இலங்கை

யாழில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு வாகனம் செலுத்திய சிறுவன் பலி;  இருவர் கைது; அதிகாலையில் சம்பவம் 

யாழ் வேலணை அல்லைப்பிட்டிப் பகுதியில் பொலிஸாரின் சமிக்ஞையை மீறி அதிவேகமாகப் பயணித்த ஹயஸ்ரக வாகனம் மீது பொலிஸார் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 வயதுச் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றுச் செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் அல்லைப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

ஊர்காவற்றுறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேலணை அல்லைப்பிட்டிப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான ஹயஸ் வாகனமொன்று நேற்று அதிகாலை 1.15 மணியளவில் பயணித்துள்ளது.

அந்த வாகனத்தை மேற்படி பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இடைமறித்துச் சோதனை செய்ய முற்பட்டுள்ளனர். எனினும், பொலிஸாரின் சமிக்ஞையை மீறி அந்த ஹயஸ்ரக வாகனம் நிறுத்தாது அதிவேகமாகச் சென்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மண்டைதீவு வீதித் தடையை பரிசோதித்துவிட்டு அல்லைப்பிட்டி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஜீப்புக்கு இந்தச் சம்பவம் தொடர்பான தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பொலிஸார் அந்த வேனை நிறுத்த முயற்சித்தபோதும், அது தொடர்ந்தும் தப்பிச் செல்ல முயன்றதால், முதலில் வானத்தை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எச்சரிக்கை துப்பாக்கிச் சூட்டையும் பொருட்படுத்தாமல் வேன் தொடர்ந்தும் தப்பிச் சென்றதால், வேனை நிறுத்தும் நோக்கில்

வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதில் ஹயஸ் வாகனத்தைச் செலுத்திச் சென்ற வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த 17 வயதான சிறுவன் படுகாயமடைந்தார்.

உடனடியாக அந்தச் சிறுவனைப் பொலிஸார் மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதும் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த அல்பினோ அருள் பயாஸ் (வயது-17) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்த வாகனத்தில் பயணித்த வட்டுக்கோட்டை மற்றும் நல்லூர்ப் பகுதிகளைச் சேர்ந்த ஏனைய இருவரும் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் ஊர்காவற்துறைப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் மாடுகளைக் கடத்துவதற்காகவே தாம் ஹயஸ் வாகனத்தில் சென்றதாக அவர்கள் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

கைதான இரு சந்தேகநபர்களையும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குப் பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *