ஆஸியில் வெறுப்பு பேச்சு எதிர்ப்பு சட்டம்… பல்லின கலாச்சாரத்தில் தீவிர முரண்பாடு?… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(வெறுப்பு பேச்சை கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தின் உச்ச விளைவாக அவுஸ்திரேலியாவில் செயல்படும் ஒரு நாசி அமைப்பான ‘National Socialist Network’ (NSN), தனது அமைப்பைக் கலைப்பதாக அறிவித்துள்ளது. மேலும் ‘White Australia Party’ மற்றும் ‘European Australian Movement’ போன்ற பல தீவிரவாத குழுக்கள் இந்த புதிய சட்டங்களின் பின்னர் தங்கள் செயற்பாட்டு நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்)
அவுஸ்திரேலியாவில் வெறுப்பு பேச்சை கட்டுப்படுத்த புதிய சட்டம் (hate speech legislation) கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த வருட இறுதியில் டிசம்பர் 14இல் அவுஸ்திரேலியாவின் பொண்டி (Bondi) கடற்கரை பகுதியில் யூதர்களின் ஹனுக்கா விழாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வெறுப்பு பேச்சு மற்றும் வன்முறையைத் தூண்டும் செயல்களை கட்டுப்படுத்தும் புதிய சட்டங்களை அரசாங்கம் கொண்டு வந்துள்ளதாக பிரதமர் அந்தோணி அல்பனீஸ் அறிவித்துள்ளார்.
பொண்டி தாக்குதல், இஸ்லாமிய தீவிரவாத அமைப்பால் தூண்டப்பட்டதாக சிட்னி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இருந்து குடிபெயர்ந்த 50 வயது சாஜித் அக்ரம் மற்றும் அவரது 24 வயது மகன் நவீத் அக்ரம் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சாஜித் பொலிஸாரால் உடனடியாக சுட்டுக் கொல்லப்பட்டார், நவீத் பல குற்றச்சாட்டுகளுக்கு உட்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
வெறுப்பு பேச்சு புதிய சட்டத்தில் (hate speech legislation) முக்கிய பல விடயங்கள் குறித்து தொடர்ந்து நாடளாவிய ரீதியாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. வெறுப்பு பேச்சு மற்றும் வன்முறையை ஊக்குவிப்பவர்களை எளிதில் குற்றம் சாட்டும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன் அதிகமான தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும் வெறுப்பு பேச்சில் ஈடுபடும் அமைப்புகளை குறிவைக்கும் தனி நடைமுறை அமுல்படுத்தப்படும். இந்த சட்டத்தால் பல்லின கலாச்சார நாட்டின் அடிப்படை மனித உரிமைகள் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் யூத அமைப்புக்கள், அவுஸ்திரேலிய அரசு பல ஆண்டுகளாக யூத விரோத தாக்குதல்களை புறக்கணித்துள்ளது என பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பாக குற்றம் சாட்டியுள்ளனர். பொண்டி கடற்கரை தாக்குதலில் பத்து வயது மடில்டா உள்ளிட்ட பலர் உயிரிழந்ததால், நாடு முழுவதும் துயரமும் கோபமும் ஏற்பட்டது. அதேவேளை சிட்னி மற்றும் மெல்போர்னில் நடந்த யூதர்களை குறிவைத்த தீக்கிரை சம்பவங்கள் காரணமாக, அவுஸ்திரேலியா கடந்த ஆகஸ்டில் ஈரான் நாட்டின் தூதுவரை வெளியேற்றியதும் குறிப்பிடத்தக்கது.
கடுமையான துப்பாக்கி சட்டங்கள்:
அவுஸ்திரேலியாவில், பொதுமக்களிடம் இருக்கும் அதிகப்படியான துப்பாக்கிகளை, வாங்கி அழிக்கும் சட்டவரைவை ஒன்று நிறைவேறி உள்ளது. பிரதமர் அந்தோணி அல்பனீஸ், துப்பாக்கி பயன்பாட்டிற்கான சட்டங்களை கடுமையாக்க முடிவு செய்துள்ளார்.
அரசு நிதியுதவியுடன் மக்களிடமிருந்து துப்பாக்கிகளை வாங்கி அழிப்பது, ஒருவருக்கு ஐந்து துப்பாக்கிகள் மட்டுமே அனுமதி என, பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்ட சட்டவரைவு நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. இதனுடன், இனம், மதத்திற்கு எதிரான வெறுப்பு பேச்சுகளை துாண்டுவதற்கு எதிராகவும் சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது.
இந்நிலையில் புதிய சட்டம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொதுமக்களும் கருத்துச் சுதந்திரம் தொடர்பான கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர். புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டால், பொதுக் கூட்டங்களைத் தடுக்கக் காவல்துறைக்குக் கூடுதல் அதிகாரம் கிடைக்கக்கூடும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
சிட்னியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் வகையில், நியூ சவுத் வேல்ஸ் அரசு, துப்பாக்கி சட்டங்களை கடுமைப்படுத்த மாநில சட்டமன்றமும் உத்தரவிட்டுள்ளது. பொண்டி படுகொலைகளெ தொடர்ந்து அவுஸ்திரேலிய தேசிய காவல்துறை இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வலையமைப்புகளை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்தச் சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டால் அவுஸ்திரேலியாவில் வெறுப்பு பேச்சு மற்றும் மத அடிப்படையிலான வன்முறையை கட்டுப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக அமையும் என்று ஆளும் அரசு தெரிவித்துள்ளது.
பிரதமரின் கடும் போக்கு:
புதிய சட்டங்களின்படி வெறுப்பு, பிரிவினை மற்றும் தீவிரவாதக் கருத்துகளை
பரப்புபவர்களையும் குறிவைக்கும் என அவுஸ்திரேலிய பிரதமர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெறுப்புப் பேச்சைக் கட்டுப்படுத்த தனது அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் வெறுப்பைப் பரப்புபவர்களுக்கு விசாக்களை ரத்து செய்யவோ அல்லது மறுக்கவோ உள்துறை அமைச்சருக்கு புதிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. யூத எதிர்ப்பை தடுக்கவும், எதிர்த்துப் போராடுவதையும், தகுந்த முறையில் பதிலளிப்பதையும் உறுதிசெய்ய ஒரு புதிய பணிக்குழு நிறுவப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனாலும் லிபரல் (Liberal) எதிர்க்கட்சியும் கிரீன்ஸ் கட்சியும் (Greens) கூட்டாக இந்த சட்ட வரைவை ஆரம்பத்திலேயே எதிர்த்தன. பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் அமைதியான இருப்புக்காகவே அரசாங்கம் ‘யூத எதிர்ப்பு, வெறுப்பு மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடும் மசோதா 2026’ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.
இருப்பினும் இந்த புதிய சட்டம் கருத்து சுதந்திரத்திற்கு இடையூறாக இருக்கலாம் என்று பசுமைக் கட்சியும் கூட்டணி அரசாங்கமும் கூறியுள்ளன. இதற்கிடையில், கடுமையாக எதிர்க்கப்பட்ட ‘இன இழிவுபடுத்துதல்’ தொடர்பான சட்டப் பிரிவு இப்போது நீக்கப்பட்டுள்ளது. புதிய திருத்திய சட்டவரைவு நாடாளுமன்றத்தில் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.
இருப்பினும், கிரீன்ஸ் கட்சித் தலைவர் லாரிசா வாட்டர்ஸ் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்களுக்கு தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் மற்ற சட்டங்கள் மேலும் விவாதிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.
கடும்போக்கில் யூத அமைப்புகள்:
ஆனால் அவுஸ்திரேலியா வெறுப்புப் பேச்சு சட்டத்தில் கடுமையான மாற்றங்களை கொண்டுவர பல்வேறு யூத அமைப்புகளும் கோரியுள்ளன. குறிப்பாக இன வெறுப்பைத் தூண்டுவதற்கு எதிரான புதிய சட்டத் திருத்தங்களில் உள்ள ஒரு குறிப்பிட்ட பாதுகாப்பு விதியை (Defence) நீக்குமாறு அந்நாட்டின் முதன்மை யூத அமைப்பின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் ஆளும் லேபர் கட்சியின் (Labor Party) புதிய சட்டத்தின் கீழ், கல்வி அல்லது மத விவாதங்களின் போது மத நூல்களிலிருந்து நேரடியாக மேற்கோள் காட்டிப் பேசுபவர்களுக்குத் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இந்தச் சலுகையையும் அகற்ற வேண்டும் என்று அவுஸ்திரேலிய யூதர்களின் நிர்வாகக் குழுவின் தலைமை நிர்வாகி பீட்டர் வெர்தைம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தச் சட்டவரைவு குறித்த நாடாளுமன்ற விசாரணையில் பேசிய பீட்டர் வெர்தைம், மத நூல்களை மேற்கோள் காட்டி வெறுப்புணர்வைப் பரப்ப நினைக்கும் போதகர்களுக்கு இந்த விலக்கு ஒரு சட்ட ஓட்டையாக அமைந்துவிடும் என்று எச்சரித்துள்ளார். வெறுப்புப் பேச்சுக்கு எதிராகக் கொண்டு வரப்படும் சட்டத்தில் இத்தகைய விலக்குகள் இருப்பது, வெறுப்புணர்வை விதைப்பவர்களுக்குச் சாதகமாக அமைந்துவிடும் என்று அவர் வாதிடுகிறார்.
ஆனால் இந்தக் கோரிக்கை அவுஸ்திரேலியாவின் பல்லின நல்லிணக்கம் மற்றும் மத சுதந்திரத்திற்கு இடையிலான விவாதத்தை மீண்டும் முன்னெடுத்துள்ளது. இதேவேளை வெறுப்பு குழுக்களை தடை செய்ய அரசு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தப் புதிய சட்ட சூழ்நிலை அறிமுகமாகிய சில நாட்களில் , அவுஸ்திரேலியாவில் செயல்படும் பல சக்திவாய்ந்த (Neo-Nazi) நவ நாசிச அமைப்புகள் கலைக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சட்டம் வெறுப்புக் குழுக்களின் தலைவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அத்தகைய அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்க அதிகாரம் அளிக்கிறது.
இதன் உச்ச விளைவாக அவுஸ்திரேலியாவில் செயல்படும் ஒரு நாசி அமைப்பான ‘National Socialist Network’ (NSN), தனது அமைப்பைக் கலைப்பதாக அறிவித்துள்ளது. மேலும்
‘White Australia Party’ மற்றும் ‘European Australian Movement’ போன்ற பல தீவிரவாத குழுக்கள் இந்த புதிய சட்டங்களின் பின்னர் தங்கள் செயற்பாட்டை நடவடிக்கைகளை நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்கட்சிக்குள் பிளவு:
அவுஸ்திரேலிய எதிர்கட்சியான லிபரல் கட்சியின் தலைமைப் பதவியில் சுசன் லே நியமிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைவதற்கு முன்னரே, கட்சிக்குள் தற்போது நிலவும் தலைமைத்துவ பதற்றங்கள் அவுஸ்திரேலிய அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளன.
குறிப்பாக, வெறுப்பு பேச்சு சட்டங்கள் தொடர்பான கொள்கை முரண்பாடுகள் கட்சிக்குள் ஒரு ஆழமான நிலையற்ற தன்மையை உருவாக்கியுள்ளன. இத்தகைய சூழலில், உட்கட்சி நிலைத்தன்மையை மீளக் கட்டியெழுப்புவது என்பது வெறும் நிர்வாக முடிவு மட்டுமல்ல, அது கட்சியின் எதிர்கால இருப்பைத் தீர்மானிக்கும் ஒரு மூலோபாயத் தேவையாக இருக்கிறது.
தற்போது, சுசன் லீ மிதவாத அணி மற்றும் மத்திய அணியின் பெரும் பகுதியினரின் ஆதரவுடன் தனது பதவியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். மிதவாத அணியினரின் தற்போதைய நிலைப்பாடு சுசன் லீயின் தலைமைக்கு ஒரு பாதுகாப்பு வளையமாகச் செயல்படுகிறது. இருப்பினும், அண்மைய சட்டமியற்றல் விவகாரங்கள் இந்தத் தலைமைத்துவ அமைப்பில் பாரிய வெடிப்பு நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.
இதேவேளை வெறுப்பு பேச்சு சட்டங்களை வலுப்படுத்தும் சட்டமூலம் தொடர்பான விவகாரம், லிபரல் மற்றும் நேஷனல்ஸ் கட்சிகளுக்கு இடையே ஒரு மூலோபாயப் பிளவையும் ஏற்படுத்தியுள்ளது. நிழல் அமைச்சரவை (Shadow Cabinet) எடுத்த கூட்டு முடிவை மீறி, நேஷனல்ஸ் கட்சி கூட்டணியை முறிக்கத் துணிந்தது, எதிர்க்கட்சியின் நிர்வாக ஒழுக்கத்தின் தோல்வியாகவே பார்க்கப்படுகிறது. இது சுசன் லீயின் தலைமைத்துவ அதிகாரத்தின் மீதான நேரடி சவாலாக அமைந்தது.
இதற்கிடையில் இன வெறுப்பை விதைக்கும் எந்தவொரு அமைப்பும் தொடர நாட்டில் அனுமதிக்கப்படாது என்று உள்துறை அமைச்சர் டோனி பேர்க் கடும் தொனியில் தெரிவித்துள்ளார். ஆனாலும் இந்த சட்டத்தால் பல்லின கலாச்சார நாட்டின் அடிப்படை மனித உரிமைகள் பாதிக்கப்படும் என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
![]()