கதைகள்

குருதிக்குள் கிடக்கும் சங்கதிகள்… சிறுகதைத் தொடர் – 12 …. சமன்பாடு …. மீனாசுந்தர்

ஊருலகில் இல்லாததா அங்கு நடந்துவிடப் போகிறதென எண்ணினால், அது சரியும் கூடத்தான். பயணிகளின் நெரிசலால் மூச்சுத் திணறி நசுங்கிக்கொண்டிருந்த அந்தப் பேருந்து நிலையத்தைப் பார்க்க பரிதாபமாகவிருந்தது. நெளியும் புழுக்களைப்போலப் பேருந்துகளும் கொசுக்களைப்போல ஆண்களும் பெண்களுமாய் அலைந்து கொண்டிருந்தனர். இடையிடையே விட்டில் பூச்சிகளென ஆட்டோக்கள் அதிவேகத்தில் மின்னி மறைந்தன. கடலை வண்டிகளில் ஆவி உடலை நெளித்துப் பறந்து கொண்டிருந்தது. வண்டியைத் தள்ளியவாறே சிறு கரண்டியொன்றினால் என்னவொரு லாவகமாய்த் தட்டுகிறார்கள் கடலை விற்பன்னர்களென நினைக்கத் தோன்றிற்று. கூவி விற்கும் பட்டாணிச் சுண்டல் வீட்டில் தயாரிப்பதைவிடச் சுவையாய் இருப்பதற்குக் காரணமா வேண்டும்? சுண்டலின் மீது புழுதி படிந்து மெல்லிய ஆடையைப்போலக் காட்சியளிப்பதைக் கூர்ந்து நோக்கினால் உணர முடியும். உதிர்த்துக் குவித்த மஞ்சள் கொன்றை மலர்களைப்போல என்னவொரு வசீகரம் அந்தப் பட்டாணிக் குவியலில்?!

உச்சியில் தினவெடுத்துத் திரிந்து கொண்டிருந்த சூரியனால் புழுக்கமென்றால் அப்படியொரு புழுக்கம். வியர்வைப் பாம்புக் குட்டிகளைப்போல முதுகில் நெளிந்தோடின. வடக்குத் திசையிலிருந்த நெடுநாட்கள் சுத்தம் செய்யப்படாத கழிவறையின் மூத்திரக் கவுச்சி நாசித் துவாரங்களைப் பதம் பார்த்துக்கொண்டிருந்தது. தஞ்சாவூர், திருச்சி, கோயம்புத்தூர், திருப்புர் உள்ளிட்ட பேருந்திற்காகக் காத்திருப்போருக்கு நகராட்சியின் சார்பில் இலவசமாய் வழங்கப்படும் இந்த மூத்திரவாடை பேருந்து நகரும் வரையும் சிம்ம சொப்பனம்தான். தப்பித்தால் போதுமென்ற மனநிலையில்தான் பலரும் அமர்ந்திருப்பர்.

கையிலிருந்த சிறு டவலினை நாசிக்கு அணை கொடுத்து உள்ளே ஏறினார் விசுவநாதன். அவரது கண்களும் உடலும் இனம்புரியாத பதட்டத்திலிருந்தன. ஏறியதும் அமர்ந்திருந்தவரைப் பார்த்துக் கேட்டார்.

‘இந்த இடத்துக்கு யாராவது வர்றாங்களா ?”
“தெரியலைங்களே..” முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டார்.
‘நான் உட்காரலாம்ங்களா?”

‘அட… இதையெல்லாமா கேட்டுகிட்டு இருப்பாங்க? நானென்ன பஸ்சு ஓனரா? உட்காருங்கய்யா.”
அமர்ந்து கொண்டார் விசு. சற்றுநேர ஆசுவாசத்திற்குப் பிறகு வெளியில் விழிகளை வீசினார். கழிவறைச் சுவரில் ‘பராமரிப்பு’ என்று கொட்டை எழுத்தில் எழுதியிருந்த எழுத்துகளின் முகத்தில் வெற்றிலை எச்சிலை யாரோ உமிழ்ந்திருந்தார்கள். காறி உமிழ்ந்த எச்சிலின் கொழகொழப்பு வழிந்து காய்ந்திருந்தது. வெளியில் சிந்தி விடாமல் விசு உள்ளுக்குள் சிரித்துக்கொண்டார். சட்டையின் மேல் பித்தான்களைத் தளர்த்தி, காலரைப் பின்புறமாக தூக்கிவிட்டுக்கொண்டு… ஷ்ஷ்ஷ்… எனச் சப்தமெழுப்பியவாறே ஊதி விட்டுக் கொண்டார். சிலுசிலுப்பு குறுகுறுவென ஓடிற்று. கைய்யில் வைத்திருந்த தேங்காய்ப்பூ டவளால் நெற்றியையும், கழுத்தின் பின்புறத்தையும் அழுந்த தேய்த்துக்கொண்டு, அருகிலிருந்தவரைப் பார்த்துக் கேட்டார்.

“எத்தனை மணிக்கு எடுப்பாங்க சார் ?”

“சரியா தெரியலை.! இப்பவே எடுத்தாலும் நல்லதுன்னுதான் தோணுது. இந்த மூத்திர நாத்தம் குடலை பிடுங்குது” எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நடத்துநர் பேருந்தில் ஏறினார்.
“கண்டக்டர் சார்… பஸ் எத்தனை மணிக்கு எடுப்பீங்க ?”

‘எடுத்திட வேண்டியதுதான்ங்க… டிரைவர் டீ குடிக்கப் போயிருக்காரு… வந்திடட்டும்!
“இங்கிருந்து தஞ்சாவூருக்கு ஒரு மணி நேரம் ஆவுமா சார்?”

“ஆவும்.” என்ற கண்டக்டர் அதற்குமேலும் அவருக்கு முகம் கொடுக்காமல், பின்புறம் எட்டிப் பார்த்துக் கத்தினார்.

“லோக்கல் டிக்கெட் யாருமிருந்தா இறங்கிடுங்க… பக்கத்துல நிக்கிற லோக்கல் வண்டியில வாங்க… இந்த வண்டி வடுவூர்லேயும், தஞ்சாவூர்லேயும்தான் நிக்கும்!”
“ஏங்க மேலவாசல் நிக்காதா?” பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது.
நடத்துநர் உச்ச சினத்தில் பேயாட்டம் போடத் தொடங்கி விட்டார்.

“தொண்டை கிழிய கத்துறேன்ல.. போகாதுன்னு… அப்பறம் என்ன வௌக்கம் வேற? இறங்குய்யா மொதல்ல”

“லோக்கல்ல நிக்காத பஸ்ஸெல்லாம், லோக்கல் ரூட்ல ஏன்யா போறீங்க… நேரா மேலால பறந்து வடுவூர்லயும், தஞ்சாவூர்லயுமா குதிச்சிக்கிட வேண்டியதுதான?”
திட்டிக்கொண்டே மேலவாசல்காரர் இறங்கிப்போசு, கண்டக்டர் அப்பாவியாய் தலையில் அடித்துக்கொண்டு அமர்ந்திருந்த பயணிகளைப் பார்த்து முறுவலித்தார். ஓட்டுநர் வந்து ஏறியதைக் கண்ட நடத்துநர், “வண்டிய எடுங்கண்ணே… நேரமாகுது. இந்தாளுங்களுக்கு விளக்கம் கொடுத்தே நம்ம பிராணனை போயிடும் போலருக்கு” எனச் சலித்தவாறே விசிலை வேகமாக ஊதினார். வண்டி கிளம்பிற்று.

ருக்மணிபாளையம் குளம் கடந்து, வடசேரிக்குப் பிரியும் சாலை தாண்டி, நெடுவாக்கோட்டை காமராஜர் நகர் வந்தபோது பேருந்து சன்னமாக வேகமெடுத்திருந்தது. சன்னல் வழியே நுழைந்த காற்று பயணிகளின் புழுக்கத்தை விரட்டிக் கொண்டிருந்தது. அருகிலிருந்தவரை பார்த்தார் விசு, வெளியில் வேடிக்கை பார்த்தவாறு லயித்திருந்தார் அவர். அவரும் இந்த ஊர்க்காரர் போலத்தான் தெரிந்தது. அடிக்கடி பார்த்த முகமாகத் தோன்றிற்று. யாரென்று விவரமாக தெரிந்து நினைவிற்குக் கொண்டுவர முடியவில்லை. லேசாக கனைத்துக் கொண்ட விசு, மெல்லிய குரலில் சார் என அழைக்க, என்ன என்பது போலச் சட்டெனத் திரும்பிப் பார்த்தார்.

“உங்களை நல்லா பார்த்திருக்கேன். ஆனா சரியா புரியலங்க சார்”
“உங்களையும் அடிக்கடி பார்த்த முகமாத்தானிருக்கு”

“எம்பேரு விசுவநாதன்ங்க சார். கல்வித்துறையில ஹெட் கிளார்க்கா இருக்கேன். வீடு இங்கதான் தெற்குவீதியிலங்க சார்… எனச் சொல்லி முடித்த அடுத்த கணம் அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்.

“கீழப்பாலம்தாங்க சார் எனக்கு வீடு. எம்பேரு மந்திரமூர்த்தி, மளிகைக்கடை வச்சிருக்கேன்!”
“அப்படியா.. ரொம்ப சந்தோசம் சார்…!” உங்க பொழப்பு தேவலாம். நல்லதோ கெட்டதோ உங்களோடு போயிடும். நாங்க இந்த அதிகாரிங்ககிட்ட மாட்டிக்கிட்டு படுற பாடு இருக்கே. கொள்ளைப் பாடு சார். ஆளாளுக்கு ஒன்னு சொல்லி நம்மளை பைத்தியமாக்கிடுவானுங்க. ஒருத்தனும் வேலைய செய்ய விட மாட்டானுங்க” என்றார் விசு.

“ஆயிரம் பிரச்சனை இருந்தாலும்.. கவருமெண்டு வேலைன்னா சும்மாவா சார்? கா காசுன்னாலும் கவருமெண்டு காசில்ல வாங்குறீங்க“
சிரித்துக்கொண்டார் விசு. பிறகு சொன்னார்.

“கெவருமெண்டு காசுதான். ஆனா வர்றவன் போறவன்ங்கிட்டவெல்லாம் ஏச்சும் பேச்சும் வாங்கணும் சார். இந்த பஸ்சுல மேலவாசல்காரரு பேசிட்டு இறங்கினாருல்ல. அவர மாதிரிதான் ஒவ்வொரு நாளும் நாங்க படவேண்டியிருக்கு? ”
“என்ன திடீர்னு அவரைப் பத்தி…?”
“அவரு நடந்துகிட்டது நியாயமா சார்? நீங்களே சொல்லுங்க?”

“என்ன பண்றது சார்… படிக்காத கிராமத்து ஆளுங்க…. சொல்றத புரிஞ்சிக்கிற சக்தியில்லே”
“உண்மைங்க சார்… இது பி.பி. வண்டி. பாயிண்ட் டு பாயிண்ட் வண்டி லோக்கல்ல நிக்காதுன்றது விதி. அதை எங்காவது அவரு புரிஞ்சிக்கிறாரா பாருங்க.? கண்டக்டரை திட்டிப்புட்டு அவரை எதிரிமாதிரி வெறிச்சிக்கிட்டே போனாரு பாருங்க!”
“ஆமா.. நானும் பாத்துக்கிட்டுத்தான இருந்தேன்”

“அவரு அப்படியே உட்கார்ந்திருந்தா என்ன செய்வாருங்கறீங்க… மேலவாசல் வந்ததும் இறங்கணும்பார்… கண்டக்டர் கத்துவார். அவரும் பதிலுக்கு கத்துவார்… வார்த்தைகள் முற்றி அங்க நின்னுக்கிட்டிருக்கிற தன்னோட ஊருக்காரன் நாலுபேரை கூப்பிட்டு கண்டக்டர அடிக்கப் பாயுவாரு.. அதானே நடக்கும்!”

மந்திரமூர்த்தி அமைதியாக விசுவையே பார்த்துக்கொண்டிருந்தார்.
“எல்லோரும் மனுசன்தானுங்களே… அவரவர் வேலையிலருக்கிற சிரமங்களை கொஞ்சமாவது யோசிச்சி பாக்கணும்ல்ல.”
”……………………………………….”
“இந்த டிரைவர், கண்டக்டர் உத்தியோகம் ரொம்ப பாவம்ங்க சார்… ராப்பகலா கண்ணு முழிக்கணும்… இந்த மாதிரி லோக்கல் பிரச்சினைகளைச் சமாளிக்கவே மனுசன் பிராணனை போய்டும்… ஏர்ற ஆளுங்க செய்யிற ஒவ்வொரு தப்பும் இவங்க தலையில தான்ங்கய்யா விடியும்… ஊர்ல உள்ளவங்களும் வரிஞ்சி கட்டிக்கிட்டு உண்மை, பொய்யி எதுன்னு அறிஞ்சிக்காம ஓடுறோமே!”

“உண்மைதான் சார்.. நாலு பேர் ஓடினா அஞ்சாவதா நாமும் ஓடுறோமே.. யாரு நின்னு நிதானிக்கிறோம்? உறவுக்காரன் ஒருத்தன் ஆபத்துன்னு கத்துறப்ப நமக்கு யோசிக்க எங்க நேரமிருக்கு?”

“ஒண்ணும் வேண்டாம் சார்… ரொம்ப நாள் ஆகலை. முந்தா நாள் இதேமாதிரி ஒரு பிரச்சினை. நல்லா கேளுங்க… இந்த பிரச்சினைக்கு உட்பட்டவங்க யாரும் நமக்கு வேண்டியப்பட்டவங்க இல்ல,,, நாம பொது மனுசனா நின்னு பார்ப்போம்.. என்ன சார் எதுவும் பேச மாட்டேன்ங்கறீங்க?”
“சொல்லுங்க சார்…கவனிக்கலையோன்னு நெனக்காதிங்க. கேட்டுக்கிட்டுதான் இருக்கேன்…!”
“திருத்துறைப்பூண்டிக்கு மேற்கே களப்பாள்ன்னு ஒரு ஊர் இருக்கே தெரியும்களா?
“அதுக்கு ஏன் திருத்துறைப்பூண்டின்னு தலைய சுத்தி மூக்கைத் தொடுறீங்க? கோட்டூர்க்கு தெற்கன்னு சொல்லுங்க. களப்பாள்தான் எங்க அம்மா பொறந்து ஊரு. எங்க மாமா இரண்டு பேர் இப்பவும் அங்க இருக்காங்க…”

“ஓ.. அப்படியா? அந்த ஊருக்கு மன்னார்குடிலேர்ந்து ராத்திரி ஒன்பதரைக்கி மேல ஒரு பஸ்சு போகுதுங்க. அநேகமா அதுதான் கடைசி வண்டியா இருக்கும்ன்னு நெனக்கிறேன்”
“செரி.!”

“அந்தப் பஸ்சுல முந்தாநாள் போய்கிட்டு இருக்கேன்… புதுத்தெரு வளைவு இருக்குல்ல…?”
“ஆமா!”

‘அங்கினகிட்ட வண்டி வளையுதுங்க… ஒருத்தன் ஃபுல்லா தண்ணியடிச்சிட்டு வந்து வண்டில சாஞ்சிட்டாங்க… டிரைவர் பதறிப்போய் பிரேக்க போடறாரு… வண்டிலருந்த எல்லாரும் முன்னாடி கம்பில மோதிக்கிட்டோம்… இதுல யாரு மேல தப்பிருக்குன்னு நினைக்கிறீங்க?”
“இதுல என்ன சார் கேள்வி.. அந்தக் குடிகார பய மேலதான் தப்பு!”

“ஆனா… அங்க என்ன நடந்திச்சி தெரியும்களா? குடிகாரன் பஸ்ல மோதி கீழே விழுந்துட்டதுல கம்பி குத்தி ரெண்டு பல்லு போய்ட்டு… வாய் பூராவும் ரத்தம்… உடனே எங்கிருந்து கூடினிச்சின்னே தெரியல அந்தக் கூட்டம்…? ஒரே சத்தம்… கூச்சல்… டேய்… காளிமுத்த இந்த டிரைவர்பய அடிச்சிட்டான்டோய்… டேய்… என்னடா பாத்துக்கிட்டு நிக்கிறீங்க… எங்கடா டிரைவரு? அதோ ஓடுறான் பாரு கண்டக்டரு … விடாதே… பிடி…!”
மந்திரமூர்த்தி எதுவும் பேசாது மௌனித்திருந்தார்.

“டிரைவரும். கண்டக்டகும் எவ்வளவோ எடுத்துச் சொன்னாங்க… எவன்சார் கேட்டான்? பாவம் ரெண்டு பேரும் எத்தனை பேரை சமாளிக்க முடியும்? ஐம்பது, அறுபது பேரும் அடிச்சி தொவச்சி புட்டானுங்க… மூக்குலேர்ந்து ஒரே ரத்தம்… இன்னொரு கும்பல் பஸ் கண்ணாடியெல்லாம் நொறுக்கி போட்டிருச்சி. சமாதானத்துக்கு இறங்கிப் போன எனக்கும் நாலு குத்து…”
மந்திரமூர்த்தி விசுவையே உற்று பார்த்துக் கொண்டிருந்தார்.

“அதுல டிரைவரா போனவன் வேற யாருமில்லை சார்.. என் கூடப் பொறந்த தம்பிங்க… அவனுக்கும் மூணு குழந்தைங்க… ஏதாவது ஒன்னு ஏடாகூடமா ஆயிருந்தா எவன் சார் காலம்பூரா குடும்பத்த வச்சி காப்பாத்த முடியும்?”

சொல்லிக்கொண்டிருக்கும் போதே குரல் கம்மிற்று விசுவிற்கு. “மூக்குல ரெண்டு தையல், வாய்ல மூணு தையல்ன்னு உடம்பு பூராவும் ரத்தகாயம். எங்க வீட்ல ரொம்ப செல்லமா வளர்ந்தவன்ங்க சார் அவன். சின்ன முள்ளு குத்தினாலே துடிச்சிப் போய்டுவான்… அன்னிக்கு என் கண்ணெதிர்லயே என்னமா அடிச்சானுங்க பாவிங்க… அவனுங்க நல்லா இருப்பாங்களா?”
விசுவிற்கு துக்கம் அடைக்க சற்று நேர மௌனத்திற்குள் பேருந்து தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் வந்து சேர்ந்தது. இருவரும் இறங்கிக் கொண்டார்கள்.

“வாங்க…டீ சாப்பிடுவோம்!”
மந்திரமூர்த்திதான் அழைத்தார். டீ வந்ததும் ஆளுக்கொன்றை எடுத்துக் கொண்டார்கள்.
“இப்ப… எங்க நேரா ஆஸ்பத்திரிக்குத்தானா?”

“இல்ல… இங்கதான் பக்கத்துல சித்தப்பா வீடு… போய்ட்டு கொஞ்ச தாமதமாதான் போகணும்…”
“கேட்ட எனக்கே கஷ்டமா இருக்குங்க சார். மெடிக்கல்ல எங்கே இருக்காரு அவரு?”
“நாலாவது வார்டுல 33 வது பெட்டு சார்”

“எனக்கும் கொஞ்சம் வேலையிருக்கு.. வாய்ப்பிருந்தா நானும் வந்து பாத்திட்டு போறேன்!”
“ஐயோ.. ஏன் சார் உங்களுக்கு வீண் சிரமம்” அதெல்லாம் ஒண்ணுமில்லங்க. இதுக்காகவா மெனக்கெட்டு வந்தேன்? வந்த இடத்துல பார்க்கறதுல என்னயிருக்கு?”
“இருக்கட்டும் சார்.. நீங்க சொன்னதே வந்து பார்த்த மாதிரிதான்”
இருவரும் அவரவர் வேலையைப் பார்க்க விடைபெற்றுச் சென்றார்கள்.

ஒரு மணி நேரம் கழித்து மருத்துவமனைக்கு விசு வந்த போது மந்திரமூர்த்தி அங்கே நின்று கொண்டிருந்தார். அவருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. கூட இருந்த விசுவின் தம்பி மனைவி விவரத்தைச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“உங்க நண்பர்ன்னு சொன்னாங்க மாமா. . இந்த ஹார்லிக்ஸ், பழமெல்லாம் சார்தான் வாங்கிட்டு வந்தாங்க. அதைவிட விசிட் வந்த டாக்டர், ஆபரேசனுக்கு ரத்தம் தேவைப்படுதுன்னு சொன்னவுடனே சந்தோசமா போய் ரத்தமும் கொடுத்திட்டு வந்து உட்காருந்திருக்காரு. இந்தக் காலத்துலயும் இப்படியொரு நண்பர்களா?”
விசுவிற்கு விழிகளில் கண்ணீர் பூத்துத் தளும்பியது.

காலங்காலமா பழகியவர்களே கைவிட்டு விடும்போது கொஞ்சநேரம் பேசிக் கொண்டு வந்ததற்கே இப்படியா? மனிதம் இன்னும் சாகவில்லையென நெகிழ்வின் உச்சத்தில் வார்த்தைகளின்றி தடுமாறினார் விசு. மந்திரமூர்த்தி அவர் கரங்களை இறுகப் பற்றிக்கொண்டு உள்ளுக்குள் நினைத்துக் கொண்டிருந்தார்.

“அன்னிக்கு விவரம் புரியாம செய்துட்டேன் சார். உங்க டிரைவர் தம்பிய அடிச்சதுல நானும் ஒருத்தன்தான். மனசளவுல நான் ரொம்பவும் உடைஞ்சி போயிட்டேன் சார். தயவு செஞ்சி என்னை மன்னிச்சிடுங்க!”

தாய்மை வடிவாய்க் கபடமற்று வெள்ளுடையில் நடமாடும் செவிலியர்கள் என்னவோ வானில் பறக்கும் புறாக்களைப்போலத் தோன்றிற்று விசுவிற்கு. தெய்வ வடிவவொன்று மனத்துள் தோன்ற தாடையில் போட்டுக் கொண்டார் விசு.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *