முச்சந்தி
அகண்ட பாரசீக கொள்கை தோல்வி… சதாம் வீழ்ச்சிக்கு ஈரானும் காரணமா?… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(ஈரானில் நடக்கும் சமகால நிகழ்வுகளில் பல வல்லரசுகளின் மறைகரம் பங்கு வகிக்கிறது. அதேவேளை சதாம் உசைனின் வீழ்ச்சியிலும், ஈராக்கின் அழிவிலும் ஈரானுக்குப் பங்கு இருப்பதை விட, இந்த அரபு நாடுகளுக்குத் தான் அதிகப் பங்கு என்பது கசப்பான வரலாறாகும்)2003 இல் ஈராக்கை படையெடுத்து வீழ்த்த அமெரிக்காவுக்கு தனது வாசல்களை திறந்து கொடுத்து ஈரான் அரசானது உதவியது என்ற குற்றச்சாட்டு உள்ளது. 2001 இல் ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்கா படையெடுப்பை ஈரான் ஆதரித்தது. இதை முன்னாள் ஈரானிய ஜனாதிபதி அஹ்மதி நெஜாதியே ஏற்றுக் கொண்டிருந்தார் என்றும் அரபு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈரானிய புரட்சியின் பின்னர் 1980 நவம்பரில் ஈரானிய உளவு விமானம் ஈராக்கின் அணு உலைகளின் வான்வழி புகைப்படங்களை இரகசியமாக எடுத்து, இஸ்ரவேலுக்கு ஒப்படைத்தது. அதில் ஈராக்கிய ரேடார் அமைப்புகளின் பலவீனங்கள், அவை குறிப்பிட்ட நேரங்களில் மூடப்படுவது போன்ற தகவல்களும் அதில் அடங்கும். ஈரானியப் புரட்சி வெற்றி பெற்று சில மாதங்கள் ஆகவில்லை, ஈரான் அரசு ஈராக்கிய எல்லைகளில் 1980களில் தாக்குதல்களை மேற்கொண்டது.

1980களில் கொமெனி அரசு ஈரானை மட்டும் ஆட்சி செய்வதாக சொல்லி பதவி ஏற்கவில்லை. மாறாக அகண்ட பாரசீக தேசத்தை நிறுவுவதற்கான அடித்தளமாக ஈராக்கையும் ஒன்று சேர்த்து ஆட்சி செய்வதே தனது குறிக்கோள் என்று குறிப்பிட்டது.
ஈரான்-கான்ட்ராஸ் விவகாரம் :
1980களின் முற்பகுதியில் ஈரான்-ஈராக் போர் வெடித்த பிறகு, ஈராக் வெற்றியின் விளிம்புக்கு வந்தது. அந்த நேரம் ஈராக் பிராந்தியத்தில் ஒரு சக்தியாக இருப்பதை அமெரிக்கா – இஸ்ரவேல் விரும்பவில்லே. குறிப்பாக இஸ்ரேவேலின் இருப்புக்கு ஈராக் பெரும் அச்சுறுத்தல் இருந்து வந்தது.
ஈராக்கை எதிர்க்க ஈரானுக்கு ஆயுதம் தேவைப்பட்டது. அதே வேளை அமெரிக்க பிணைக் கைதிகள் சிலர் லெபனானில் ஈரானிய சார்பு ஆயுதக் குழுவால் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.
சவுதி கோடீஸ்வரர் அல்-ஹப்ஃகாஜியின் உதவியுடன் இஸ்ரேலிருந்து ஈரானுக்கு ஆயுதம் பரிமாற்றவும் பதிலுக்கு அமெரிக்க பிணைக் கைதிகளை விடுதலை செய்யவும் செய்து கொள்ளப்பட ஒப்பந்தமே ஈரான் கான்ட்ராஸ் ஒப்பந்தமாகும்.
இந்த ஆயுத உதவி முலம் வெற்றியின் விளிம்பில் இருந்த ஈராக்கை இன்னும் பல வருடங்கள் ஈரானால் தாக்குப் பிடிக்க முடிந்தது. இந்த இரகசியமான வேலையை செய்து முடித்துக் கொடுத்த நிகரகுவாவைச் சேர்ந்த ஒரு கிளர்ச்சிக் குழுவின் பெயரே கான்ட்ராஸ் என்பதாகும்.
ஈரான் முதன்மை வகிபாகம்?
வளைகுடாவிலும், மத்திய கிழக்கிலும் பீராந்திய ஆதிக்கத்தை செலுத்திய ஈரானின் முதன்மை வகிபாகம் தற்போது தோல்வி அடைகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஈரான் அரசு சிரியா, லெபனான், ஈராக், ஏமனில் விதைத்ததைத் தான் இப்போது அறுவடை செய்கிறார்கள் என்றும் சில அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் அண்டை நாடுகளில் என்ன செய்தது என்பதை பற்றிய பல பார்வைகள் உள்ளன.
குறிப்பாக சிரியாவில் அரபு வசந்தம் தொடங்கிய போது, டமாஸ்கசில் பஷார் அல்- அசாத்தின் ஆட்சி ஆட்டம் கண்டது. பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கு எதிராக, அசாத்தின் ஆட்சியைக் காப்பாற்ற ஈரான் முயன்றது.
டமாஷ்கசில் களமிறங்கிய ஈரானிய புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) மற்றும் ஹிஸ்புல்லா மூலம் அவர்கள் நடத்திய தாக்குதல்களும், ரஷ்யாவுடன் இணைந்து அவர்கள் அமைத்த அரணும் சிரியாவை அசாத் அரசு பத்து வருடங்களுக்கு மேலாக போராடி கட்டுப்படுத்த முயன்றது. ஆனாலும் பல அப்பாவி மக்களின் ரத்தத்தில் நனைந்த இந்த அரபு வசந்தத்தில் சவூதி அரேபியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் படைகள் செய்த தாக்குதல்களும் கோரமானவையே.
லெபனானில் ஹிஸ்புல்லா எனும் அமைப்பை உருவாக்கி, வளர்த்து, இன்று அந்நாட்டின் ராணுவத்தையே மிஞ்சும் அளவுக்கு ஒரு ‘நிழல் ராணுவமாக’ மாற்றியதும் ஈரானின் ஷியா மிதவாத போக்குக் கொண்ட அரசு தான். லெபனானின் அரசியல் ஸ்திரத்தன்மை குலைவதற்கும், அது ஒரு தோல்வியுற்ற தேசமாக மாறுவதற்கும் ஈரானின் இந்த ஆதிக்கம் ஒரு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது. ஒரு நாட்டிற்குள் இன்னொரு நாட்டை இயக்கும் வேலையைத்தான் அங்கே ஈரான் செய்தது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

சதாமை வீழ்த்தியதில் ஈரான் பங்கு?
சதாமை வீழ்த்தியது ஈரான் தான் என்ற வரலாறும் உள்ளது. அந்த நேரத்தில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் ரகசிய உறவு இருந்தது என்பது உண்மைதான் என்றும் சொல்கிறார்கள். ஆனால், சதாம் உசைனின் வீழ்ச்சிக்குத் திறவுகோலாக அமைந்தது ஈரானின் அரசியல் சதி மட்டும் காரணமல்ல. வளைகுடா அரபு நாடுகள் வழங்கிய ராணுவ ஆதரவுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈராக் ஆக்கிரமிப்பில் வளைகுடா நாடுகள், குறிப்பாக குவைத்தும் சவூதியும் எப்படி அமெரிக்காவின் வலது கையாக செயல்பட்டன என்பதற்கு ஆதாரப்பூர்வமான சான்றுகள் பல உள்ளன. ஈராக் மீதான 2003 படையெடுப்பில் குவைத் செய்த உதவி சாதாரணமானது அல்ல. அமெரிக்கத் தரைப்படை ஈராக்கிற்குள் நுழைவதற்குத் தனது நிலத்தையே முதலில் திறந்து கொடுத்தது குவைத் தான்.
ஈராக் மீதான படையெடுப்பிற்காக சுமார் 1,30,000 அமெரிக்க மற்றும் நேட்டோ வீரர்கள் குவைத்தில் குவிக்கப்பட்டனர். குவைத்தின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி அமெரிக்கப் படைகளின் முகாம்களுக்காகவும், ராணுவப் பயிற்சிகளுக்காகவும் ஒதுக்கப்பட்டது.2003 மார்ச் மாதம், அமெரிக்கத் தரைப்படைப் பிரிவுகள் குவைத் எல்லையைக் கடந்துதான் ஈராக்கிற்குள் நுழைந்து பாக்தாத்தை நோக்கி முன்னேறின. குவைத் இல்லாவிட்டால், அமெரிக்கத் தரைப்படையால் ஈராக்கை நினைத்துக்கூடப் பார்த்திருக்க முடியாது.
அதேவேளை சவூதி அரேபியா 2003 போரை பொதுவெளியில் எதிர்ப்பதாக நாடகமாடியது. ஆனால், திரைக்குப் பின்னால் நடந்துகொண்டது வேறு. சவூதி அரேபியா தனது மண்ணிலிருந்து நேரடித் தரைவழித் தாக்குதலை அனுமதிக்கவில்லை என்று கூறினாலும், அமெரிக்கப் போர் விமானங்கள் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் ஈராக் மீது பாய்வதற்குத் தனது வான்பரப்பைத் தாராளமாகத் திறந்து கொடுத்தது. அமெரிக்காவின் சிறப்புப் படைகள் ஈராக்கிற்குள் ஊடுருவ சவூதியின் வடக்கு எல்லை பயன்படுத்தப்பட்டது என்பதை ‘நியூயார்க் டைம்ஸ்’ போன்ற சர்வதேச ஊடகங்கள் அப்போதே அம்பலப்படுத்தின.
போரின் ஆரம்பக்கட்டத்தில், வான்வழித் தாக்குதல்களை ஒருங்கிணைக்கும் அமெரிக்காவின் முக்கியக் கட்டுப்பாட்டு மையம் சவூதியில் உள்ள இளவரசர் சுல்தான் விமானப்படைத் தளத்த்தில் தான் இயங்கியது. பின்னர்தான் அது கத்தாருக்கு மாற்றப்பட்டது.
போரின் போது எண்ணெய் விலை உயர்ந்து அமெரிக்கப் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க, சவூதி தனது எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து மறைமுகமாக உதவியது. குவைத் யுத்தத்தின் போது சதாம் புனித ஸ்தலங்களை பிடிக்க போகிறார் என்று அமெரிக்கா கூற அதற்கு பயந்துதானே சவூதி அமெரிக்காவிற்கு தன் வாசலை திறந்து விட்டது.
கத்தார் மற்றும் பஹ்ரைன் நாடுகளின் உதவியுடன் அமெரிக்கா இந்தப் போரை வழிநடத்தியது. கத்தாரில் தோஹாவிற்கு அருகிலுள்ள அல்-உய்த் விமானப்படைத் தளம் தான் அமெரிக்காவின் மத்தியக் கட்டுப்பாட்டுத் தலைமையகமாக மாறியது. ஈராக் மீது வீசப்பட்ட ஒவ்வொரு குண்டும் இங்கிருந்துதான் திட்டமிடப்பட்டது. அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைப் பிரிவு பஹ்ரைனில் இருந்துகொண்டுதான் பாரசீக வளைகுடா வழியாகக் கடல்வழித் தாக்குதல்களை ஒருங்கிணைத்தது.

ஒரு காலத்தில் ஈரான் தனது அரசியல் லாபத்திற்காக அமெரிக்காவுடன் கைகோர்த்தது என்பது எவ்வளவு உண்மையோ, அதைவிட நூறு மடங்கு உண்மை, சதாம் உசைனை ஒழித்துக் கட்ட, அரபு நாடுகள் தங்கள் நிலத்தையும், நீரையும், வானத்தையும் அமெரிக்காவுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தன என்பதுதான். ஈரான் முதுகில் குத்தியது என்றால், வளைகுடா நாடுகள் நேருக்கு நேராகவே நெஞ்சில் குத்தின.
சதாம் உசைனின் வீழ்ச்சியிலும், ஈராக்கின் அழிவிலும் ஈரானுக்குப் பங்கு இருப்பதை விட, இந்த அரபு நாடுகளுக்குத் தான் அதிகப் பங்கு என்பது கசப்பான வரலாறாகும்.
![]()