இலங்கை

இன்றைய கரிநாள் போராட்டத்திற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்; மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. சிறிநாத்

காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகியவற்றின் ஊடாக அறைகூவல் விடுக்கப்பட்ட கரிநாள் போராட்டத்திற்கு அதரவு தெரிவித்து அனைவரின் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை தமிழர்களைப் பொருத்தவரையில் கரிநாளாக அனுஸ்டிப்பதற்காக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினரால் விடுக்கப்பட்ட அறைகூவலுக்கு அமைவாக அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி எமது மக்களை அணிதிரட்ட வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது.

புதிதாக வந்திருக்கும் ஆட்சி கூட தமிழ் மக்களுக்கான ஒரு மாற்றத்தைத் தரும் என்ற நம்பிக்கையில் வடகிழக்கு மக்கள் அதற்கு வாக்களித்தும், கடந்த கால தென்னிலங்கைத் தேசியக் கட்சிகள் எவ்வாறான நடைமுறைகளைப் பின்பற்றினவோ அதேபோலவே நடக்கின்றனர்.தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படாத பல முன்னெடுப்புகளையும் மேற்கொண்டும் வருகின்றது. மிக முக்கியமாக தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமையைத் தருவதற்கான எந்த முயற்சியும் இதுவரை செய்யப்படவில்லை. அதற்கான ஆயத்தங்களும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

குறைந்தபட்ச அதிகாரங்களையேனும் கொண்டுள்ள இந்த மாகாணசபைத் தேர்தலைக் கூட நடாத்துவதற்கு ஆட்சியாளர்கள் இன்னமும் தயாராக இல்லை. உள்ளுராட்சித் தேர்தல்களை மிக விரைவாக நடத்தியவர்களால் ஏன் மாகாணசபைத் தேர்தலை நடத்தி தமிழ் மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஊட்ட முடியவில்லை.

இதற்கு அப்பால் தொல்லியல் திணைக்களம், வன இலாகா, வன ஜீவராசிகள், கரையோரத் திணைக்கம் உள்ளிட்டவற்றின் ஊடாகத் துமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களைப் பறிப்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் மகாவலி அபிவிருத்தியின் கிவுல் ஓயாத் திட்டத்தின் ஊடாகவும் இவ்வாறானதொரு உள்நோக்கம் இருப்பதாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

தமிழ் மக்களுக்கான நீதி தராத பட்சத்தில், நிலங்கள் விடுவிக்கப்படாத பட்சத்தில், தமிழ் மக்களின் மொழி உரிமை, நில உரிமை கிடைக்காத பட்சத்தில் அவர்கள் இந்த சுதந்திரநாளை எவ்வாறு ஏற்று நடப்பது. எனவே தமிழரசுக் கட்சியின் சார்பாக, தமிழ் மக்களின் சார்பாக, நாம் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றவர்கள் என்ற ரீதியில் அவர்களின் விரும்பங்களையே நிறைவேற்ற வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

அந்த வகையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகியவற்றின் ஊடாக அறைகூவல் விடுக்கப்பட்ட இந்த விடயத்திலே நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தக் கரிநாள் போராட்டத்திற்கு அதரவு தெரிவத்து. எமது அனைவரின் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.

எனவே உணர்வுள்ள தமிழர்களாக நாம் ஒன்றிணைந்து எமது உரிமைகளுக்காக எமது மொழிக்காக, எமது நிலத்துக்காக இந்த சுதந்திர நாளை கரிநாளாக அனுஸ்டித்து அனைத்து தமிழ் உறவுகளும் ஒன்றுதிரண்டு இந்தப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *