கவிதைகள்
நம்மை அறிவது முக்கியமே!… கவிதை… ஜெயராமசர்மா

தேடித் தேடித் திரிகின்றோம்
தேர்ந்து எடுக்கத் தெரியவில்லை
ஓடி ஓடிப் பார்க்கின்றோம்
ஒன்றும் கண்ணில் படவில்லை
பாதை தெரியா தவிக்கின்றோம்
போதை ஆட்டிப் படைக்கிறதே
காதில் ஏதோ கேட்கிறதே
கவனமாய் கேட்டால் விடிவாகும்
நல்லன நாடா திரிகின்றோம்
நஞ்சுகள் பக்கம் பார்க்கின்றோம்
சொல்வதைக் கேளா திரிகின்றோம்
சுதந்திரம் இழந்து தவிக்கின்றோம்
தங்கம் தகரம் தெரியாது
தவியாய் தவித்து நிற்கின்றோம்
பொங்கும் கோபக் கனிலினிலே
பொசுங்கி போக முயல்கின்றோம்
ஆசைக் கடலில் மூழ்கின்றோம்
அனைத்தும் இழந்து தவிக்கின்றோம்
மாசை அகற்ற நினையாமல்
மண்ணில் உலவித் திரிகின்றோம்
சொர்க்கம் நரகம் நமக்குள்ளே
சுவையும் மணமும் நமக்குள்ளே
நன்மை தீமை நமக்குள்ளே
நம்மை அறிவது முக்கியமே !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()
