உலகம்

ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை ; டாக்கா நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

பங்களாதேஷின் ‘பூர்வாச்சல் நியூ டவுன்’ அரசு வீட்டுமனைத் திட்டத்தில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து நிலம் ஒதுக்கியதாகத் தொடரப்பட்ட இரண்டு ஊழல் வழக்குகளில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மொத்தம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து டாக்கா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

தலைநகர் டாக்காவில் அரசுக்குச் சொந்தமான 20 காத்தா (பங்களாதேஷ் நில அளவீட்டுக்குப் பயன்படுத்தும் முறை) மற்றும் 10 காத்தா நிலங்களை விதிமுறைகளை மீறி தனது குடும்பத்தினருக்கு ஒதுக்கியதாக ஷேக் ஹசீனா மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இது தொடர்பாக ஊழல் தடுப்பு ஆணையம் கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வழக்குகளைப் பதிவு செய்தது. இந்த வழக்குகளில் ஷேக் ஹசீனா உட்பட 18 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இன்று (பெப்ரவரி 2) டாக்கா சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரோபியுல் ஆலம் வழக்குக்கான தீர்ப்பை வழங்கினார். ஷேக் ஹசீனா: இரண்டு வழக்குகளிலும் தலா 5 ஆண்டுகள் வீதம் மொத்தம் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை.

துலிப் சித்திக்: ஹசீனாவின் மருமகளும், பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினருமான இவருக்கு மொத்தம் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை (ஒவ்வொரு வழக்கும் 2 ஆண்டுகள்). ரத்வான் முஜிப் சித்திக் (பாபி): ஹசீனாவின் மருமகனான இவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அஸ்மினா சித்திக்: இவருக்கும் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மாணவர் போராட்டத்தால் ஏற்பட்ட கடும் நெருக்கடி காரணமாக, ஆகஸ்ட் 5 ஆம் திகதி ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.

அவர் இல்லாத நிலையிலேயே இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. ஏற்கனவே இவர் மீது நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளில் மரண தண்டனை மற்றும் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நில மோசடி வழக்குகளிலும் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *