முச்சந்தி

டிரம்ப் மூன்றாவது முறை அதிபராகும் திட்டம் ?…  அதீத ஆசைகளும் உலகை மிரட்டும் அரசியலும்!…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டாம் முறையாக கடந்த வருடம் ஜனவரியில் பதவியேற்றார். அதிபர் பதவியில் ஒராண்டை நிறைவு செய்த நிலையில், அவரின் அதீத ஆசைகளும், உலகை மிரட்டும் அரசியலால் பலத்த சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் டிரம்ப் மூன்றாவது முறை அதிபராகும் திட்டம் குறித்து அவரது ஆதரவாளர்கள் உறுதியாகவே உள்ளனர். இந்த
அதீத ஆசைகளும் உலகை மிரட்டும் அரசியலும் அமெரிக்க அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது)
வெனிசுலா, கனடா மற்றும் கிரீன்லாந்தை அமெரிக்கப் பகுதிகளாகக் காட்டும் செயற்கை நுண்ணறிவு வரைபடத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அண்மையில் வெளியிட்டுள்ளார். அவரின் எண்ணம் தான் என்ன ? திட்டங்கள் தான் என்ன என்பதை எவரும் இலகுவாக அறிய முடியாது.
பொருளாதார ரீதியாக நாடுகளை வசப்படுத்துவது மட்டுமன்றி, உலகின் பல நாடுகளில் அவரது வரிச் சுமை அதிகரித்து வருகிறது. பிரான்ஸ் மீதான மிரட்டல் என்று கூறுமளவிற்கு, தனது டிரம்பின் அமைதி வாரியத்தில் இணையாத பிரான்சின் மதுபானங்கள் மீது இருநூறு வீத வரி விதிப்பதாக மிரட்டியுள்ளார். அவரது அதீத விருப்பங்களுக்கு இது ஒன்றே உதாரணமாகும்.
டொனால்ட் டிரம்பின் அதீத ஆசைகளில் இன்னொரு முக்கிய ஆசை, தொடர்ந்து மூன்றாவது முறை அதிபராகும் திட்டமாகும். டிரம்ப்பின் ஆட்சியில் அதிகாரத்தை நிலைநாட்டுதல், அரசியல் எதிரிகளை பழிவாங்குதல், குடிவரவாளர்கள் மீது கடுமையான கொள்கைகள், புதைபடிவ எரிபொருட்களை அதிகரித்தல், மற்றும் தனது கொள்கைகளுக்கு உலக நாடுகளின் ஆதரவை பெற அழுத்தங்களை ஏற்படுத்தி வருகிறார்.
இது போன்ற செயல்கள் அவரது அதிபர் பதவிக்கு திரும்பும் லட்சியத்தால் உந்தப்படுகின்றன என்றே கூறலாம்.
ஒருமுறை அல்ல அதற்கும் அதிகமாக இரண்டு அல்லது மூன்று அல்லது நான்கு முறைகள் அமெரிக்க அதிபராக சேவை செய்ய முடிவது என் வாழ்வில் மிகுந்த பெருமைக்குரிய விஷயம் என்று அண்மையில் தெரிவித்து இருந்தார்.
அதீதம் நிறைந்த டிரம்பின் ஆசைகள்:
மூன்றாவது முறை அதிபராகும் கனவில்,2028 தேர்தலில் வெற்றி பெற்று, அமெரிக்க அதிபராக மீண்டும் பதவி வகிப்பதே அவரது முக்கிய ஆசைகளில் ஒன்று. தொடரும் அதிபர் பதவி குறித்த ஆசைகளுக்காக, அடிக்கடி அதிகார கொள்கையை மாற்றுதல், அதிகாரத்தை குவித்தல் போன்ற அவரது நடவடிக்கைகள் சர்வாதிகாரப் போக்கைக் கொண்டிருப்பதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் தனக்கு எதிராக உள்ளவர்களை பழிவாங்க ஆட்சி அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்துவதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. மேலும் குடிவரவு கொள்கைகளை மீறி, குடியேறியவர்களை முகாம்களில் அடைத்து, பாரிய நாடுகடத்தல் நடவடிக்கைகளை அவர் மேற்கொள்கிறார். சர்வதேச உறவு நிலையில் காசா அமைதி வாரியம் போன்ற திட்டங்களை நிறுவி, நாடுகளை அதில் இணைய கட்டாயப்படுத்தி அழைப்பு விடுப்பது, அதன் மூலம் தனது செல்வாக்கை நிலைநாட்டுவது அவரது ராஜதந்திரத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது.
பிரான்ஸ் மீதான மிரட்டலாக, தனது அமைதி வாரியத்தில் இணையாத பிரான்ஸ் மதுபானங்கள் மீது இருநூறு வீத வரி விதிப்பதாக மிரட்டியமை அவரது அதீத விருப்பங்களுக்கு உதாரணமாகும். மேலும் சர்வதேச அளவில் சர்ச்சைக்குரிய செயல்களின் மூலம் டிரம்பின் அதீத ஆசைகள் தொடர்கிறது. அதிபர் பதவி மீண்டும் கிடைப்பது, அதிகாரத்தை நிலைநாட்டுவது, மற்றும் உலக அரங்கில் அமெரிக்காவின் அதிகாரத்தை தனது விருப்பப்படி மாற்றுவது போன்றவற்றை மையமாகக் கொண்டு பல நாடுகளை மிரட்டியும் வருகிறார்.
டிரம்பின் நோபல் பரிசு ஆசை:
கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஆசைப்பட்டு, ஏழு போர்களை நிறுத்தி விட்டேன் என்று அதிபர் டிரம்ப் தம்பட்டம் அடித்தாலும், அவர் தேர்வு செய்யப்படவில்லை.
எந்த ஆண்டும் இல்லாத வகையில் 2025ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு முக்கியத்துவம் பெற்றது. அதற்கு காரணம் அதிபர் டிரம்பின் கடந்த கால பேச்சும், திரும்ப திரும்ப நான் பல போர்களை நிறுத்தி விட்டேன் என்றும் கூறியது தான். அதுமட்டுமின்றி அவர் ஒரு படி மேலே போய், ‘எனக்கு நோபல் பரிசு தராவிட்டால் அது அமெரிக்காவுக்கு பெரும் அவமானம்’ என்றும் தெரிவித்தது தான் அனைவரது கவனம் பெற்றது.
கடந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசை, வெனிசுலாவை சேர்ந்த மரியா கொரினா மச்சாடோ வென்றாலும், டிரம்பின் அதீத ஆசைக்கனவு குறைந்தபாடில்லை. அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காதமையால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் கோபமடைந்தார்.
என்ன தான் டிரம்ப் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, பாரிய தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், அமைதிக்கான நோபல் பரிசு குறி தவறியது என்பதே வெளிப்படை. டிரம்ப் ஏழு போர்களை நிறுத்திவிட்டேன் என்று கூறி வந்தாலும், டிரம்புக்கு நோர்வே குழுவினர் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கவில்லை என்பதே உண்மை ஆகும்.
இதனையடுத்து நோர்வே நோபல் குழு அமைதியை விட அரசியலுக்கு முன்னுரிமை அளிப்பதாக வெள்ளை மாளிகை குற்றம் சாட்டியது. உலகின் மிகவும் மதிப்புமிக்க விருதை வெல்ல ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பல மாதங்களாக முயற்சி செய்து பிரச்சாரம் செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
வெனிசுலா அதிபர் நிக்கலஸ் மதுரோ கைதானதற்கு மாற்றீடாக, கடந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்ற வெனிசுலா எதிர்கட்சி தலைவர் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோ தனது பரிசை அதிபர் டிரம்பிற்கு வழங்கியுள்ளார்.
மூன்றாவது முறை அதிபராகும் ஆசை:
டொனால்ட் டிரம்ப் தனது சொந்த விருப்பப்படி, அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்திருத்தம் கொண்டு வர விரும்புகிறார். இது சாத்தியமாகவல்ல கனவா, அல்லது கானல் நீரா என்று விரைவில் தெரியவரும்.
இரண்டாவது பதவிக்காலம் முடியும் சமயத்தில் 82 வயதை நிறைவு செய்யப் போகும் டிரம்பிடம், அமெரிக்க நாட்டின் மிகக் கடினமான வேலையில் தொடர்ந்து சேவை புரிய விருப்பமா என்று கேட்கப்பட்டது, மூன்றாவது முறையாக அதிபராக வேண்டும் என்று தான் விரும்புவதாக கூறியுள்ளார்.
ஆனாலும் எந்த நபரும் இரண்டாவது முறைக்குப் பிறகு தேர்வாகக்கூடாது என்று அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால், டிரம்ப் ஆதரவாளர்கள் சிலர் அதற்கு வேறு வழிகள் இருக்கக்கூடும் என்று பரிந்துரைக்கிறார்கள். மூன்றாவது முறை தேர்தலில் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி கேட்கப்பட்டபோது, அதற்கென உள்ள சில வழிமுறைகளின் மூலம் அதைச் செய்ய முடியும் என்று கூறினார்.
அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டுமென்றால் செனட் மற்றும் பிரதிநிதிகள் அவையில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவும், அதோடு நாட்டின் மாகாண அரசுகளிடம் இருந்து நான்கில் மூன்று பங்கு ஆதரவும் வேண்டும். ஆனால் டிரம்பின் குடியரசுக் கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கட்டுப்படுத்தினாலும் தேவையான பெரும்பான்மை அதற்கு இல்லை. அதோடு மாகாண அவைகளில் 50ல் 18 ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளன.
ஆனாலும் அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தில் நீதிமன்றத்துக்கு தெரியாத ஒரு ஓட்டை இருப்பதாக டிரம்ப் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். ஒரு நபர் இரண்டு ஆட்சிக்காலத்துக்கும் மேல் தேர்வாவதைத்தான் தடை செய்கிறதே தவிர, பின்தொடர்வதைப்்பற்றி அத்திருத்தம் எதுவும் குறிப்பிடவில்லை.
இந்தக் கோட்பாட்டின்படி இன்னொரு வேட்பாளருக்கு டிரம்ப் துணை அதிபராக இருக்கலாம். 2028 தேர்தலின் போது இப்போது அவருக்கு துணை அதிபராக இருக்கும் ஜே.டி.வான்ஸுக்குக் கூட. அவர்கள் வென்றால் அந்த வேட்பாளர் அதிபராக பதவிப் பிரமாணம் செய்ய வேண்டும் மற்றும் உடனே ராஜினாமாவும் செய்யலாம் – அவரைத் தொடர்ந்து டிரம்ப் பதவியேற்க வழிவகுக்கலாம் என்ற ஊகங்களும் உள்ளன.
இரண்டு முறைக்கு மேல் அமெரிக்க அதிபராக இருந்த ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தனது நான்காவது பதவிக்காலம் தொடங்கி மூன்றாவது மாதம் முடிந்த நிலையில் 1945ம் வருடம் ஏப்ரல் மாதம் அவர் உயிரிழந்தார். அவர் ஆட்சிக்காலத்தின் முக்கியப் பகுதிகளான பெரும் பொருளாதார வீழ்ச்சியும், இரண்டாம் உலகப்போரும் அவர் அதிபர் காலம் தொடர்ந்ததற்கான காரணிகளாகக் கூறப்படுகின்றன.
அதுவரை அதிபர்கள் இரண்டு முறைக்கு மேல் பதவியில் இருக்கக் கூடாது என்பது சட்டமாக எழுதப்படவில்லை. அதற்கு மாறாக 1796ல் ஜார்ஜ் வாஷிங்டன் மூன்றாவது முறை பதவி ஏற்க மறுத்ததன் தொடர்ச்சியாக பின்தொடரப்பட்ட ஒரு சடங்காகத்தான் இருந்தது. இதன் பின்னரே ரூஸ்வெல்ட் தொடர்ந்து பதவியில் இருந்ததால் இந்தச் சடங்கை சட்டமாக, 22வது சட்டத்திருத்தமாக 1951இல் நிறைவேற்றினார்கள்.
வெனிசுலா, கனடா, கிரீன்லாந் அமெரிக்க வசமாகுமா?
சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய வெனிசுலா, கனடா கிரீன்லாந்தை அமெரிக்கப் பகுதிகளாகக் காட்டும் செயற்கை நுண்ணறிவு வரைபடத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அண்மையில் வெளியிட்டுள்ளார்.
உலகின் அதிக எண்ணெய் வளமிக்க நாடான வெனிசுலா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கப் படைகள், அந்நாட்டு ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவை சிறைப் பிடித்து சென்றது. தொடர்ந்து அந்நாட்டை அமெரிக்கா நிர்வாகம் செய்யும் என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார்.
டென்மார்க் நாட்டின் தன்னாட்சிப் பகுதியாக விளங்கும் கிரீன்லாந்தை முழுவதுமாக அமெரிக்கா ஆக்கிரமிக்க வேண்டும் என ட்ரம்ப் கூறி வருகிறார். அமெரிக்காவின் பாதுகாப்புக்கு கிரீன்லாந்து மிகவும் முக்கியம் என்றும், நாங்கள் கிரீன்லாந்தை கைப்பற்றாவிட்டால் சீனா அல்லது ரஷ்யா கைப்பற்றிவிடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு கிரீன்லாந்து மற்றும் டென்மார்க் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் டிரம்ப் அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. இதேவேளை அமெரிக்காவின் இந்த முடிவுக்கு, டென்மார்க் மற்றும் ஏராளமான ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வெனிசுலா, கனடா நாடுகள் மற்றும் கிரீன்லாந்தை அமெரிக்காவின் பகுதிகளாகக் குறிப்பிட்டு செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட வரைபடத்தை அதிபர் டிரம்ப் நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளமைக்கு பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *