குருதிக்குள் கிடக்கும் சங்கதிகள்… சிறுகதைத் தொடர் – 12 …. பாழ்நிலா…. மீனாசுந்தர்

மத்தியானத்துலேருந்து இப்பிடியேதான் ஈரக்கொல நடுக்கமாருக்கு. வலி தாங்க முடியல. இடுப்பு புட்டுக்கிட்டு போவுது. லாவு ரெண்டையும் தூக்கிப் புடிச்சமாரி சுருக்கு சுருக்குன்னு ஒரே குத்தல். அடிக்கடி ஒண்ணுக்கு போவணும் போல இருக்கு. காலெல்லாம் வீக்கம் வேற என்ன பண்றது? நான் தாங்கித் தான ஆவணும்.
அந்தக் காலத்து பொம்மணாட்டிவல்லாம் எப்புடித்தான் பத்து, பன்னெண்டுன்னு பெத்தாளுவளோ தெரியல. ஒரே மலைப்பா இருக்கு. ஏன்ங்க உதாரணத்துக்கு வெளில பேவணும்? நானே எங்கம்மாவுக்கு எட்டாவதாதான் பொறந்தேன். எனக்கு பெறவு ஒரு தம்பி, ரெண்டு தங்கச்சிங்க. இன்னமும் அம்மா குத்துக்கல்லு மாதிரிதான் இருக்கு. இத்தனக்கிம் இப்ப இருக்குற வசதி வாய்ப்புல கொஞ்சம் கூட அப்ப கெடயாது. உள்ளூரு மருத்தவச்சி வந்து பாத்தாதான் போச்சி. இல்லாட்டி கத கந்தலாப் போயிடும்.
உண்டாகியிருக்காளான்னு தெரிஞ்சிக்கறதுலேர்ந்து புள்ளய பெத்து வெளில எடுக்கற வரக்கிம் எல்லாத்துக்கும் மருத்துவச்சிதான். அதுல எந்தக் குத்தங்கொறயும் இருந்ததில்லை. ஆனா இப்ப அப்பிடியாருக்கு? தொட்டத்துக்கும் இந்த டாக்டருங்க என்னமோ ஸ்கேனுங்குறாங்க, டெஸ்ட்டுங்குறாங்க. ஒரு மண்ணும் புரியவும் மட்டேங்குது. கேட்டா அவுங்க பெரிய படிப்பு படிச்சவங்களாம். நம்ம மாதிரி ஏழ பாழக்கெல்லாம் இந்தக் கெவுருமெண்டு ஆசுபத்திரிய விட்டா வேறயென்ன வழிருக்கு? அங்கிட்டு இங்கிட்டுன்னு போவுறத்துக்கு ஏதாவது கெதியிருக்கா? அங்கருக்குற டாக்டருவளும், நர்சுவளும் அலட்சியமா என்னத்த சொல்றாளுவளோ அதுதான் நமக்கு விட்ட கெதி. தனியாரு ஆசுபத்திரில கொள்ளையடிக்கிறானுவங்கறது ஒருபுறம் இருந்தாலும் அங்க போயி பாக்குறளவுக்கு நம்மகிட்ட ஏது வசதி? எங்க அப்பன் தாத்தன்யென்ன ஆளுங் கச்சியிலியோ அல்லது ஆண்ட கச்சியிலியோ எம்பிஎம்மெல்வாவா கொள்ளையடிச்சா வெச்சிருக்காவ? ஒழுங்கா பட்டினியில்லாம மூணு வேளையும் சாப்பிடவே சிங்கி அடிக்க வேண்டியிருக்கு.

இது எட்டாவது மாசம். இன்னும் ரெண்டு மாசம் எப்படிப் போவப் போவுதுன்னே தெரியல. ஒரே கவலயாருக்கு. பயமாவும் இருக்கு. என்ன பண்றதுன்னே ஒன்னும் புரியல. ஒரு ஆத்திர அவசரத்துக்குக் கூட உதவிக்கும் ஆளில்ல. எல்லாத்துக்கும் எம் மச்சாந்தான் கிட்டக்க இருக்கு. பாவம் ஆம்பளயா பொறந்துப்புட்டு சின்ன வயசுலேர்ந்தே அது படுற பாட்ட பாத்தாதான் ரொம்ப வேதனையா இருக்கு.
மச்சான் வெளியாளு இல்ல. ஒரு வகையில எங்களுக்குத் தூரத்து ஒறவுதான். ரொம்ப நல்ல மனுசன். முன்னாடியே பல மொற பாத்திருக்கேன்னாலும் பேசினது இல்ல. வேற ஒன்னுமில்லே. அதப் பாத்தாலே எனக்கு வெக்கந்தான். என்னமொ மச்சானை அப்பயிலேர்ந்தே ரொம்பப் புடிக்கும். அதுக்கு எம்மேல எப்படின்னு தெரியல. கலயாணம் ஆன பின்னகூட அதப் பத்தி அதுக்கிட்ட நான்ங் கேட்டதில்ல.
ஊட்டுலதான் சம்மந்தம் பேசினாங்க. சின்னசின்ன விசயங்கள்ல முன்னபின்ன இருந்தாலும் ரெண்டு பேரு ஊட்லயிமே சம்மதிச்சாங்க. வெவரம் தெரிஞ்ச நாள்லருந்து நான் அம்மா, அப்பா சொன்ன சொல்ல மீறினதில்ல. தவுர மச்சான் மேல எனக்கு முன்னாடியே நல்ல மரியாத இருந்திச்சிங்கறதால நானும் ஒடனே ஒத்துக்கிட்டேன்.
பூக்கொல்லை காளியம்மன் கோயில்லதான் எங்க கல்யாணம் நடந்துச்சி. அப்பல்லாம் எவ்ளோ சந்தோசமாயிருந்திச்சு. இந்த மொத நைட்டு வெவகாரத்த சினிமாவுல காட்டுற மாரியே என்னோட சேந்த குட்டிவொல்லாம் ஒரே கிண்டலும் கேலியும் செஞ்சாளுவோ. “ச்சீச்சீ… போங்கடி போக்கத்த இவளுவளெ”ன்னு பேசிப்புட்டு வந்துட்டேன். கோவம்ன்னா நெசக் கோவம்ன்னு நெனச்சிராதிய. சும்மா சிணுங்கிக்கிட்டே பேசுவோம்ல்ல. அப்படித்தானுங்க.
எல்லாம் முடிஞ்சி போச்சி. அப்புறம் என்ன? எனக்குன்னு புதுசாவா எதுவும் செய்யப் போவுது? கொஞ்ச நாளு கழிச்சி ஒரே கொமட்டலா இருந்திச்சு. எப்பவுமே சோறு திங்க புடிக்கல. சாப்பாட்ட பாத்தாலே என்னமோ வெறுப்பாருந்திச்சி. பத்தாததுக்கு கிறுகிறுன்னு மயக்கம் வேற. எந்நேரமும் சோர்ந்து படுத்துக்கிட்டா தேவலாம் போலவே இருக்கும். அப்பவெல்லாம் எம்மச்சாந் தான் ஓடி வந்து பதறும். என்ன பண்ணுது? ஏது பண்ணுதுன்னு தவியா தவிச்சி கேட்டுக்கிட்டே பிராணனை எடுத்துடும். ஏன்னா எம்மேல அதுக்கு அவ்வளவு உசுரு. கால்ள நெருஞ்சி முள்ளு குத்தினாலும் துடிச்சிப் போயிடும்.
மச்சான் பதறினத பாத்து பக்கத்து வூட்டு கெழவியெல்லாம் குசுகுசுன்னு பேசிச் சிரிக்குதுங்க. ஏட்டி இவளே நிய்யி ரொம்ப கொடுத்து வெச்சவடின்னு சாவித்திரி ஆச்சி சொன்னப்ப எனக்கு அவ்ளொ சந்தோசம். ஏலே தம்பி.. ஒன்னும் பதறாம் அப்படிப் போடான்னு என் மச்சானை நவர சொல்லிப்புட்டு, இந்த பொன்னம்மாத்தாதான் எங்கிட்ட வந்து கய்யப் புடிச்சி பாத்துட்டு சொன்னிச்சி.
‘ஏண்டி… திருட்டுச் செறிக்கி… இதுங் கூடவா ஒனக்குத் தெரியல? நிய்யி உண்டாகியிருக்கேடி. ஒண்ணுந் தெரியாத பாப்பா… கதவ போட்டாளாம் தாப்பான்னு அப்படியே நடிக்கிறியேடி கழுத’… ன்னு அது கய்யால செல்லமா தாடையில ஒரு இடி இடிச்சிச்சி. எனக்கு ஒரே வெக்கம். ஆச்சி என்னவோ வில்லங்கம் பண்ணுதுன்னு புரிஞ்சிப் போச்சி. மச்சான பாத்தா அதுக்கு மேல கண்றாவி. திருட்டு முழி முழிச்சிக்கிட்டு கடவாப் பல்லு வரைக்கிம் தெரிய ஈன்னு சிரிச்சிச்சி. அத நேரா பாக்க எனக்கு வெக்கமா இருக்கு. ஆனா அது மொகத்த பாத்தாலே சிரிப்பு சிரிப்பா வருது. அடக்கமுடியாம நானும்ஞ் சிரிச்சிக்கிட்டேருந்தேன். பொம்பளதான் வெக்கப் படுவாளுவ. மச்சானோட வெக்கத்தப் பாத்தா சிரிக்காம அப்புறம் என்ன பண்றது?
ஆத்தா தான் திரும்பவும் சொன்னிச்சி.

”யேலே… போக்கத்த பயலே… குட்டி முழுவாம இருக்காடா. அவள பூ மாதிரி வச்சிக்கிடணும்டா… நல்லா சத்தா சாப்பாடெல்லாம் ஆக்கிப் போடணும்… நெறய்ய பழமெல்லாம் வாங்கியாந்து கொடு. எப்பவும் மனசு நோவாம அவள சந்தோசமா பாத்துக்கடான்னு சொல்லிப்புட்டு, நானு மொதமொதன்னு முழுவாம இருந்தப்ப என் ஊட்டுக்காரு என்னமா பாத்துக்கிட்டாரு தெரியுமான்னு அது கதைய எடுத்து விட சுத்தியிருந்த அத்தினி பேருக்குள்ளயும் ஒரே கலகலப்பு. பெறவு ஒரு முக்கியமான சேதின்னு மச்சானை பாத்து சொன்னிச்சி. பொறக்குற புள்ள ஒன்னமாரி கருங்கொரங்கு மாதிரி இல்லாம எம் பேத்திமாரி நல்லா செவப்பா பொறக்கட்டும்டா… அதுக்கு நாட்டு மருந்து கடையிலருந்து குங்குமப்பூவு வாங்கியாந்து பசும் பால்ல ஆத்தி குடு தெனமும். இதுல கஞ்சத் தனத்த காட்டிப்புடாத. எனம் பேத்திக்கி செய்யிறதா நெனக்காம பொறக்கப்போற ஒன்ம் புள்ளக்கி செய்யிறதா நெனச்சிக்கிட்டு வாங்கியாந்து போடு. புரிஞ்சிதா?”
ஆத்தா கௌம்பிப் போன கொஞ்ச நேரத்துல வெளில போயிருந்த என் அத்தயிம் ரெண்டு நாத்தினாளுவளும் வந்திச்சிங்க. சேதிய சொன்னதுதான் தாமுசம். சந்தோசத்துல அப்பிடியே துள்ளிக் குதிச்சிச்சுங்க. என் அத்த என்கிட்ட வந்து அது கையால என் மொகத்த வழிச்சி நெட்டி முறிச்சிச்சி. அப்பறம் அதோட குல பெருமய பேச ஆரம்பிச்சிடுச்சி.
”இது யாரோட வித்து…? வீணா போயிடுமா? இல்ல தாமுசந்தான் ஆயிடுமா? என்னிய கல்யாணம் பண்ணிட்டு வந்த பத்தாவது மாசமே இவன் பொறந்துட்டான். என்னோட கல்யாணம் பண்ணினவள்லாம் மூக்கு மேல வெரல வச்சிட்டாளுங்கள்ல…? அதோட வாரிசு மட்டும் என்ன தாமதிச்சா போயிரும்… எல்லாம் அந்த காளியம்மா புண்ணியத்துல நல்லாவே நடக்கட்டும்… ன்னு கையெடுத்து கும்பிட்டிச்சி.
அந்த நேரம் பாத்து கெழக்கு பக்க சொவத்து ஓரமா ரெண்டு பல்லிங்க சல்லாபிச்சிக்கிட்டு கத்துனிச்சிங்க. ஒடனே அது காளியம்மாவோட கொரலுன்னு கன்னத்துல போட்டுக்கிட்டுச்சி. நம்ம வீட்ட சுத்திகிட்டேதான் நிக்கிறா என்ந் தாயாரு காளியம்மா! ன்னு சொல்லி என்னைய பெருமையா பாத்துச்சி.
நானும் ஆமான்றமாரி தலையாட்டவும், வெளில் யாரோ சைக்கிள் பெல் அடிக்கவும் சரியா இருந்திச்சு. அத்ததான் ஓடி வந்து பாத்துச்சி. வெளில இந்த தபாலுகாரு ஒரு கடுதாசிய கொடுத்திட்டுப் போனாரு. அத்தக்கி கய்யிம் ஓடல, காலும் ஓடல. சைக்கிள மிதிக்கப் போன தபாலுக்காருகிட்ட இத கொஞ்சம் படிச்சி சொல்லிட்டுப் போங்கய்யா ன்னு கெஞ்சலா கேட்டுச்சி.
‘எம்மா… எனக்கு இப்ப நேரமில்ல… வெளியூர்ல இருக்குற உம் புருசன்தான் எழுதிருக்காரு… திரும்ப வர்றப்ப வேணும்ன்னா படிச்சி காட்டறேன்’ னுட்டு சைக்கிள ஏறி மிதிக்க ஆரம்பிச்சிட்டாரு. அவ்வளவுதான். அத்தக்கி சந்தோசத்து மேல சந்தோசமா ரட்ட சந்தோசமா ஆயிப் போச்சி. சட்டுபுட்டுன்னு லெட்டர எடுத்துக்கிட்டு அடுத்த தெருவுலருக்கற படிச்ச தம்பி ஒருத்தவருகிட்ட சேதி கேக்க றெக்க கட்டி ஓடினிச்சி. என்னதான் இருந்தாலும் புருசன் பொஞ்சாதி பாசம்ங்குறது இதுதான்னு நெனச்சிக்கிட்டேன். கொளுத்தியெடுக்கற இந்த மொட்ட வெயில்ல, முந்தானித் துணிய தலையில் போட்டுக்கிட்டு அத்தெ இப்புடி ஓடுறத்துக்கு காராணம், புருசன் கடுதாசிங்குறது தான்ம்ங்கற என்னால புரிஞ்சிக்க முடியிது. போற போக்குலியே அத்த என்னப் பாத்துச் சொன்னிச்சி.
“யெம்மா ராணி… ஒன் மாமனாருதான் கடுதாசி போட்டிருக்கு. என்ன வெவரம்ன்னு தெரிஞ்சிக்கிட்டு ஒரு கடுதாசிய வாங்கி பதிலும் எழுதி போட்டுட்டு வந்திடுறேன்… இந்த குட்டிவொ கொளத்துக்கு குளிக்கப் போயிருக்காளுவொ.. வந்தா தண்ணிய தூக்கி வெக்கச் சொல்லு. மத்ததை அப்பறம் பாத்துக்கிடலாம்ன்னு அத்த ஓட்டமா ஓடிப் போச்சி.
மாமா ரொம்ப நல்லவரு. யாரு மனசும் நோகறமாரி நடந்துக்கிட மாட்டாங்க. இப்பதான் கொஞ்ச நாளக்கி மின்னாடி இங்கருந்து கௌம்பிப் போனாவ. கும்பகோணத்துக்குப் பக்கத்தாப்புல ஒரு கிராமத்து வூட்டுல தங்கி அவங்க நெலம் நீச்ச பாத்துக்கிட்டு இருக்காரு. அவங்களே சோறும் போடுறாங்க. தேவையான அளவுக்கு கூலியும் தர்றாங்க போல. அப்புறம் தீவாளி. பொங்கல்ன்னு விசேசத்துக்கெல்லாம் பொடவ துணிமணியெல்லாம் எடுத்துத் தந்திடுவாங்களாம். அந்த மனுசங்களப் பத்தி மாமா இங்க வர்றப்போ கதை கதையா சொல்லுவாருன்னா பாத்துக்கங்களேன். இங்கயும் நெரந்தரமா எந்த வேலயுமில்ல. தவிர நாத்திங்கள கட்டிக் கொடுக்கவும் கொஞ்சம் காசு பணம் வேணுமின்னு மாமா அங்கனயே தங்கிட்டாரு..
இப்பக்கி நான் உண்டாகியிருக்குற விசியம் அவருக்கும் தெரிஞ்சா, எவ்ளோ சந்தோசப்படுவாரு தெரியுமா? ஆனா அவரு பக்கத்துல இல்லங்குறப்ப மனசுக்கு கஸ்டமா தான் இருக்கு. நாத்திங்க ரெண்டும் குளிச்சிட்டு வந்து தண்ணி தூக்கி வச்சிச்சுங்க. ரெண்டும் கல்யாண வயசுல இருக்குதுங்க… காலாகாலத்துல ஒரு சம்பந்தத்த பேசி முடிச்சாதான் எங்களுக்கும் நிம்மதி. மாப்புள பாத்துகிட்டேதான் இருக்கோம். இன்னும் சரியா அமையல. அதுவளும் வீட்ல சும்மா இல்லாம வெவசாய வேலக்கிப் போயி ஏதோ சம்பாதிச்சிட்டுதான் இருக்குதுவ.
இப்படியேதான் போயிக்கிட்டிருந்துச்சு வாழ்க்கை. எந்தக் கொறையும் இல்ல. எல்லாரும் அன்பாவும், பாசமாவும், அனுசரனையாவும்தான் இருந்திச்சுங்க. ஆனா யாரு வச்ச கண்ணோ? அது ரொம்ப நாளு நீடிக்கல. எல்லாம் கலகலத்து சின்னா பின்னமா போயிடுச்சி.
என்னவோ அதுதான் எம் மனச போட்டு கொடஞ்சிக் கிட்டேருக்கு. வேற ஒன்னும் பெரிய பிரச்சினையுமில்லை. சாதாரண விசியந்தான். வெடல புள்ளங்க தான?. வார்த்தய அள்ளி இறச்சிப் புட்டுச்சிங்க. அப்போ எனக்கு அஞ்சு மாசத்த தாண்டிடுச்சி. வயிறெல்லாம் பெருத்து மேடிட்டுடுச்சி. ரொம்ப களைப்பாவும் இருக்க நடுநடுவுல இந்தமாரி சுருக்குசுருக்குன்னு வலி வேற. அந்த வலி வந்திட்டா மனுச உசிரயே எடுக்கறமாரி இருக்கும்.
அன்னிக்கும் அப்படித்தான். துடிச்சிப் போயிட்டேன். வலி தாங்க முடியல. வீட்லயும் யாரும் இல்ல. நல்லெண்ணைய எடுத்து அடி வயித்துல தேச்சிக்கிட்டு தொப்புள்லயும் ரெண்டு சொட்டு வெச்சிக்கிட்டு அப்பிடியே சுருண்டு படுத்திட்டேன். எப்படி பொழுது போச்சின்னே தெரியாதளவுக்கு நல்லா அசந்து தூங்கிப் போயிட்டேன். நிதானம் வந்து முழிச்சப்ப எழுந்திரிக்கவே முடியல. உடம்பெல்லாம் ரணவலி பரவி நின்னிச்சி. உடம்பையே மடக்கி நெரிக்கிற மாதிரி இருந்திச்சி.
நடவுக்கு போயிருக்குற நாத்திங்க வந்ததும் பசிக்குதுன்னு சோறு கேட்டாலும் கேக்கும்ங்க. ஒல வச்சி சோறாக்கணும்ன்னு மனசுக்குள்ள ஓடுது. ஆனா எந்திருச்சி வேல பாக்குறளவுக்கு தெம்புல்ல எனக்கு. எந்திருச்சிப் பாக்கறன். சுத்தமா முடியல, யாராவது தூக்கி விட்டா தேவலாம்போல இருந்திச்சி. அப்படியே ஒருக்கனிச்சி படுத்திட்டேன். நல்லா இருட்டின பெறவுதான் நடவுக்குப் போயிருந்த நாத்திங்க ரெண்டும் வந்திச்சிங்க. வந்ததுமே ஏன்? என்ன? பண்ணுதுன்னு கூடக் கேக்கல.
“என்னண்ணி சோறாக்காம இப்படி படுத்து கெடக்குறீங்க?… வேலக்கிப் போயிட்டு வர்றவங்களுக்கு வந்த ஒடனே ஒரு வாயி சோறு திங்க வழியிருக்கா? வீட்டுல இருக்குற ஒங்களுக்கு இது கூடவா செய்ய முடியாது…?”
பெரிசு என்னவோ சுள்ளுன்னு பேசினிச்சி அன்னிக்கி. எனக்கு ஒரே வவுத்து வலி… எழுத்திருக்கவே முடியலன்னேன். ஆமா இன்னமே ஒங்களுக்கு இது ஒரு சாக்கு கெடச்சி போயிட்டு. தொட்டத்துக்கும் ஏதாவது சொல்லிக்கிட்டு படுத்துக்க வசதியா போயிட்டு. வாயிக்கி வந்தமாரி என்னென்னவோ பேசினிச்சி. என்னால தாங்கிக்க முடியல. இரத்தமே சுண்டுனமாரி இருந்திச்சி. இருந்தாலும் சின்னப்புள்ளதானேன்னு விட்டுட்டேன். சபிச்சிக்கிட்டேதான் அன்னிக்கி சோறாக்கினிச்சி, என்னவோ எனக்கு அது ஒரு மறக்க முடியாத சம்பவமாவே மாறிப் போயிடுச்சி.

அன்னிக்கி ராத்திரி ரொம்ப நேரங்கழிச்சிதான் மச்சான் வந்திச்சி. நான்ந்தான் மல்லுகட்டி எழுந்திருச்சி சோறு போட்டுக் கொடுத்தேன். மச்சான் சொன்னிச்சி. கொலம்பு ரொம்ப சல்லுன்னு இருக்கு. கொஞ்சம்ங் சுட வையேன்னுச்சி. சரின்னு மல்லுகட்டிதான் அடுப்ப பத்தவச்சி சூடு படுத்திக் கொடுத்தேன்.
அவ்ளோதான். அந்தப் பக்கம் உட்கார்ந்திருந்த அத்தெ சுர்ருன்னு எந்திருச்சி வந்து, ‘ஏண்டி யம்மா ராணி… இப்ப மட்டும் ஒனக்கு ஒடம்பு முடியுதா?ன்னு கேட்டிச்சி. எனக்கு பகீருன்னு ஆயிருச்சி. இல்ல அத்த….ன்னு நான் சொல்றத்துக்கு முன்னமயே அத்தை ரொம்ப பேச ஆரம்பிச்சிருச்சி. நிய்யி ரொம்ப நல்லவன்னுதான் நெனச்சேன். ஆனா வேலக்கி போயிட்டு வந்த எம் பொண்ணுங்கதான் சோறுகறி ஆக்கணும்ன்ணு வீராப்பா படுத்து கெடந்தியே. நிய்யெல்லாம் ஒரு பொண்ணா? ன்னு அத்தை கேட்டப்போ எனக்கு உசுரே தெறிச்சி உளுந்தமாரி இருந்திச்சு.
என்னால அதுக்கு மேல எதுவும் பேச முடியல. கண்ணீரு பொலபொல ன்னு கொட்டுது. துக்கம் குமுறிக்கிட்டு வருது. எதுவும் பேசாம அழுதுக்கிட்டே ஓரமா உக்காந்துட்டேன். மச்சான் மனசு கேக்காம, அவ என்ன சும்மாவா இருக்கா? புள்ளதாச்சிக்காரிக்கிட்ட போய் இப்புடிக் கணக்கு பாக்குறி யேன்னு கேட்டிச்சி. அதுக்கு அத்தை, ”ஆமா நானெல்லாம் புள்ளயா பெத்தேன். இவ ஒண்டிதான் ஒலகத்துலயே இல்லாத புள்ள பெக்கப் போறா? இப்புடியே வார்த்தக்கி வார்த்த கூடி ரசாபசமா ஆயிப் போச்சி.
அதுக்கு பெறவு சுமூகமான சூழ்நிலை இல்ல. தெனமும் சின்ன சின்னதா சண்டை. போராட்டமாவே போயிருச்சி வாழ்க்கை. எல்லாத்துக்கும் அத்தை குத்தம் கண்டு புடிச்சிச்சி. இனி நமக்கு ஒத்து வராதுன்ற மாரியே அத்தை நடத்துக்கிச்சு. அத்தை கடுதாசி போட்டு மாமனார வரச் சொல்லிருக்கும் போல. மாமாவும் வந்தாரு. குத்தமே இல்லாத மாதிரி அத்தை பேசினிச்சி, மாமா ஓரளவு சூழ்நெலய புரிஞ்சிக்கிட்டாரு. மச்சான்கிட்டதான் சொன்னாராம். சண்டன்னு வந்த பெறவு எதுவும் குத்தமாதான் தெரியும். அங்கயே ஒரு தனி வூடு இருக்கு. வயசுப் புள்ளங்க கோவத்துல எதுவும் பண்ணிகிட்டா சோலி புடிச்ச வேல. நான் அளச்சிக்கிட்டுப் போயிடுறேன். புள்ளதாச்சி பொண்ணுடா அது. கவனமா பாத்துக்க. சேதின்னா கடுதாசி போடு, வர்றேன்ன்னுட்டு மாமா எல்லாரையும் அளச்சிக்கிட்டுப் போயிட்டாரு.
எல்லாரும் போன பின்னே வீடே வெறிச்சோடி போயிருச்சி, எனக்கு அழுக தாங்க முடியல. எந்தக் குத்தமும் செய்யாத என்ன குத்தவாளிமாரி தனியா விட்டுட்டு போயிட்டாங்களேன்னு மனசு கதறினிச்சி, அதுக்கு பெறவு மாசம் வேற ஏறிக்கிட்டே வந்து இப்ப எட்டுல நிக்கிது. சுத்தமா ஒரு வேல வெட்டி செய்ய முடியல. கொஞ்ச தூரம் நடந்தாலே சாத்துபூத்துன்னு எறக்க ஆரம்பிச்சிடுது.
மச்சான்தான் தண்ணி தூக்குறதுலர்ந்து சோறுகறி ஆக்கற வரக்கிம். பாவமா தான் இருக்கு. என்ன பண்றது? இப்படியே நாளு நவந்து நவந்து மாசமும் வந்திருச்சி, ஒரு நாளு ராவுல திடீருன்னு வலி ஆரம்பிச்சிருச்சி் வாழ்க்கையில அந்தமாரி வலிய நான் அனுபவிச்சதே இல்ல. எப்படி இந்தக் கெவுருமெண்டு ஆசுவத்திரிக்கு கொண்டு வந்தாங்கண்ணே தெரியல. என்ன நடந்துச்சுன்னும் புரியல. கொஞ்சம் நிதானம் வந்து கண்ணு முழிச்சப்போ வயிறெல்லாம் கொறஞ்சி ஒரே ரண வலியா இருந்திச்சு. ஆனா அதெல்லாம் எனக்கு ஒரு பொருட்டாவே படல. பத்து மாசம் சொமந்த புள்ளய பாக்கணும் போல சந்தோசம் கொப்பளிச்சிச்சி. கண்ணு ரெண்டும் கெடந்து தவிச்சிச்சி.
“எங்க… எங்க… எம்புள்ள எங்க? ன்னு மனசு தேடினிச்சி. திரும்பிப் பாத்தா. அத்தை, மாமா, என் நாத்தினாருங்க எல்லாரும் வந்து நின்னாங்க. எனக்கும் சந்தோசம் பிடி படல. ஆனாலும் அவங்கள பாத்ததுமே எனக்கு அழுக பொங்கிகிட்டு வந்திருச்சி. ஒரு புள்ளதாச்சின்னு கூட ஈவிரக்கம் பாக்காம நட்டாத்துல விட்டிட்டு ஓடினீங்களோ இப்ப எங்க வந்தீங்கன்னு கேக்கனும் போல இருந்திச்சி. கண்ணுலேர்ந்து தண்ணி தண்ணியா ஊத்தினிச்சி. அத்தை, நாத்திங்களும் தேம்பி தேம்பி அழுதுச்சிங்க.
“சும்மா இருக்க மாட்டீங்க. அவ பச்ச ஒடம்புக்காரி. அவ கிட்ட போய் அழுதுகிட்டு”ன்னு யாரோ ஒரு பெரிசு எல்லாரையும் வெரட்டினிச்சி. நான்ங் கண்ண மூடிகிட்டு அப்படியே படுத்துக்கிட்டேன். இதயத்துடிப்பு சரியில்லன்னு கொழந்தய பொட்டிக்குள்ள வச்சிருக்காங்கன்னு சொன்னாங்க. அப்பறமா தஞ்சாவூரு பெரியாஸ்பத்திரிக்கி கொண்டு போயிருக்காங்கன்னாங்க. இப்படிச் சொல்லி சொல்லியே கொழந்தய காட்டாம தாமதப் படுத்துறாங்களேன்னு நெனச்சிக்கிட்டென். பெறகுதான் கொழந்த இறந்தே பொறந்திச்சின்னு தெரிய வந்திச்சி. அந்த அழுகய நான் எப்படி சொல்லுவன்? எல்லாம் பாழா போச்சேன்னு கதறுனேன். பத்து மாசம் பொத்தி வச்சிருந்த கனவு ஒரு நொடில ஒண்ணுமில்லன்னு ஆயிட்டேன்னு குமுறிகிட்டு அடக்கிது துக்கம். மச்சானும் கண் கலங்கி நின்னுச்சி. அதுக்கும் கண்ணீரு மாலமாலயா கொட்டுது.
எப்படியோ நாம கொடுத்து வச்சது அவ்வளவுதான்னு மச்சாந்தான் பெறவு எடுத்துச் சொல்லி ஆறுதல் படுத்துச்சி. எங்காவது ஒரு கொழந்தயோட அழுகய கேட்டாக் கூட அன்னிக்கி பூரா மனசு தாங்க முடியாம இப்பவும் கனக்குது. பக்கத்து பெட்டுல புள்ளயோட படுத்திருக்கற பொம்பளங்கள பாக்கறப்ப துக்கத்த அடக்க முடியல.
தண்ணி தூக்கி, சோறாக்கி, வீட்டு வேலயெல்லாம் ஒரு பொம்பளமாரி செஞ்ச மச்சான், அதுவும் கொழந்தையோட தவப்பன், எல்லாம் ஆண்டவன் செயல்ன்னு என்னய சமாதானப் படுத்தி தெம்பூட்டிகிட்டு இருக்குன்னு நெனக்கிறப்பவே துக்கம் தொண்டைய அறுக்குது. ஆனா, எதையுமே செய்யாம, நடுவுல விட்டுப்புட்டு ஓடின எங்க அத்தையும், அமயம், சமயத்துக்கு கூட ஒரு உதவிக்கு எட்டிப் பாக்காத இந்தத் தெருவு செறுக்கிவளும், கொழந்த இறந்ததுக்கு என்னோட தரித்திரம்தான்ங் காரணம்ன்னும், மொத கொழந்தையே தரிக்காம போற அளவுக்கு நான் பாவம் செய்திருக்கேன்னும், நான் திமிரு புடிச்ச ராங்கிக்காரின்னும் என்னென்னவோ சொல்லுறாளுவளாம்.
புள்ள மரிச்சிப் போச்சேன்னு நானே வெந்து கெடக்கேன். இவளுவ மனசாச்சியே இல்லாம வெந்த புண்ணுலவே வேல பாச்சுறாளுவளே… ஒரு பொம்பளையோட மனச, வேதனைய, வலிய, உசுரறுக்கிற கொடுமய, மத்த பொம்மனாட்டிகளே புரிஞ்சிக்கலன்னா அவளுவளுக்கெல்லாம் கர்ப்பப் பய்யி இருக்குறதுல என்ன அர்த்தமிருக்கு? என்னமோ காலந்தான் இந்த கண்றாவிக்கெல்லாம் மருந்து கொடுக்கணும். வேறென்ன சொல்ல முடியும்? என் விதிய நொந்துக்கிறதத் தவிர. வழியுற கண்களைத் துடைச்சிக்கிட்டே நான் சுவத்துப் பக்கமா பொரண்டு படுத்துக்கிட்டேன்.
![]()