முச்சந்தி

10 சந்தேகநபர்களுக்கும் நாளை வரை விளக்கமறியல்

திருகோணமலை கடற்கரைப் பகுதியில், உரிய அனுமதியின்றி புத்தர் சிலை அமைத்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர்மற்றும் 3 தேரர்கள் உட்பட 10 சந்தேகநபர்களையும் நாளை 11ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டது.

நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். எஸ். எம். சம்சுதீன் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, சந்தேகநபர்களுக்கு எதிராகக் கரையோரப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெறுவதற்குச் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் திருகோணமலை துறைமுகப் பொலிஸார் மறுப்புத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து 10 சந்தேகநபர்களையும் நாளை 11ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவைப் பிறப்பித்தார்.

கடந்த நவம்பர் 16ஆம் திகதி, திருகோணமலை கடற்கரை ஓரத்தில் கரையோர பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான நிலத்தில், எவ்வித சட்டபூர்வ அனுமதியுமின்றி புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இது இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைப் பாதிப்பதாக எழுந்த முறைப்பாடுகளை அடுத்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்றைய விசாரணையை முன்னிட்டு நீதிமன்றச் சூழலில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

திருகோணமலை கடலோர பாதுகாப்பு மண்டலத்திற்குள் அங்கீகரிக்கப்படாத கட்டடம் கட்டப்பட்டு புத்தர் சிலை வைக்கப்பட்டதாக கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மைத்துறை தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையில் இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *