அரசியலமைப்பு பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து விலக வேண்டும்; சிறிதரனை வலியுறுத்தும் சுமந்திரன்

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அரசியலமைப்பு பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யும் வரை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவராக இருக்க முடியாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாரா ளுமன்ற குழு தலைவராக இராசமாணிக்கம் சாணக்கியன் நியமிக்கப்பட்டமை தொடர்பாக தினக்குரலுக்கு கருத்து தெரிவித்த போதே சுமந்திரன் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் பதவியில் இருந்து விலக கோருவது தொடர்பாக எமது கட்சியின் அரசியல் குழுவில் 3 ஆம் திதி ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது. அதனை அவர் செய்யவில்லை.
கடந்த 24 ஆம் திகதி அவரையும் இணைத்து நடத்திய கூட்டத்தில் அந்த தீர்மானத்தை
அவருக்கு சொன்னோம். அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகும் வரையில் பாராளுமன்ற குழு தலைவராக இருக்க முடியாதென்று தெரிவித்தோம் .
அதை உடனடியாக அமுல்படுத்துவதில்லை எனவும் ஒரு வார காலம் அவகாசம் கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. சிறீதரன் அதனை செய்யவில்லை.
இதன் காரணமாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நானும் பாராளுமன்ற சபாநாயகருக்கு இது தொடர்பில் அறிவித்தோம்.
சிறீதரன் அரசியலமைப்பு பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யும் வரை பாராளுமன்றக் குழுத் தலைவராக இருக்க முடியாது என்றும் அந்த இடைப்பட்ட காலத்தில் தற்காலிகமாக சாணக்கியன் பாராளுமன்ற குழு தலைவராக செயற்படுவார் என்பது சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எமது கட்சியின் பாராளுமன்ற குழுவில் சிறீதரன், சாணக்கியன் ஆகிய இரண்டு பேர் முன்வரிசை உறுப்பினர்களாக உள்ளார்கள்.
அந்த வகையில் பாராளுமன்ற குழு தலைவராக மற்றைய முன்வரிசை உறுப்பினர் சாணக்கியன் தனது கடமைகளை செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது – என்றார்.
![]()