பலதும் பத்தும்

கடனை அடைக்க திருடிய தொழிலதிபர்!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் சியோன் பகுதியைச் சேர்ந்தவர் 49 வயது மோகன் கோகடே.

மோகனின் குடும்பம் நன்கு படித்த மற்றும் வசதியான குடும்பம். இவரது சகோதரி டுபாயிலும், சகோதரர் அமெரிக்காவிலும் வசிக்கின்றனர்.

இவரது ஒரு மகன் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட், மற்றொரு மகன் இன்ஜினியர் ஆவார். மோகன் முன்பு தனது தந்தையுடன் சேர்ந்து தோட்ட தொழில் செய்து வந்தார்.

வசதியான பின்னணி இருந்தும், ஒன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானதால் அவர் பெரும் கடன் சுமைக்கு ஆளானார்.

இந்தக் கடனை அடைப்பதற்காக திருடத் தொடங்கியுள்ளார்.

சியோன் மற்றும் பிற இடங்களில் நகை பறிப்புகளில் மோகன் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த ஜனவரி 25 அன்று சியோனில் ஒரு பெண்ணிடம் பைக்கில் சென்று சங்கிலியை பறித்துச் சென்றார். முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் விசாரணையை தொடங்கினர்.

அடையாளம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு குற்றத்திற்குப் பிறகும் மோகன் தனது உடைகளை மாற்றிக்கொள்வார். மேலும் எப்போதும் ஹெல்மெட் அணிந்திருப்பார்.

அவர் உடைகளை மாற்றினாலும், ஒவ்வொரு முறையும் அதே ஜோடி சப்பாத்துகளை அணிந்திருந்தார்.

பொலிஸார் சுமார் 80 சிசிடிவிகாட்சிகளை ஆய்வு செய்தபோது, முகம் தெரியாவிட்டாலும் அவர் அணிந்திருந்த சப்பாத்துகள் மட்டும் மாறாமல் இருந்ததைக் கவனித்தனர். இதுவே அவர் பிடிக்க முக்கியத் துப்பாக அமைந்தது.

மோகன் நெரூலில் மோட்டார் சைக்கிளை திருடி, அதைப் பயன்படுத்தி சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஒவ்வொரு குற்றத்திற்குப் பிறகும் வாகனத்தை தானேயில் உள்ள ஒரு பகுதியில் நிறுத்திவிட்டு தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

அவர் மீண்டும் அடுத்த திருட்டுக்காக வாகனத்தை எடுக்க வந்தபோது, அவரது சப்பாத்தின் அடையாளத்தை வைத்து பொலிஸார் அவரை மடக்கிப் பிடித்தனர்.

சுமார் 20-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் இவருக்குத் தொடர்பு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகித்து அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *