இன்னொரு அழகி… கதை…. ஏலையா க.முருகதாசன்

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்னாலை அவரை நான் ஒரு உடுப்புக் கடையிலைதான் சந்திச்சன். அன்றைய மன்னர் காலத்தில் தமது மகளுக்கு நல்லதொரு கணவரைத் தேர்ந்தெடுப்பதற்காக மன்னர்கள் சுயம்வரம் வைப்பார்கள்.
திருமணமாகாத பல நாட்டு இளவரசர்கள் அலங்கார இருக்கைகளில் அமர்ந்திருப்பார்கள்.
இளவரசி கையில் மாலையுடன் ஒவ்வொரு இளவரசனையும் நின்று நிதானித்து முகத்திலிருந்து கால் நகம் வரை அவ்விளவரசர்கள் இருக்கும் நிலையை வைத்தே அளந்தெடுத்து தனக்கு உகந்தவனை கண்களாலும் மனதாலும் தே;ர்ந்தெடுத்து மாலை போட்டு மணாளனாக்கிக் கொள்வாள்.
அது போல, நான் இளவரசி போல பல அழகிய பெண்களையொத்த நிறமுடையோர் மத்தியில் நானும் இருந்தேன்.
இளவரசர் போன்ற பலர் வந்து நின்று என்னைப் பார்த்தாலும் அவர்களுக்கு என்னைத் தேர்ந்தெடுக்கும் தகுதியில்லாமல் போய்விட்டது.
என்னை விரும்பி தேர்ந்தெடுத்த தன்னுடலோடு உடலாய் அள்ளி அரவணைக்க ஒரு அழகிய இளவரசனையொத்தவன் வரமாட்டானா எனப் பல மாதங்களாக ஏங்கித் தவித்து வாடி நின்றேன்.
என்னருகில் வந்த ஆண்மகன்கள் கொஞ்சமும் நாகரீகமின்றி,பண்பாடின்றி கனவானின் கண்ணியத்தையம் மீறி என் உடல் மீது தம் கைகளை பரவிடடு பரீட்சித்தப் பார்த்த பின்பும்கூட வேண்டாம் என ஒதுக்கிவிடடுப் போக மௌனமாக அழுதேன்:.நான் என்னதான் பார்ப்போர் என்னைப் பார்த்து மயங்கிப் பரவசப்படுவார்கள் என நான் எனக்குள் ஆனந்தமாக அசை போட்டாலும் என் அழகில் மயங்காதவர்களும் என்னை அலட்சியம் செய்பவர்களும் இருக்கவேதான் செய்வார்கள்.விதிக்கு விதிவிலக்கு இல்லைத்தானே.
எல்லாருக்கும் எல்லாரையும் பிடிப்பதில்லை.அழகை இரசிப்பது ஒவ்வொருவர் இரசனையைப் பொறுத்தது.ஒருவருக்குப் பிடித்த உணவு இன்னொருவருக்குப் பிடிப்பது இல்லை.அப்படித்தான் அழகுபற்றிய எதிர்பார்ப்பும்.
இவளையா போயக் காதலித்தாய் என நண்பர்கள் கேலியாக ஏளனத்துக்குட்படும் ஒருவனின் மனதை ஆட்கொண்டவள் அவனக்கு வின்னிலிருந்து இறங்கிவந்த தேவைதையாகத் தெரிவாள்.
வந்த ஆண்களில் பல வயதுடையவர்கள் இருந்தார்கள்.இளைஞர்களில் ஒழுங்கமைக்கப்படாத தேன்கூட்டுவதை போன்ற தாடி வளர்த்தவர்களும் இருந்தார்கள்,ஒரு மில்லிமீற்றர் நீளமட்டுமே வளரவிட்டு அழகாக கிளப் செய்த வாட்டசாட்டமான இளைஞர்களும் இருந்தார்கள்.
என்னருகில் வந்தவர்கள்,என்னை கண்களால் விழுங்குவது போலப் பார்த்தாலும் ஓரிரு விநாடிகள் மட்டுமே என்னருகில் நின்றுவிட்டு,நான் அவர்களுக்குத் தோது இல்லையென்பது போல தலையை இடதுபுறமாகவும் வலதுபுறமாகவும் நான் தமக்குத் தோதில்லையென்பது போல ஆட்டியம் தோளை மேலையும் கீழையும் உடற்பயிற்சி செய்வதற்கு செய்வது போல தசைகளை அசைத்தும் போதாதற்குச் சொண்டுகளை சரியில்லை என்பது போல நவரசத்தில் ஒரு இரசத்தைக் காட்டிய படி அகன்று சென்றனர்.

இதில் என்ன கொடுமை என்றால் எனது உடல் எப்படியானது கரடுமுரடானதா வாளிப்பான வளவளப்பானதா என்பதை அறிய ஏதோ உடல்தரக்கட்டுப்பாட்டாளர் என்பது போல மெதுவாக தடவியதை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
என்ன செய்வது,சுயவரத்துக்கு என்று வந்துவிட்டால் எதையெல்லாமோ சகித்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது. பகலெல்லாம் வருவோர் போவோரைப் பார்ப்பதும்அவர்கள் பேசுவதை; கேட்பதுமாக நாட்களின் பொழுதுகள் கழிந்தன.
நாட்கள் செல்லச் செல்ல எனக்கு வயது எறிக் கொண்டிருப்பதாக உணர்ந்தேன்.
இரவெல்லாம் மௌனமாக அழுவேன்.விடிநத்தும்: இன்றாவது எனக்கானவன் வரமாட்டானா என வரும் இளைஞர்களின் முகங்களையெல்லாம் ஏக்கத்துடன் பார்ப்பேன்.அவர்களில் எனக்கானவன் என்பக்கம் வந்து என்னை வாரி அணைத்து தன் உடலில் படரவிடமாட்டானா என ஏங்கினேன்.
இறைவா என்னை அழகாகப் படைத்தும் அழகிய நிறத்தைக் கொடுத்தும் ஏன் எந்தவொரு இளைஞனும் விரும்பவில்லை என்று தவித்த போது,ஒரு இளைஞன் நேராக என்னிடம் வந்தான்.அவன் கைகளும் பார்வையும் வேறெங்கும் செல்லவில்லை.எந்தப் பதட்டமும் இல்லாமல் என்னைக் கழட்டி எடுத்துக் கொண்டு காசுப் பட்டடைக்குச் சென்று என்னை வரித்துக் கொள்ள பணம் கொடுத்துவிட்டு என்னை அவன் வீட்டுக்குள் கொண்டு சென்றான்.
எனது உடல் அழகிய இளஞ்சிவப்பு நிறம்.
அவன் என்னை தன்னுடன் கூட்டிக் கொண்டு வெளியில் போகும் போதும்,கல்யாண வீடுகளுக்கோ,ஏதாவது புத்தக வெளியீடுகளுக்கோ,கோவில் திருவிழாக்களுக்கோ போகும் போதெல்லாம் என்னை தன் நெஞ்சொடு தழுவி அழைத்துச் செல்வார். அப்பொழுதெல்லாம் என்னைக் காண்போர் இவ்வளவு அழகா என வியப்புடன் பார்ப்பார்கள்,அது எனக்குப் பெரு மகிழ்ச்சியைத் தரும்,நான் கொடுத்து வைத்திருக்கிறேன்; என நினைச்சுக் கொள்வேன்.
வியப்புடன் பார்த்தவர்களில்,இதுவும் ஒரு அழகா என அலட்சியப்படுத்திய இளைஞர்களும் இருந்தார்கள்.அவர்களுக்கு என்னுடையவர் மீது ஒரு காழ்பு;பணர்ச்சி.தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன என்பது போல நான் ஒருவனுக்கு உடமையானபின் கவலைப்பட்டு யாதொன்றம் நடைபெறப் போவதில்லை என்று,சுயம்வரத்தில் தேர்ந்தெடுக்கத் தவறியவர்கள் கவலைப்பட வேண்டியதுதான்.
ஏன்னை விரும்பி வரித்துக் கொண்டவர் எப்பொழுதும் என்னைத் தன் நெஞ்சோடும் உடலோடும் இணைத்துக் கொண்ட அந்த மகிழ்ச்சியும் பெருமையும் இரண்டு வருடங்களின் பின் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது.
நாட்கள் செல்லச் செல்ல என்னைத் தன் நெஞ்சோடு அணைப்பதை நிறத்திக் கொண்டார்.எனது கவர்ச்சித் தரம் குறைந்துவிட்டது என்று ஒதுக்கத் தொடங்கினார்.
எனது நிலையை நினைத்து நான் மௌனமாக அழத் தொடங்கினேன்.அழுவதைத் தவிர வேறு வழி எதுவும் எனக்குத் தெரியவில்லை.யாரிடம் நோவேன் யார்க்கெடுத்து உரைப்பேன் என என் தலையில் எழுதிய விதியை நினைச்சு வெதும்பினேன்.
அழகும் இளமையும் குறைந்து எனது உடல் நிறம் குறைந்து வெளிறியதால் அவர் என்னைத் தன் நெஞ்சோடு அணைக்கவில்லை. என்னிடத்தை இன்னொரு அழகி நிரப்பிக் கொண்டாள்.இப்பொழுதெல்லாம் அவர் மார்பில் அவளே படர்கிறாள்.
என்னைப் பார்க்கும் அந்த மாநிற அழகியின் ஏளன எகத்தாளம் கண்டு பல நாட்களாகக் குமுறிக் கொண்டிருந்தேன். நான் கொஞ்சமும் அவர் இப்படிச் செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை, ஒரு நாள் என்னை எடுத்து பொத்திப் பிடித்து ஒரு பைக்குள் போட்டு குப்பை போடும் பெரிய இரும்புக் கொன்ரயினருக்குள் தூக்கிப் போட்டார்.இவ்வளவுதான் என் வாழ்வா என்று குழறி அழுதேன்.எவரின் செவிகளிலும் எனது பரிதாபமான அழுகை கேட்கவில்லை.கேட்கவே கேட்காது.

எறிந்த இடம் நாற்றமடித்தது.சுவாசிக்க முடியவில்லை.குப்பைக்குள் கிடக்கிறேன்.என்னையும் சேர்த்து அள்ளிக் கொண்டு போக வரும் லொறிச் சத்தம் மெதுவாகக் கேட்டது. குப்பை லொறி எனக்கருகில் வருவதை அதன் உறுமல் உணர்த்தியது.
இனி எனக்கு என்ன நடக்கப் போகுதென்பதை நானறியேன்.அழகும் இளமையம் இருக்கும் போது பாவித்துவிட்டு தூக்கியெறியும் மனிதர்கள் என்னை சும்மா விடுவார்களா.
இரக்கமற்ற மனிதனான ஞானசெல்வம் என்பவர் இளஞ்சிவப்பு புல்லோவரரான என்னை வெளிறிப் போனேன் என்பதற்காக தூக்கியெறிந்த எனது கதையைத்தான் இவ்வளவு நேரமும் சொல்லிக் கொண்டிருந்தேன், ம் என்:ன செய்வது.
![]()