுமூகலிங்கம் சிவாச்சாரியார் கலந்து கொண்டு பாதயாத்திரையை ஆரம்பித்து வைத்தார்.

சந்நிதியான் ஆச்சிரமத்தை யாத்திரைக் குழு அடைந்ததைத் தொடர்ந்து அங்கு வழிபாடுகள் இடம்பெற்றது. அங்கு சந்நிதியான் ஆச்சிரம முதல்வரிடம் ஆசிகள் பெற்றுக் காலை ஆகாரத்தை நிறைவு செய்த பின்னர் யாத்திரைக் குழுவினர் தமது யாத்திரையைத் தொடர்ந்து வருகின்றனர்.

பாதயாத்திரைக் குழுவினர் நேற்று முன்தினம் இரவு நல்லூரிலுள்ள மண்டபமொன்றில் தங்கியிருந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து தமது பாதயாத்திரையை மீண்டும் தொடர்ந்தனர்.

யாத்திரைக் குழுவினர் தெய்வீகப் பஜனை வழிபாடுகளுடன் பல்வேறு ஆலயங்களைத் தரிசித்தவாறு மகா சிவராத்திரி நன்னாளான எதிர்வரும்-15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை திருக்கேதீச்சரம் ஆலயத்தைச் சென்றடைந்து வழிபாடுகளிலும் ஈடுபடவுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *