இலங்கை

வடக்கு,கிழக்கு,மலையகத்தில் இன்று தேசிய மக்கள் சக்தியே பிரதான கட்சி சுமந்திரன் இனவாதம் பேசுகிறார்

வடக்கு , கிழக்கு , மலையகத்தில் பிரதான தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சியாக தேசிய மக்கள் சக்தி தான் உள்ளது .அந்தவகையில் தனக்கான செல்வாக்கை மலினப்படுத்ததும் வகையில் அரசாங்கம் செயற்படவில்லை. இங்கு அபிவிருத்தி திட்டங்களே முன்னெடுக்கப்படுகின்றன அதற்கு இனவாத உருவம் அளிக்காதீர்கள் என வலியுறுத்திய சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க,ரணிலின் அரசாங்கத்தில் பதில் பிரதமராக செயற்பட்ட சுமந்திரன் வடக்கு,கிழக்கு மக்களுக்கு என்ன செய்தார் என்பதனை பட்டியலிட முடியுமா? தோல்வியடைந்து தற்போது வீட்டில் இருப்பதால் இனவாதத்தை சுமந்திரன் கையில் எடுத்துள்ளார் எனவும் குற்றம்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமைஇடம் பெற்ற தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் சட்டத்திருத்த ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றம்சாட்டிய அவர் மேலும் பேசுகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக சிங்கள குடியேற்றத்தை அமைப்பதாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டுகின்றார்கள் .இனவாதமற்ற வகையில் தான் நாங்கள் செயற்படுகிறோம்.ஜனாதிபதி வடக்கு, கிழக்கு மற்றும் மலையக அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கியுள்ளார்.

வடக்கிலும், கிழக்கிலும், மலையகத்திலும் பிரதான தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சியாக தேசிய மக்கள் சக்தி தான் உள்ளது. ஆகவே வடக்கு மக்களின் அபிலாசைகளுக்கும் நம்பிக்கைக்கும் எதிராக நாங்கள் செயற்பட போவதில்லை. வடக்குக்கான அபிவிருத்திகளை துரிதமாக ஆரம்பிப்போம். எதிர்வரும் மாதம் வடக்கு மாகாணத்தில் குடிநீர் திட்டத்தை ஆரம்பிப்போம்.

தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் சுமந்திரன் தேர்தலில் தோல்வியடைந்து தற்போது வீட்டில் இருப்பதால் இனவாதத்தை கையில் எடுத்துள்ளார். ரணிலின் அரசாங்கத்தில் சுமந்திரன் பதில் பிரதமராக செயற்பட்டார். அப்போது வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு என்ன செய்தார் என்பதனை பட்டியலிட முடியுமா? அவர் எதுவுமே செய்யவில்லை. ஆனால் தற்போது இனவாதத்தை முன்னிலைப்படுத்திக் கொண்டு அபிவிருத்தி திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமானால் வெளிப்படையாக பேசலாம். அதனை தவிர்த்து இனவாதத்தை கையில் எடுக்காதீர்கள். இந்த நாட்டில் இனவாதத்தால் தமிழ்,முஸ்லிம் மக்கள் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டார்கள். நாட்டு மக்கள் அனைவருக்கும் தான் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்கிறோம் இதற்கு இனவாதம் என்ற உருவத்தை வழங்காதீர்கள் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *