இலங்கை

உங்கள் சுதந்திர தினத்தை நீங்களே கொண்டாடுங்கள்; தமிழருக்கு இன்று கரிநாளே – சபையில் சாணக்கியன்

வடக்கு,கிழக்கில் தமிழர்களின் இனப் பரம்பலை அழிப்பதற்காக கடந்த கால இனவாத அரசாங்கங்கள் முன்னெடுத்த முயற்சிகளை அநுரகுமார அரசும் தொடர்கின்றது. எனவே எமது மக்களுக்கு நிரந்தரமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு கிடைக்கும் வரையில் தமிழ் மக்களுக்கு இலங்கையின் சுதந்திர நாளான பெப்ரவரி 4 கரிநாளே எனத் தெரிவித்த தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான இரா. சாணக்கியன், சுதந்திர தினத்தை முன்னிட்டு 49 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி தமிழ் அரசியல் கைதிகளை மறந்து விட்டார் எனவும் குற்றம்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் சட்டத்திருத்த ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றம்சாட்டிய அவர் மேலும் பேசுகையில்,

நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் சுதந்திரத்தை கொண்டாடுவது வேடிக்கையாகவுள்ளது.

வடக்கு ,கிழக்கு மாகாணங்களின் சுதந்திர தினம் கரி நாளாக அறிவிக்கப்பட்டு , நாளை (இன்று) சுதந்திர தினத்துக்கு எதிரான நிகழ்வுகள் வடக்கு கிழக்கில் இடம்பெறவுள்ளன. புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு அரசியலமைப்பின் ஊடாக தீர்வு வழங்காதவரை மீண்டும், மீண்டும் சுதந்திர தினத்தை நீங்களே கொண்டாடிக் கொள்ளுங்கள்.

ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலும் தமிழ் மக்களுக்கான சுதந்திரம் மறுக்கப்படுகிறது. திட்டமிட்ட வகையில் இனவழிப்பு இன்றும் இடம்பெறுகிறது. எமது மக்களின் நிலங்கள் இன்றும் ஆக்கிரமிக்கப்படுகின்றன.

1948 ஆம் ஆண்டில் இருந்து இனவழிப்பு இடம்பெறுகிறது. நாட்டின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 49 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக குறிப்பிட்டார்கள். ஆனால் தற்போது அது பற்றி கேட்டால் அரசியல் கைதிகள் என்றால் யார் என்று எம்மிடம் கேட்கிறார்கள். நிலைமை அப்படி மாறிவிட்டது.49 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் ஜனாதிபதிக்கு ஏன் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாமல் போனது? தேசிய மக்கள் சக்தியின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெட்கமிருந்தால் இந்த புறக்கணிப்புக்காக பாராளுமன்றத்தை விட்டு வெளியேற வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக குறிப்பிட்டீர்கள். ஆனால் அதை விட பயங்கரமான சட்டத்தை உருவாக்கவுள்ளீர்கள்.

எம் மண்ணை பாதுகாப்பதற்காக வவுனியாவில் பாரியதொரு எழுச்சிப் போராட்டம் திங்கட்கிழமை இடம்பெற்றது.சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து பெரும்பான்மையினரிடமிருந்து எமது மண்ணை பாதுகாக்க போராடுவதே பெரும் பணியாகவுள்ளது.

வடக்கு, கிழக்கில் தமிழர்களின் பரம்பலை அழிப்பதற்காக 80 ஆண்டு காலப்பகுதியில் மணலாறு பகுதியில் சிங்கள குடியேற்றம் உருவாக்கப்பட்டது. அதன்பின்னர் அது வெலிஓயா என்று பெயர்மாற்றப்பட்டது. அவர்களுக்கு நீர் வழங்குவதற்கு வவுனியா பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டு கிவுல் ஓயாத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கும் முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்கின்றது.

வடக்கு, கிழக்கில் தமிழர்களின் இனப் பரம்பலை அழிப்பதற்காக கடந்த கால இனவாத அரசாங்கங்கள் கொண்டு வந்த திட்டத்தை அநுரகுமார அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்து நிறைவேற்ற முயற்சிக்கிறது. இதற்காக ஆளும் தரப்பில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெட்கப்பட வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *