அரசியல் பத்தித்தொடர்… சொல்- 47… சொல்லித்தான் ஆகவேண்டும்… தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்

கிழக்குத் தமிழர்களுக்கான தனித்துவ அரசியல்
கட்டமைப்புப் பொறிமுறை பிரதேச வாதம் அல்ல – பகுதி VI.
பக்கம் -09
தென்கிழக்கு அலகு
1986இல் அரசியல் கட்சியாக வெளிப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1988 இல் இலங்கையின் தேர்தல்கள் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்டதோர் அரசியல் கட்சியாகத் தன்னைப் பதிவு செய்துகொண்டு அரசியல் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கிற்று.
02.04.1995 அன்று கொழும்பில் நடைபெற்ற அக்கட்சியின் 13 ஆவது தேசிய மாநாட்டில் வடக்கு கிழக்கு இணைந்த மாகாண ஆளுகைக்கு உட்படாத தனியான முஸ்லிம் பெரும்பான்மை மாகாணம் ஒன்றினை (தென்கிழக்கு) கிழக்கிலே அம்பாறை மாவட்டத்திலே பொத்துவில், கல்முனை, சம்மாந்துறை ஆகிய தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கிய (அம்பாறை சிங்கள பெரும்பான்மை தொகுதியை நீக்கி) நிலப்பரப்பை அடிப்படையாக வைத்து ஏற்படுத்தப்பெறுவதும்-இந்த உத்தேச முஸ்லிம் பெரும்பான்மை அலகின் கீழ் மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார் மாவட்டங்களில் உள்ள முஸ்லிம் பெரும்பான்மை பிரதேசங்களும் (நிலத் தொடர்பற்ற வகையிலே) கொண்டுவரப்படுவதும் ஆன யோசனையை முன்வைத்தது. அன்றிலிருந்து இக்கோரிக்கை அரசியல் அரங்கிலே தென்கிழக்கு மாகாணக் கோரிக்கையெனத் திட்டமிட்டவகையிலே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் முன்னெடுக்கப்பட்டது.
இக்கோரிக்கை இலங்கைத் தமிழ்த் தேசிய இனத்தின் மரபு வழித்தாயகமான வடகிழக்கு மாகாணத்தை மதரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் பிரித்துத் துண்டாடி இறுதியில் வடகிழக்கு மாகாணம் முழுவதுமே சிங்களப் பேரினவாதத்திடம் பறிபோய்விடக்கூடிய ஆபத்தைக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல், அம்பாறை மாவட்டத் தமிழர்களை நிரந்தரமாக அரசியல் அனாதைகளாக்கும் அரசியல் நோக்கத்தையும் கொண்டிருந்தது.
ஏனெனில், உத்தேச தென்கிழக்கு அலகின் கீழ் மட்டக்களப்பு திருகோணமலை மன்னார் மாவட்டங்களில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களையும் நிலத்தொடர்பற்ற வகையிலே உள்ளடக்கிய இந்தக் கோரிக்கை-யோசனை உத்தேச தென்கிழக்கின் ஆள்புலத்திற்குள் அமையக்கூடிய தமிழ்ப் பிரதேசங்களையிட்டு-அம்பாறை மாவட்டத் தமிழர்களையிட்டு மௌனம் சாதித்திருந்தது. கோரிக்கை முன்வைக்கப்பட்ட காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் எம் எச் எம் அஸ்ரப் 1994 இல் பதவிக்கு வந்த ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க அரசாங்கத்தின் அமைச்சராகவும் அரசியல் செல்வாக்கு பெற்றிருந்தார். அதேவேளை அம்பாறை மாவட்டத் தமிழர்கள் தங்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை 1994 பொதுத் தேர்தலில் பறிகொடுத்த நிலையிலுமிருந்தனர்.
அதற்கு முந்திய-ஜனாதிபதி ஆர் பிரேமதாச தலைமையிலான-அரசாங்க காலத்தில் இனப் பிரச்சனைக்கான தீர்வை எட்டும் நோக்கில் 1992 இல் நியமிக்க பெற்றிருந்த மங்கள முனசிங்க தலைமையிலான பாராளுமன்றத் தெரிவு குழுவிடம் தமிழர் விடுதலைக் கூட்டணி அம்பாறை மாவட்டத்திலிருந்து அம்பாறைத் தேர்தல் தொகுதியை நீக்கி விடுவதற்கு யோசனை சமர்ப்பித்திருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் சாணக்கியமற்ற இந்த அவசர அரசியல் நடவடிக்கைதான் அம்பாறை மாவட்டத்திலிருந்து அம்பாறைத் தேர்தல் தொகுதியை நீக்கிவிட்டு மீதியாக உள்ள பொத்துவில், கல்முனை, சம்மாந்துறை தேர்தல் தொகுதிகளை அடிப்படையாக வைத்து முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட தனி மாகாணம் அல்லது பிராந்தியமொன்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1995இல் முன்பைப்பதற்கான மறைமுகத் தூண்டலை அளித்திருந்தது.

அம்பாறை மாவட்டத்திலிருந்து அம்பாறைத் தேர்தல் தொகுதியை நீக்கிவிட்டு கிழக்கு மாகாண எல்லையை மீளமைப்பதற்கு மங்களமுனசிங்க தலைமையிலான தெரிவுக் குழுவுக்கு யோசனை தெரிவிக்கும் முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி அந்த யோசனையின் சாதக பாதகங்களை நேரடியாக அனுபவிக்கப் போகின்ற அம்பாறை மாவட்டத் தமிழர்களைத்தானும் கலந்து பேசவில்லை. மங்களமுனசிங்க தலைமையிலான பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்குத் தமிழர் விடுதலைக் கூட்டணி தன்னிச்சையாகவே இந்த யோசனையை (கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் அம்பாறைத் தேர்தல் தொகுதியை நீக்கி கிழக்கு மாகாண எல்லையை மீளமைக்கும் யோசனையைச்) சமர்ப்பித்தது. எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத் தமிழர்களை அரசியல் அனாதைகளாக்கும் விடயமே இது.
1994 ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதி சந்திரிகா தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் பதவியேற்றதன் பின்பு 1995 ஆகஸ்ட் மாதம் அரசாங்கத்தின் அரசியலமைப்பு சீர்திருத்த ஆலோசனைகள் வெகுஜனத் தொடர்பு ஊடகங்களின் ஊடாக மக்கள்முன் வைக்கப்பட்டது. இது சம்பந்தமாக பாராளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றும் அப்போதைய அரசாங்கத்தின் அரசியலமைப்பு விவகார அமைச்சர் ஜி எல் பீரிஸ் தலைமையில் நியமிக்கப்பட்டு தெரிவுக் குழுவும் பல தடவை கூடியது. பின்னர் என்ன காரணமோ தெரியவில்லை இத்தெரிவுக்குழு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பெற்று 1997 அக்டோபர் மாதம் 24 ஆம் திகதி அரசியலமைப்புச் சீர்திருத்தத்திற்கான ஆலோசனைகள் அரசாங்கத் தரப்பினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பெற்றன.
அரசியலமைப்புச் சீர்திருத்தங்களுக்கான அரசாங்க ஆலோசனைகள் அடங்கிய அந்த அறிக்கையின் அத்தியாயம் XV இன் பகுதி 127-இல் ‘பிராந்தியங்களுக்கு அதிகாரத்தை பரவலாக்கல்-பிராந்திய சபைகளை ஸ்தாபித்தல்’ எனும் தலைப்பின் கீழ் கூறப்பட்டிருந்த முன்மொழிவுகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன் வைத்திருந்த தென்கிழக்கு பிராந்தியத்தை-அலகை-மாகாணத்தை சாத்தியப்படுத்துவதாக அமைந்திருந்தன. தமிழர் விடுதலைக் கூட்டணி கருத்துக்கணிப்பு எதுவும் இல்லாமல் இதனை அமுல் செய்யுமாறு அரசாங்கத்தைக் கோரியது. இதன் மூலம் உத்தேச தென்கிழக்கு பிராந்தியம் ஒன்று உருவாகி
அதன் ஆளுகைக்குள் அம்பாறை மாவட்டத் தமிழர்கள் நிரந்தரமான அரசியல் அடிமைகள் ஆக்கப்படுவதற்கும் அம்பாறைத் தேர்தல் தொகுதியை எந்தவிதமான நிபந்தனையுமின்றி சிங்களப் பேரினவாதத்திடம் தாரை வார்த்துவிடுவதற்கும் கிழக்கு மாகாணத்தை மூன்றாகத் துண்டாடுவதற்கும் தமிழர் விடுதலைக் கூட்டணி துணை போகத் தயாராயிருந்தது.
மட்டுமல்லாமல் அரசாங்கத்தின் ஆலோசனைகள் வெளிவரும் முன்னரே தென்கிழக்குப் பிராந்தியம் குறித்து தமிழர் விடுதலைக் கூட்டணி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணக்கப்பாட்டிற்கும் வந்திருந்தது.
மேலும் “வடக்கு கிழக்கு இணைப்பானது தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையிலேயே அமைய வேண்டும்” என அரசாங்கம் தனது யோசனைகளை 24.10.1997 அன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கும் முன்னரே பாராளுமன்றத் தெரிவுக் குழுக் கூட்டம் ஒன்றில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பான தெரிவுக்குழு உறுப்பினர் நீலன்திருச்செல்வம் கூறியிருந்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டின் அம்சங்கள் எவையென்பது தமிழர் விடுதலைக் கூட்டணியால் ஒருபோதும் தமிழ் மக்கள் முன் வைக்கப்படவேயில்லை. இன்று வரை அது மூடு மந்திரமாகவே உள்ளது.
இது எதனைக் காட்டுகிறது என்றால் அரசியல் தீர்மானங்களை எடுக்கும்போது வடமாகாணம் குறிப்பாக யாழ்குடா நாட்டு மேல்தட்டுவர்க்கத்தின் நலன்களே முதன்மைப்படுத்தப்படுகிறதேயன்றி யாழ் குடாநாட்டுக்கு வெளியே வன்னிப்பிரதேசம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் வாழுகின்ற விவசாய மனோபாவம் கொண்ட விளிம்பு நிலை மக்களின் சமூக பொருளாதார அரசியல் எதிர்கால நலன்கள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லையென்பதைத்தான். யாழ் மேலாதிக்க அரசியல் தரப்பு எப்போதுமே கிழக்கு மாகாண தமிழர்களைக் கிள்ளுக் கீரையாக-எடுப்பார் கைப்பிள்ளையாகவே கருதி வந்துள்ளது/ வருகிறது என்பதற்கு இதுவுமோர் எடுத்துக்காட்டாகும்.
(தொடரும்…)
![]()