மொட்டின் ஆதிக்கத்தில் சஜித்தின் கட்சி!

பொதுஜன பெரமுனவின் ஆதிக்கத்தில்தான் தற்போது ஐக்கிய மக்கள் சக்தி உள்ளது . தயாசிறி போன்றவர்களுடன் சஜித் பிரேமதாச இணைந்து செயற்பட்டால் அவருக்குள்ள வாக்குகளும் இல்லாது போகும் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற கொள்கலன் நிலையத் தொழிற்படுத்துநர்களுக்கு உரிமமளித்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
பாராளுமன்ற நடவடிக்கைகளை குழப்புவதே எதிர்க்கட்சியின் பிரதான பணியாக உள்ளது தயாசிறி ஜயசேகர எம்.பி. இதனையே பிரதான செயற்பாடாக கொண்டுள்ளார். தயாசிறி ஜயசேகர எம்.பி பாவம் .இன்று எந்தக் கட்சியில் உள்ளார் என்று அவருக்கே தெரியாதுள்ளது .
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி வந்து ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடித்து பலமான அரசியல் கட்சியை உருவாக்கினார்.ஐக்கிய மக்கள் சக்தியை இன்று பொதுஜன பெரமுனவினர் ஆக்கிரமித்துள்ளனர் . தயாசிறி போன்றவர்களுடன் சஜித் பிரேமதாச இணைந்து செயற்பட்டால் அவருக்குள்ள வாக்குகளும் இல்லாது போகும்.
பொதுஜன பெரமுனவின்எம்.பி.க்களும் , பாராளுமன்ற உறுப்புரிமையை பணத்திற்கு விற்றவரும் தான் பாராளுமன்றத்தில் கூச்சலிட்டு சபை நடவடிக்கைகளை குழப்புகின்றனர் .இவர்களை கணக்கில் எடுக்காமலேயே செல்ல வேண்டியுள்ளது என்றார்.
![]()