முச்சந்தி

நீறு பூத்த நெருப்பாக செச்னியா; ரஷ்ய ஆதிக்கத்தால் அமைதி திரும்பியதா?… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(முன்னூறு ஆண்டுகளாக கவ்காஷிய மலைகளில் நீறு பூத்த நெருப்பாக எரிந்து கொண்டு இருந்த தேசம் இப்போது அமைதி திரும்பி அபிவிருத்தியில் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஐரோப்பாவின் மிகப் பெரிய பள்ளிவாசல் செச்னியாவில் ஆறு வருடங்கள் முன்பு திறந்து வைக்கப்பட்டது.)

செச்னியாவில் நிலவிய போர் முடிந்து இரு தசாப்தங்கள் ஆகிவிட்டன. சுமார்
முன்னூறு ஆண்டு கால பிரச்சனையாக குமுறிய கவ்காஷிய மலைகளில் நீறு பூத்த நெருப்பாக எரிந்து கொண்டு இருந்த தேசம் இப்போது அமைதி திரும்பி அபிவிருத்தியில் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

ஐரோப்பாவின் மிகப் பெரிய பள்ளிவாசல்:

அது மாத்திரமன்றி, ஐரோப்பாவின் மிகப் பெரிய பள்ளிவாசல் செச்னியாவில் (Chechnya) ஆறு வருடங்கள் முன்பு திறந்து வைக்கப்பட்டது. ‘பக்ர் அல் முஸ்லிமீன்’ (முஸ்லிம்களின் பெருமைக்குரிய தளம்) எனும் பெயரில் பள்ளிவாசல் திறந்து வைக்கப்பட்டதுடன் இதற்கு ரஷ்ய, சவுதி அரேபியா நிதியுதவியும் உதவிகளையும் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஒரே நேரத்தில் 30,000 பேரை உள்ளடக்கக்கூடிய வகையில் நான்கு பிரதான வாயில்கள் கொண்ட நவீன கட்டிடக் கலைத் தொழிநுட்பத்தில் குறித்த பள்ளிவாசல் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவே ஐரோப்பாவில் அளவில் பெரியதும் அதேவேளை அழகானதுமான பள்ளிவாசல் எனவும் செச்னிய தலைவர் ரம்சான் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி புட்டின் பல தடவை இந்த பள்ளிவாசலுக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னூறு ஆண்டு கால பிணக்கு:

ரஷ்யாவின் ஜார் (Czar) ஆட்சியாளர்களின் படைகள் செச்சினியர்களின் நிலங்களை 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆக்கிரமைத்தனர். அன்று ஆரம்பித்த பிரச்சனை நீண்ட காலமாக நீடித்து வந்தது. அன்றிலிருந்து இலட்சக்கணக்கான மக்கள் தனிநாடு கோரி போராடி வந்தனர்.

1991 இல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் செச்னியா விடுதலையை நாடியது. ரஷ்யாவுடனான முதலாவது செச்சினியப் போரின் போது (1994-1996) செச்னியரல்லாத சிறுபான்மையோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் அது நிழல் அரசை அறிவித்தது. ஆனாலும் 1999 இல் இடம்பெற்ற இரண்டாம் போரின் பின்னர் ரஷ்யா தனது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செச்னியாவைக் கொண்டுவந்தது.

ரஷ்யாவோடு எல்லையைக் கொண்டுள்ள மத்திய ஆசியாவின் முஸ்லிம் பிராந்தியமான செச்னியா சுமார் 12300 சதுர கிலோமீற்றர் பரப்பளவு மட்டுமே கொண்டது. இங்கு வாழும் மக்கள் தொகை 1.5 மில்லியன்.

செச்னியா கிட்டத்தட்ட எல்லா பக்கங்களிலும் ரஷ்ய பிரதேசத்தால் சூழப்பட்டுள்ளது, வடக்கு கவ்காசஸ் மலைத்தொடரில் வடமேற்கே ஸ்தாவ்ரபோல் பிரதேசம் , வடகிழக்கு மற்றும் கிழக்கில் தாகெஸ்தான் குடியரசும், தெற்கில் ஜோர்ஜியா, மேற்கே இங்குஷேத்தியா மற்றும் வடக்கு அசேத்தியா ஆகிய ரஷ்யக் குடியரசுகளும் அமைந்துள்ளன.

நிரந்தர அமைதி மற்றும் பாதுகாப்பு:

நீண்ட கால போரின் பின்னர் நிரந்தர அமைதி மற்றும் பாதுகாப்பு தான் இப்போது செச்னியா மக்களுக்கு தேவை என்றும் கூறுகின்றனர். பெரும்பாலான செச்சின்ய மக்களை பொறுத்தவரை இந்த நிரந்தர அமைதி மற்றும் பாதுகாப்பு என்பது செச்னியா சுதந்திர நாடாவதால் மட்டுமே சாத்தியம் என்றும் கருதினர்.ஆயினும் ரஷ்ய அரசு அவர்களது மண்ணில் இருந்து ஒரு பகுதி பிரிவதை அனுமதிக்க முடியாது என்று அறிவித்தனர்.

ரஷ்யா என்னதான் செச்னியா தங்களது பகுதி என்று சொன்னாலும், செச்னியா மக்களை பொறுத்தவரை அவர்கள் என்றுமே தங்களை ரஷ்யாவின் ஒரு பகுதியாக நினைத்ததில்லை, அத்துடன் விரும்பியதில்லை. மேலும் செச்னியா ரஷ்யாவின் நிலப்பகுதியும் இல்லை என்றும் வாதிடுகின்றனர்.

சோவியத் ஒன்றிய பிளவு :

சோவியத் ஒன்றிய பிளவின் பின்னர் 1991 ஆம் ஆண்டு கால கட்டத்தில் தாங்கள் ஒரு சுதந்திர நாடு என்று செச்னியர்கள் அறிவித்து கொண்டார்கள். அதன் பின் ரஷ்ய கூட்டரசிற்கும், செச்னியாவிற்கும் இடையே இரு யுத்தங்கள் தொடர்ந்து மறுபடியும் செச்னியா, ரஷ்ய கூட்டரசு ஆதிக்கத்தின் கீழ் 2000 ஆண்டின் இறுதியில் வந்தது.

ரஷ்ய தேசம் ஐரோப்பாவின் கிழக்கிலிருந்து ஆசியாவின் கிழக்கு வரை பரந்து விரிந்த பகுதி. ரஷ்ய அரசியல் சாசனத்தின்படி, ரஷ்யா, 83 பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
(83 federal members of Federation). அவற்றில் 21 குடியரசுகள் (Republics) உள்ளன.

1991 இல் ரஷ்ய சம்மேளனம் உருவான போது, ரஷ்யாவில் இருந்த வெவ்வேறு இனத்தவருக்கு (உதாரணத்திற்கு செச்னியர்கள்) அவர்கள் சார்ந்த இனம், மொழி வாரியாக குடியரசுகள் உருவாக்கப்பட்டன. இந்த குடியரசுகள் சுதந்திர நாடுகள் கிடையாது. இவை ரஷ்யாவின் கட்டுபாட்டுக்குள்லேயே இருந்தன. ரஷ்யாவின் ஒரு பகுதியாகவே அறியப்படும்.

ரஷ்ய சம்மேளனமும் குடியரசுகளும் :

ஆனால் ரஷ்ய சம்மேளனத்தின் மற்ற பகுதிகளை விட இவற்றுக்கு அதிகாரம் அதிகம். இந்த குடியரசுகளுக்கு தன்னாட்சி அதிகாரமும் (Autonomous) உண்டு. ஒவ்வொரு குடியரசும் தங்களுடைய அரசியல் சாசனத்தை (Constitution) உருவாக்கி கொண்டது. பாராளுமன்றம், குடியரசு அதிபர் என்று ஒரு நாட்டிற்கு இருக்கக்கூடிய எல்லா பதவிகளும் உள்ளன. குடியரசின் உள்விவகாரங்களை (Internal Affairs) எல்லாம் அவர்களே பார்த்துக் கொள்வார்கள். ஆனால் வெளியுறவு மற்றும் ராணுவ அதிகாரங்கள் (External Affairs and Military) எல்லாம் ரஷ்யாவிடம் இருக்கும்.

அதுமட்டுமல்லாமல், இந்த குடியரசுகளின் அதிபரை, ரஷ்ய அதிபர் தான் தேர்ந்தெடுப்பார். ஆனாலும் இன்றைய அதிபர் புடின் அவர்கள் ரஷ்யாவின் தலைமை பொறுப்புக்கு வந்த பிறகு குடியரசுகளின் அதிகாரங்களை பெருமளவு குறைத்து விட்டார்.

ரஷ்யாவின் அச்சம்:

வரலாற்றில் சோவியத் யூனியனில் (USSR) இருந்து பிரிந்து சென்ற 14 நாடுகளும் (1991), சோவியத் யூனியனின் குடியரசுகளாக இருந்தவைதான். இதுதான் இன்றைய ரஷ்யாவின் மற்றுமொரு அச்சம். தற்போது ரஷ்ய கூட்டரசின் பகுதிகளாக உள்ள குடியரசுகளும் சுதந்திரம் கேட்க ஆரம்பித்து விட்டால் ரஷ்யாவின் நிலை என்ன ஆகலாம் என அச்சமடைந்துள்ளனர்.

1990களில் பிரிவினை சமிக்ஞையாக, சுதந்திர கோஷமும் எழுந்தது. செச்னியாவில் தான் இது மிக அதிகம் என்றாலும் மற்றய குடியரசுகளிலும் (குறிப்பாக செச்னியாவை சுற்றியுள்ள குடியரசுகளான இங்குஷேடியா (Ingushetia) மற்றும் டகெஸ்டான் (Dagestan)) ஆங்காங்கே எழுந்தன.

வரலாற்றில் 1785 – 1791ல் ரஷ்யர்களுடனான செச்னியர்களின் மோதல் ஆரம்பித்தது. அப்போது ரஷ்யா தன் நிலப்பகுதிகளை விரிவுப்படுத்த ஆரம்பிக்க, அதன் ஒரு பகுதியாக காகசஸ்சை ஆக்கிரமைக்க தொடங்கியது. ஆனால் ஆக்கிரமிப்பு என்பது சுலபத்தில் முடிந்து விடவில்லை. ரஷ்ய படைகள் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டி வந்தது. ஏனென்றால் அந்த பகுதியில் இருந்த மக்களின் போர்த்திறமையும், கொரில்லா யுத்த முறைகளுக்கு பேர் போனவர்களாக இருந்தனர். இன்று வரை மலைப்பகுதியில் செச்னியர்களை தோற்கடிப்பது என்பது ரஷ்ய படைகளுக்கு முடியாத காரியமாகவே உள்ளது.

ரஷ்ய அரசின் ஆட்சி :

இதன் பிறகு 1834 முதல் 1859 வரை, ஷேக் மன்சூர் விட்டுச்சென்ற பணியை இமாம் ஷமீல் (Imam Shameel) தொடர்ந்தார். கடுமையான யுத்தத்திற்கு பிறகு 1859 ல், ரஷ்ய படை காகசஸ் பகுதியை முழுமையாக ஆக்கிரமைத்து ரஷ்ய அரசின் ஆட்சி தொடங்கியது. இதன் பின் 1917 ஆம் ஆண்டு, ரஷ்ய புரட்சிக்கு பிறகு தங்களை சுதந்திர நாடாக செசன்னியர்கள் பிரகடனப்படுத்திக் கொண்டார்கள்.

ஆனால் அது நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. ரஷ்ய படைகள் மறுபடியும் (சோவியத் படைகள்) 1923-இல் செச்ன்யாவையும் இங்குஷேடியாவையும் சேர்த்து செச்சினியா – இங்குஷேடிய தன்னாட்சி பகுதி (Chechen-Ingush Autonomous Region) உருவாக்கப்பட்டது.
பிறகு இதுவே 1930-இல், செச்னியா – இங்குஷேடிய தன்னாட்சி குடியரசு (Chechen-Ingush Autonomous Republic) என்று மாறியது.

1917ல் சோவியத் உருவாக்கத்தின் பிறகு தம்மை விடுவிததுக் கொள்வதற்காக செச்னிய மக்கள் அவ்வப் போது நடத்திய போராட்டங்களும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. அதன் தொடராக 1922ல் செச்னியா சோவியத்தின் ஒரு அங்கமாக குடியரசானது.

இரண்டாம் உலகப்போர் :

1944-ஆம் ஆண்டு, தங்கள் விடுதலைக்காக, ஹிட்லரின் நாஜி படைகளுக்கு செச்னியர்கள் உதவுவதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். அதற்கு தண்டனை என்று, செச்னியா மக்களை கஜகஸ்தானுக்கும், சைபீரியாவிற்கும் நாடு கடத்த உத்தரவிட்டார்.

1944ல் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட செச்னியர்கள் இங்குஷ் மற்றும் வட கோகாஷிய மக்கள் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டு சைபீரியா மற்றும் மத்திய ஆசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

1991ல் சோவியத் யூனியன் சரிவடைந்த பிறகு ரஷ்ய கூட்டமைப்பில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்வதற்கான ஒருங்கிணைக்கப்பட்ட சுதந்திரப் போராட்டத்தை செச்னியா மக்கள் மீள மீண்டும் தொடங்கினர்.

1991 ஆகஸ்ட்டில் செச்னியா அரசியல் வாதியும் முன்னாள் சோவியத்தின் விமாப் படை ஜெனரளுமான ஜகார் டுடாயேவ் என்பவர் உள்ளுர் கம்யூனிஸ அரசுக்கு எதிராக ஒரு சதிப் புரட்சியை மேற்கொண்டார். 1991 அக்டோபரில் ஜகார் டுடாயேவ் செச்னியாவின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். நவம்பர் மாதத்தில் அவர் செச்னியா ரஷ்யாவிடம் இருந்து சுதந்திரம் பெற்று விட்டதாக ஒரு தலைப்பட்சமாகப் பிரகடனம் செய்தார்.

1994 முதல் யுத்தம் :

1994 டிசம்பர் 11ல் ரஷ்யா செச்னியாவை மீண்டும் ஆக்கிரமித்தது. விரைவாக 1995 மார்ச்சில் ரஷ்யப் படைகள் செச்னியாவின் தலைநகரான குரொஸ்னியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அதன் பிறகு 1996 ஏப்பிரல் 21ல் ஜகார் டுடாயேவ் ரஷ்யாவின் இலக்கு வைக்கப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.்அதன் பிறகு முன்னாள் கெரில்லாத் தலைவர் அஸ்லன் மஷ்கடோவ் செச்னிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். 1997 மே இல் அன்றைய ரஷ்ய ஜனாதிபதி பொரிஸ் யெல்ஸ்டின் மற்றும் அஸ்லான் மஷ்கடோவ் ஆகியோர் ஒரு இடைக்கால சமாதான உடன்படிக்கையில் ஒப்பமிட்டனர்.

ரஷ்யாவுக்கு எதிராக செச்னியாவில் இரண்டு ஆயுதப் போராட்டங்கள் நடந்துள்ளன. ஒன்று 1994 டிசம்பர் முதல் 1996 ஆகஸ்ட் வரை நீடித்தது.

1996 நவம்பர் நடுப்பகுதியில் யெல்ட்ஸின் மற்றும் மஷ்கடோவ் ஆகியோர் பொருளாதார உறவுகள் மற்றும் 1994 முதல் 96 வரையான யுத்தக் காலத்தில் பாதிக்கப்பட்ட செச்னிய மக்களுக்கான இழப்பீடுகள் என்பன தொடர்பன ஒரு உடன்படிக்கையில் ஒப்பமிட்டனர்.

1997 மே 12ல் செச்னியாவின் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அஸ்லான் மஷ்கடோவ் மொஸ்கோவுக்கு விஜயம் மேற்கொண்டார். அங்கு அவர் ரஷ்ய ஜனாதிபதியுடன் ரஷ்யா செச்னியா உறவுகள் பற்றிய கொள்கைகளும் சமாதானமும் என்ற உடன்படிக்கையில் முறைப்படி ஒப்பமிட்டார்.

1999 இல் இரண்டாவது போர்:

இரண்டாவது போர் 1999 ஆகஸ்ட் ஆரம்பித்தது. இவ்விரு போராட்டங்களின் போதும் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான செச்னிய மக்கள் கொல்லப்பட்டனர் நான்கு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தங்களது சொந்த இருப்பிடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். இருந்தாலும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகம் என்றே கருதப்படுகின்றது.

நீண்ட போர்களின் பின்னர் 2003 புதிய ரஷ்ய அரசியலமைப்பு செச்னியாவுக்கு அதிக சுயாட்சியை அளித்தது. ரஷ்ய கூட்டமைப்பிற்குள் அதன் அந்தஸ்தை உள்ளடக்கியதாக, அக்மத் கதிரோவ் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆயினும் 2004 ஜனாதிபதி கதிரோவ் வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார். 2005 மார்ச் பிரிவினைவாதத் தலைவர் அஸ்லான் மஸ்கடோவ் ரஷ்யப் படைகளால் கொல்லப்பட்டார். இதன் பின் 2006 மார்ச் படுகொலை செய்யப்பட்ட ஜனாதிபதி அக்மத் கதிரோவின் மகன் ரம்ஜான் கதிரோவ் பிரதமரானார். 2006 ஜூலை ரஷ்யாவின் பரம வைரி ஷமில் பசாயேவ், அண்டை நாடான இங்குஷெட்டியாவில் நடந்த வெடிவிபத்தில் இறந்தார்.

நீண்ட கால இரண்டு மோசமான போர் அழிவை ஏற்படுத்திய மோதல்களில் குரொஸ்னி நகரம் உலகின் மிகவும் உருக்குலைக்கப்பட்ட நகரமாக மாற்றப்பட்டது. தலைநகர் குரொஸ்னி தான் இந்த மோதல்களின் மத்தியப் புள்ளியாக என்றும் இருந்தது. 2003ம் ஆண்டளவில் இந்த நகரில் சேதமடையாத கட்டிடங்களே இல்லை என்று கூறும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருந்தது.

புட்டினின் புனரமைப்பு :

அதன் பிறகு, போர் முடிவில் குரொஷ்னி நகரம் ரஷ்ய நிதி உதவித் திட்டத்தின் கீழ் புதுத் தோற்றம் பெறும் வகையில் மீள் கட்டமைப்புக்கும் உற்படுத்தப்பட்டது.
ஒரு காலத்தில் யுத்ததால் பாதிக்கப்பட்ட இந்த நகரில் இன்று வானை முட்டும் அளவுக்கு உயரமான நவீன கட்டிடங்களைக் காண முடிகின்றது. இங்கு தான் ரஷ்யாவின் மிக உயரமான மினாரத் கோபுரத்தைக் கொண்ட மிகப் பெரிய பள்ளிவாசலும் அமைந்துள்ளது. புட்டினின் அரசால் புனரமைப்பு என கட்டப்பட்ட இப்பள்ளிவாசல் செச்னியாவின் இதயமாக கருதப்படுகின்றது.

கடந்த 20 ஆண்டுகளாக நடந்த போரில் மட்டும் ஐந்தில் ஒரு செச்னியர் உயிரிழந்திருக்கின்றனர். எண்ணற்றவர்கள் அகதிகளாய் வெளியேறினர். ஆயுனும் ரஷ்யா தன் முடிவில் உறுதியாய், தனக்கு ஆதரவான அரசாங்கத்தை செச்ன்யாவில் நிறுவியுள்ளது. 2004 இருந்து இன்றுவரை ரஷ்யா ஆதரவு அரசாங்கம் தான் செச்ன்யாவில் செயற்பட்டு வருகிறது.

2009 ஆம் ஆண்டு ஏப்ரலில் ரஷ்யா தன் படைகளை செச்னியாவிலிருந்து திரும்பப்பெற்றது. அதேபோல் செச்சினிய போராட்டகாரர்களும் ஆகஸ்ட் 2009இல் சண்டையை நிறுத்தினர். ரஷ்யாவின் வரலாற்றில் நடந்த நீண்ட கால உள்நாட்டு போரின் பின் செச்னியாவை தன்னுள் வைத்திருக்க முழு முதற்காரணம் அந்த பகுதியின் இயற்கை வளம் மற்றும் கஸ்பியன் கடலில் கண்டெடுக்கப்பட்டுள்ள எண்ணெய் வளம் ஆகும். அத்துடன் செச்னியா பிரிந்து சுதந்திரம் அடைந்து விட்டால் அது ரஷ்யாவிற்கு தர்ம சங்கடமான நிலையைத் தரும்.

செச்னியா பிரிந்து விடுதலை பெற்றால் மற்றய குடியரசுகளை பிரிவினைக்கு தூண்டிவிட்டதாய் அமையும் என ரஷ்யா அஞ்சுகிறது. மற்றும் அடிப்படைவாத இஸ்லாமிய ஆட்சி கவ்காஸ் பிராந்தியத்தில் அமைந்து விடும் என்றும் ரஷ்யா அச்சமடைகிறது.

தற்போது செச்னியாவில் அமைதி நிலவினாலும் எப்போதாவது செச்னியர்கள் மலைகளிலிருந்து படையோடு வருவார்கள் என்ற அச்சம் இருந்து கொண்டேதானிருக்கும் (ஏனென்றால் 1996 ஆம் ஆண்டு இப்படித்தான் நடந்தது). ரஷ்யா, இதையெல்லாம் நன்கு உணர்ந்தேயிருக்கிறது என்பதும் உண்மை.

ஒருவேளை, ரஷ்யா எதிர்பார்ப்பது
போல, செச்னியர்கள் இன்று சமாதானமாக அமைதிக்கு
திரும்பியிருந்தாலும், செச்சினியர்கள் கடந்த காலத்தை
மறப்பார்களா என்பது சவாலான கேள்வியாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *