பலதும் பத்தும்

சிங்கப்பூரில் புறாவிற்கு உணவு அளித்த இந்தியப் பெண்ணுக்கு 2 லட்சம் அபராதம்!

இந்தியாவில் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவு அளிப்பது புண்ணிய காரியமாகக் கருதப்படுகிறது.ஆனால், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இத்தகைய செயல்கள் உங்களைச் சிக்கலில் தள்ளும்.

அதற்கு உதாரணமாக சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 53 வயது பெண்மணி ஒருவர், பொது இடங்களில் புறாக்களுக்குத் தொடர்ந்து உணவு அளித்ததற்காக சிங்கப்பூர் நீதிமன்றத்தால் 3,000 சிங்கப்பூர் டாலர் (சுமார் ₹2 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளார்.

அந்நாட்டின் ‘வனவிலங்குச் சட்டத்தின்’ (Wildlife Act) கீழ் இந்தப் பெண் மீது குற்றம் சாட்டப்பட்டது.

சிங்கப்பூரில் புறாக்களுக்கு உணவு அளிப்பது என்பது வெறும் விலங்குப் பாசம் சார்ந்த விஷயம் அல்ல அது பொதுச்சுகாதாரத்தைப் பாதிக்கும் சட்டவிரோதச் செயலாகும்.

சிங்கப்பூர் அரசாங்கம் புறாக்களை “பறக்கும் எலிகள்” (Flying Rats) என்று கருதுகிறது. புறாக்களின் எச்சங்கள் கட்டிடங்களைச் சேதப்படுத்துவதோடு, மனிதர்களுக்குச் சுவாச நோய்களைப் பரப்பும் அபாயம் கொண்டவை.

அதோடு எஞ்சியிருக்கும் உணவுகள் எலிகள் மற்றும் கரப்பான் பூச்சிகளின் பெருக்கத்திற்கு வழிவகுக்கும் என்பதால், 2020-ம் ஆண்டு முதல் வனவிலங்குச் சட்டத்தைக் கடுமையாக அந்நாடு அமல்படுத்தி வருகிறது.

இந்தப் பெண்மணி பலமுறை எச்சரிக்கப்பட்டும் தனது செயலை மாற்றிக்கொள்ளாததால், நீதிமன்றம் இந்த அதிரடித் தண்டனையை வழங்கியுள்ளது. இந்நிலையில் நீதிமன்றத்தில் தனக்கு விதிக்கப்பட்ட ₹2 லட்சம் அபராதத் தொகையைச் செலுத்தப் போதிய வசதி இல்லை என்று அந்தப் பெண் முறையிட்டார்.

இதனையடுத்து, அபராதத்திற்குப் பதிலாக சமூகச் சேவை (Community Service) செய்யும் தண்டனையை அவர் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்தச் சம்பவம், சிங்கப்பூர் போன்ற கடுமையான சட்டங்கள் கொண்ட நாடுகளில் வசிக்கும் மற்றும் சுற்றுலா செல்லும் இந்தியர்களுக்கு ஒரு முக்கியமான பாடமாக அமைந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *