இலங்கை

மட்டக்களப்பிலும் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

மட்டக்களப்பில் இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு மாகாண வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து மட்டக்களப்பு காந்தி பூங்கா வரையில் ஊர்வலம் செல்ல ஆயத்தமான நிலையில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு ஊர்வலத்தினை தடுப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டபோதிலும் காந்திபூங்காவில் தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறுவதன் காரணமாக அங்கு செல்லமுடியாது என பொலிஸார் தடைகளை ஏற்படுத்தினர்.

எனினும் தமது போராட்டம் வழமையாக காந்திபூங்காவில் நிறைவடைவதனால் அங்கு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு காணாமல் போனவர்களின் உறவினர்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டன.

எனினும் அங்குசெல்வதற்கு அனுமதிக்கமுடியாது என பொலிஸார் தெரிவித்த நிலையில் கல்லடி பாலத்தில் ஆரம்பித்து தனியார் பஸ் நிலையத்தில் போராட்டத்தினை முடிப்பது என பொலிஸாரிடம் தெரிவித்ததையடுத்து போராட்டம் நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களிலிருந்து வருகைதந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் உறவினர்கள், பொது அமைப்புகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கல்லடி பாலத்திலிருந்து பல்வேறு கோசங்களுடன் பேரணியானது நினைவு ஊர்தியுடன் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு திருகோணமலை வீதியுடாக மட்டக்களப்பு நகர் நோக்கிசென்றபோது வெள்ளைப்பாலம் அருகில் பொலிஸாரினால் வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டு போராட்டக்காரர்கள் மறிக்கப்பட்டு புதுப்பாலம் ஊடாக பேரணியானது செல்லுமாறு பணிக்கப்பட்டது.

எனினும் தாங்கள் தமது போராட்டத்தினை நகர் ஊடாகவே செல்வோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் பொலிஸாருடன் முரண்பட்டு தள்ளுப்பட்ட நிலையில் பொலிஸார் அப்பகுதி ஊடாக செல்ல அனுமதிக்கப்படாத நிலையில் வெள்ளைப்பாலத்திற்கு அருகில் போராட்டம் மட்டுப்படுத்தப்பட்டு அவ்விடத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கிழக்கு பல்கலைகழக மாணவர்களினால் பிரகடனம் வாசிக்கப்பட்டு போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

  

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *