கவிதைகள்
தன்னை மறந்தான் வான் மிதந்தான்!… கவிதை…. ஜெயராமசர்மா

மலர்க ளிருக்கு மிடம் நாடி
வண்டுகள் தேனைக் கொண்டு வரும்
வண்ண மயில்கள் மழை காட்ட
தோகை விரித்து நடன மிடும்
குயில்கள் கூவி இசை பரப்பும்
கிளிகள் அழகாய் கதை பேசும்
தென்றல் காற்று சிந்து பாடி
வந்து அங்கே வாழ்த்தி நிற்கும்
ஓரக் கண்ணால் பார்த்த படி
உட்கார்ந் திருந்தான் ஒரு கவிஞன்
உயர உயர அவன் பறந்தான்
தன்னை மறந்தான் வான் மிதந்தான்
கற்பனைக் காவுள் அவன் இருந்தான்
சித்தனைப் போல மாறி நின்றான்
இத்தரை சிறக்க பல மொழிந்தான்
எத்தனை எத்தனை கவி ஈந்தான்
இயற்கை அவனுள் பல மாற்றம்
கொடுக்கக் கொடுக்க அவன் மகிழ்ந்தான்
கொடுக்கும் இயற்கையை வாழ்த்தி அவன்
கோடிக் கணக்காய் கவி கொடுத்தான்
இயற்கை யனைத்து மிறை கண்டான்
எண்ணி லடங்கா பல வுணர்ந்தான்
கவிதைக் கடலுள் மூழ்கி அவன்
கணக்கி லடங்கா கவி கொடுத்தான் !

மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()