கவிதைகள்

நல்லவர் நல்லதைச் செய்திட மறவார்!… கவிதை…. ஜெயராமசர்மா

காய்த்த மரங்கள் கல்லெறி வாங்கும்
கருத்துகள் பகர்வார் கண்டிக்கப் படுவார்
ஆர்த்த பிறவி அலை கடலாகும்
அமைதி பேணினால் அனைத்தும் சிறக்கும்

எழுதினால் எதிர்த்து எரித்திட வருவார்
இயற்றிய கவிகளைக் கிழித்திட வருவார்
மேடையில் பேசினால் கல்லினை எறிவார்
மோதியே மிதிப்பார் முகத்தினில் உமிழ்வார்

சாதிகள் சொல்வார் சமத்துவம் அறியார்
சங்கடம் கொடுப்பதில் சந்தோசம் காண்பார்
சமயம் இகழ்வார் சத்தியம் உணரார்
சாந்தியைத் தொலைத்துச் சன்னத மாடுவார்

பெரியவர் பேணார் பெருமையை உணரார்
அரியவை அனைத்தும் அருவருப் பென்பார்
தெரிவிலே சண்டையைத் தேடியே போவார்
திருத்திட நினைப்பார் முகத்தினை உடைப்பார்

எப்பவும் இப்படிப் பலபே ரிருப்பார்
தப்பிதம் காண்பதில் தலைமையில் நிற்பார்
சரியாய் செய்வார் தவறைத் தவிர்ப்பார்
தலைவரா யென்றுமே நிலையாய் நிற்பார்

நல்லவர்க் கென்றும் தொல்லைகள் பெருகும்
பெருகிடும் தொல்லைகள் தூரவே நிற்கும்
தூரவே நிற்கும் தொல்லைகள் பார்த்து
நல்லவர் நல்லதைச் செய்திட மறவார் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *