சீன அரசுக்குள் உள்ளகப் போர்… ராணுவ தலைமையின் அதிகார போட்டி!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(தாய்வான், தென் சீனக் கடல் மற்றும் கிழக்கு சீனக் கடல் போன்ற பகுதிகளில் சீனா கடுமையான ராணுவ நிலைப்பாட்டை எடுத்துள்ள காலகட்டத்தில் இந்த இராணுவ விசாரணை பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சீனாவின் ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் அதிகாரப்பிடி வலுவாக இருந்தாலும், மந்தமான பொருளாதாரம், ராணுவத்தில் அதிருப்தி மற்றும் முன்னாள் தலைவர்கள், மற்றும் ராணுவத் தலைமை உள்ளிட்ட தரப்புகளிலிருந்து மறைமுக சவால்களை எதிர்கொள்கிறார்)
சீன ராணுவத்தின் உயர் அதிகாரியான ஜாங் யூக்ஸியாவை பதவியிலிருந்து சீன அதிபர் ஜி ஜின் பெங் நீக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு, ஜாங் மற்றும் ஜி ஜின் பிங் இடையே அதிகாரப் போராட்டம் இருப்பதாக பெய்ஜிங்கில் வதந்திகள் பரவின. தாய்வானைக் கைப்பற்றுவதில் சீனாவின் வெற்றி வாய்ப்புகள் குறித்து அதிபர் ஜியை விட ஜெனரல் ஜாங்கிற்கு குறைவான நம்பிக்கை இருந்ததாகக் கூறப்பட்டது. தற்போது ராணுவ சட்டமன்றம் ஜாங்கின் பதவி நீக்கத்தை தெரிவிக்கும் அறிக்கையில் ஒழுக்கம் மற்றும் அரச சட்ட மீறல்களைக் காரணமாக காட்டியுள்ளது.
வலுவிலக்கும் அதிகாரப்பிடி :
2026 தொடக்கத்தில், சீனாவின் ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் அதிகாரப்பிடி வலுவாக இருந்தாலும், மந்தமான பொருளாதாரம், ராணுவத்தில் அதிருப்தி மற்றும் முன்னாள் தலைவர்கள், மற்றும் ராணுவத் தலைமை உள்ளிட்ட தரப்புகளிலிருந்து மறைமுக சவால்களை எதிர்கொள்கிறார். சீன ராணுவத்தை தூய்மைப்படுத்தல் மற்றும் அரசியல் மாற்றங்களுக்கு அவர் வழிவகுக்கின்றார் என்றும் கூறப்படுகிறது.

அணுசக்தி ரகசியங்கள் கசிந்த குற்றச்சாட்டு, சீன அதிபரையே வீழ்த்த முயற்சி என பல்வேறு குற்றச்சாட்டுகள் ராணுவ உயர் அதிகாரியான ஜாங் யூக்ஸியா முன் வைக்கப்பட்டன. ஒரு காலத்தில் திரு. ஜின் பிங்கின் மிகவும் நம்பகமானவராகக் கருதப்பட்ட ஜாங் யூக்ஸியா கடந்த வாரம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர் அமெரிக்காவிற்கு சீனாவின் அணுசக்தி ரகசியங்களை பணத்திற்காக கசியவிட்டதாக கூறப்படுவதை இன்னும் சீன அரசு உறுதிப்படுத்தவில்லை.
ஆனாலும் ரகசியங்களை கசிய விட்டது மட்டுமல்ல, அதையும் தாண்டி வேறு பல சீன அரச ரகசியங்களை கசிய விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இருந்தாலும் உண்மையான காரணம் ஜீ ஜின் பிங்கை பதவியிலிருந்து இறக்குவதை ஜாங் யூக்ஸியா முன்னெடுத்தார் என்று சொல்லப்படுகிறது.
அத்துடன் அதிபர் ஜீ ஜின் பிங் தங்கியிருந்த ஹோட்டலில் அவரை கொல்ல ஜெனரல் ஜாங் யூக்ஸியா ஆட்கள் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், அதில் ஜீ ஜின் பிங் உயிர் தப்பியதாகவும் வதந்திகள் பரப்பப்பட்டன. ஆனால் இது உண்மையான தகவல்கள் என உறுதி படுத்தப்படவில்லை. இத்தனைக்கும் ஜெனரல் ஜாங் மற்றும் ஜீ ஜின் பிங் இருவரும் பள்ளித் தோழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ராணுவ உயர் அதிகாரி பதவி நீக்கம்
சீன ராணுவத்தில் அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது. அதிபர் ஷி ஜின்பிங்கின் நம்பிக்கை பெற்ற பல ராணுவத் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதால், ராணுவத்தில் உள்ளவர்கள் தங்களுக்குள் மோதிக்கொள்வதாகவும், சீன ராணுவ தலைவர் பதவியை அதிபர் ஷி ஜின்பிங் தன் வசமே வைத்துள்ளார். அத்துடன் ராணுவத்தில் கடும் அதிகாரப் போட்டி நிலவுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 24/1/26 சனிக்கிழமை மத்திய ராணுவ ஆணையம் (Central Military Commission – CMC) விசாரணையைத் தொடங்குவதற்கு முன்புவரை, ஜெனரல் ஜாங் சீன ராணுவத்தின் (PLA) செயல்பாட்டுத் தலைவராகவும் ஆளும் பொலிட்பீரோவின் உறுப்பினராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சீன ராணுவத்தின் மற்றொரு ஆளும் உறுப்பினரான லியு ஜென்லியும் சீன கம்யூனிஸ்ட் கட்சியால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மேற்குலக ஊடகங்களில் சீனாவின் பழைய தலைவர்களின் எதிர்ப்பு உயர்ந்து வருகிறது என்றும், பொருளாதார விவகாரங்களில் ஷி ஜின்பிங்கின் கொள்கைகளை விமர்சிப்பதாகவும், இது சீனாவின் அரசியல் அழுத்தத்தை அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை 2023இல் இருந்து சீன கம்யூனிஸ்ட் கட்சியில் நிலவும் உட்கட்சி பிரச்சனையால் அதிபர் ஷி ஜின்பிங்கின் பிடி மேலும் இறுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பல நிர்வாக மாற்றங்கள் காரணமாக 2025இல் பொலிட்பீரோவின் கொள்கை முடிவுகளில் மாற்றங்கள் ஏற்பட்டது. இதுவே கட்சியின் அதிகார போட்டிக்கான அறிகுறியாகப் பார்க்கப்பட்டது.
அமெரிக்காவிற்கு அணுசக்தி ரகசியம்:
அணுசக்தி ரகசியங்களை அமெரிக்காவிற்கு கசியவிடுவது முதல் ஆட்சிக் கவிழ்ப்பு மற்றும் கட்சி பிரிவு உள் மோதல்கள் வரை அனைத்தும் சர்வதேச அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.பெய்ஜிங்கில் துப்பாக்கிச் சண்டை பற்றிய வதந்திகள் கூட மேற்குலக நாடுகளின் ஊடகங்கள் முதன்மைப்படுத்தி வெளியிட்டன. சீனாவிலிருந்து பெறப்படும் தகவல்களுக்கு குறிப்பிடத்தக்க தடைகள் உள்ளன. அதனால் அங்கே உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாது.
அதிபர் ஜி ஜின் பிங் சீனாவின் முழு அதிகாரத்தையும் இன்னுமே கட்டுப்படுத்துகிறார். இதன் விளைவாக ஜீ ஜின் பிங்கை கொல்லத்தான் துப்பாக்கி சூடு நடந்தது என சில வதந்திகள் வெளியாகின.
சீனாவில் பொருளாதார நெருக்கடி:
2021 முதல் நீடிக்கும் நிலச் சொத்து சந்தை நெருக்கடி மற்றும் மந்தமான பொருளாதாரத்தால் ஷி ஜின்பிங்கின் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது. இது கட்சிக்குள் அதிகாரத்தை விட்டுக்கொடுக்கக் கோரும் குரல்களை அதிகரித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
2025ம் ஆண்டில் பொருளாதரம் 5% வளர்ச்சி இலக்கை எட்டினாலும், கட்டமைப்புச் சிக்கல்கள், மக்கள் தொகை குறைவு மற்றும் கடன் சுமை காரணமாக, கடந்த பல தசாப்தங்களில் இல்லாத குறைந்தபட்ச வளர்ச்சியை நோக்கி சீனா பயணிக்கிறது, இது உலகப் பொருளாதாரத்தையும் உலுக்கக்கூடியது.
2026-ல் சீனா, பொருளாதார மற்றும் அரசியல் சவால்களுக்கு மத்தியில் ஒரு நுட்பமான அதிகார
சமநிலையை நோக்கி நகர வேண்டிய நிலையில் உள்ளது. சீனாவின் பொருளாதாரம் தற்போது நீண்டகால மந்தநிலை, ரியல் எஸ்டேட் துறை சரிவு, நுகர்வோர் செலவினக் குறைவு மற்றும் பணச்சரிவு அழுத்தங்களால் (deflation) கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.
ஆனால் சீனப் பொருளாதார நெருக்கடியின் முக்கிய காரணங்களாக ரியல் எஸ்டேட் துறை சரிவு ஏற்பட்டுள்ளது. சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 25-30% பங்களிக்கும் ரியல் எஸ்டேட் துறை, ஐந்தாவது ஆண்டாகத் தொடரும் வீழ்ச்சியில் உள்ளது. 80 மில்லியனுக்கும் அதிகமான வீடுகள் விற்கப்படாமல் அல்லது காலியாக உள்ளதால், பல பெரிய தனியார் நிறுவனங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் திணறுகின்றனர்.
மேலும் பலவீனமான நுகர்வு மற்றும் பணச்சரிவு மக்கள் நுகர்வோர் செலவினங்களைக் குறைத்துள்ளனர், இதனால் விலைவாசி குறைந்து (deflation) பொருளாதாரம் மந்தமடைகிறது. மக்கள் தொகை மற்றும் வேலையின்மை: மக்கள் தொகை வயதாகி வருகிறது மற்றும் குறைகிறது. இளைஞர்களுக்கான வேலையின்மை விகிதம் ஜூலை 2024 முதல் 17% க்கும் அதிகமாக உள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சிக்கு நம்பிக்கை துரோகம்:
75 வயதான ஜாங், ஓய்வு பெறும் வயதைத் தாண்டியும் ஜி ஜின்பிங்கின் நம்பிக்கையால் பதவியில் தொடர அனுமதிக்கப்பட்டவர். சீனாவின் மிக உயர்மட்ட ராணுவ அதிகாரிகளில் ஒருவரும், ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் நெருங்கிய கூட்டாளியுமான ஜாங் யூக்ஸியா மீது கடுமையான ஒழுக்க மற்றும் சட்ட மீறல்கள் குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
ஜாங் மற்றும் லியு கம்யூனிஸ்ட் கட்சிக்கு நம்பிக்கை துரோகம் செய்ததாகவும், அரசியல் மற்றும் ஊழல் பிரச்சினைகள் மூலம் இராணுவத்தின் மீதான கட்சியின் முழுமையான நம்பிக்கையை பாதித்ததாகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, நாட்டின் அணு ஆயுதத் திட்டம் தொடர்பான தகவல்களை அமெரிக்காவுக்கு கசியவிட்டதாகவும், பதவி உயர்வுகளுக்காக லஞ்சம் பெற்றதாகவும் ஜாங் மீது குற்றச்சாட்டுகளை அரசு மறுத்துள்ளது.
2012 முதல் தொடங்கிய ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளில் இராணுவமே முக்கிய இலக்காக இருந்து வந்த நிலையில், இப்போது ஜாங் போன்ற மூத்த மற்றும் சக்திவாய்ந்த நபர் விசாரணையில் சிக்கியிருப்பது சீன ராணுவத் தலைமையின் ஸ்திரத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, தாய்வான், தென் சீனக் கடல் மற்றும் கிழக்கு சீனக் கடல் போன்ற பகுதிகளில் சீனா கடுமையான ராணுவ நிலைப்பாட்டை எடுத்துள்ள காலகட்டத்தில் இந்த விசாரணை பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த சுத்திகரிப்பு நடவடிக்கைகள் சீனாவின் அணுசக்தி வல்லரசாகும் முயற்சிக்கும், இராணுவ நவீனமயமாக்கல் திட்டங்களுக்கும் அரசியல் அழுத்தங்களை உருவாக்கக்கூடும் என சர்வதேச பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இத்தகைய களையெடுப்பு ஜாங் யூக்ஸியா மீதான விசாரணை சீன ராணுவத்திற்குள் நடக்கும் மிகப் பெரிய அரசியல் மாற்றங்களின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
![]()