உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்; முதல்முறையாக மன்னர் சார்லஸ் இன் அறிவிப்பு

அமெரிக்க பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் ஊழல் தொடர்பான சமீபத்திய வெளிப்பாடுகளைத் தொடர்ந்து, தனது சகோதரர் அண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த லண்டன் காவல்துறை விசாரணைக்கு முழுமையான ஆதரவை வழங்க பக்கிங்ஹாம் அரண்மனை தயாராக இருப்பதாக மன்னர் சார்லஸ் முதன்முறையாகத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான எப்ஸ்டீன் கோப்புகளில் உள்ள மின்னஞ்சல்கள், அண்ட்ரூ தான் மேற்கொண்ட உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்கள் (சிங்கப்பூர், ஹாங்காங், வியட்நாம்) தொடர்பான இரகசிய அறிக்கைகளை எப்ஸ்டீனுக்கு அனுப்பியதாகக் காட்டுகின்றன.

ஆப்கானிஸ்தானில் உள்ள இரகசிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்த தகவல்களையும் அவர் எப்ஸ்டீனுக்குப் பகிர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. வர்த்தகத் தூதுவர் என்ற முறையில் இத்தகவல்களைப் பாதுகாக்கும் கடமை அவருக்கு இருந்தது.

“மிஸ்டர் மவுண்ட்பேட்டன்-வின்சரின் நடத்தை குறித்து வெளிவரும் குற்றச்சாட்டுகள் குறித்து மன்னர் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளார் ” என அரண்மனைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மன்னர் மற்றும் ராணியின் எண்ணங்கள் மற்றும் அனுதாபங்கள் எப்போதும் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுடனேயே இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெளியாகியுள்ள 30 இலட்சம் ஆவணங்களில், ஒரு பெண் நிலத்தில் படுத்திருக்க, ஆண்ட்ரூ அவர் மீது முழங்காலிட்டு அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்களும், அவரது முன்னாள் மனைவி சாரா பெர்குசன் எப்ஸ்டீனிடம் நிதியுதவி கோரிய மின்னஞ்சல்களும் அடங்கியுள்ளன. அண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.

அதேசமயம் எப்ஸ்டீன் கோப்புகளில் பெயர் குறிப்பிடப்படுவது மட்டுமே ஒருவர் குற்றவாளி என்பதற்கான ஆதாரம் ஆகாது என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *