மருதனார்மடம் சந்தைக்கு துப்பாக்கிகளுடன் சென்ற மர்ம நபரால் பெரும் பரபரப்பு!; போலித் துப்பாக்கி என விசாரணையில் தகவல்

யாழ். மருதனார்மடம் சந்தைக்கு துப்பாக்கிகளுடன் வந்த மர்மநபர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அவர் பை ஒன்றினுள் ரி- 56 ரக துப்பாக்கியை வைத்துக்கொண்டு மருதனார்மடம் சந்தைக்கு நேற்று செவ்வாய் காலை 6.03 மணிக்கு வந்துள்ளார்.
இதன்போது அவரது இடுப்புக்குள்ளும் கைத்துப்பாக்கி போன்ற ஒன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு வருகை தந்தவர், ஒருவரது பெயரை விசாரித்துவிட்டு, வட்டிக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என அங்கு விசாரித்ததாக கூறப்படுகிறது.
கையில் கொண்டு வந்த பணிஸை சாப்பிட்டுக்கொண்டு, பின்னர் அங்கு பச்சை மிளகாயை வாங்கிக்கொண்டு சென்ற காட்சி அங்கிருந்த சிசிரிவி கருவியில் பதிவாகியுள்ளது.
இவ்வாறு வந்தவர் கைகளுக்கு கறுப்புநிற கையுறைகளையும், தலையில் தலைக் கவசத்தையும் அணிந்திருந்ததை சிசிரிவி காட்சிகளில் அவதானிக்க முடிந்துள்ளது.
அவர் அங்கிருந்து சென்றதும், சந்தையில் இருந்தவர்கள் சுன்னாகம் பொலிஸாருக்கு இது குறித்து தகவல் வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில் சுன்னாகம் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று சந்தையிலிருந்த கண்காணிப்புக் கமராக்களின் உதவியுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, மேற்படி நபர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் 0718591331 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்குமாறு பொலிஸாரால் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்தநிலையில் விசாரணைகளின் அடிப்படையில் அவரை அடையாளம் கண்ட பொலிஸார், அவரை கைது செய்துள்ளதுடன், அவர் சந்தைக்கு கொண்டு சென்ற துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது அது போலித் துப்பாக்கி என்பதும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
![]()