முச்சந்தி

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் நிறுத்தப்பட்டதா?…. கடைசி நிமிடத்தில் நிறுத்தப்பட்ட அதிரடி முடிவு!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

(ஈரான் மேல் அமெரிக்கா தாக்குதல் நடத்துமா என்ற சந்தேகம் இன்னும் இருக்கிற நிலையில், ஈரானில் பாரிய உள்நாட்டு போர் போன்ற சூழல் உருவாகும் வரை காத்திருக்குமாறு இஸ்ரேல் அமெரிக்காவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளது)
​மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரான் மீதான அமெரிக்காவின் திட்டமிடப்பட்ட ராணுவத் தாக்குதல் கடந்த வாரம் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கத்தாரில் உள்ள அல் உதித் (Al Udeid) விமான தளத்திலிருந்து பல போர் விமானங்கள் மூலம் ஈரான் மீது தாக்குதல் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தன. ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரடியாகத் தலையிட்டு இந்தத் தாக்குதலை நிறுத்துமாறு உத்தரவிட்டார்.
​தாக்குதல் அச்சத்தால் மூடப்பட்டிருந்த ஈரானிய வான்வெளி, தற்போது மீண்டும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது. இந்தத் திடீர் முடிவுக்கு பின்னால் மிக முக்கிய காரணங்கள் உள்ளன. ஈரானிய ஆட்சியைக் கவிழ்க்கும் வகையிலான ஒரு தீர்க்கமான வெற்றியை தாக்குதல் தருமா என்பதில் அமெரிக்க அதிகாரிகளால் உறுதி அளிக்க முடியவில்லை.
​அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், ஈரான் மிகக்கடுமையான பதிலடியைக் கொடுக்கும் என்றும், அந்தத் தாக்குதலைச் சமாளிக்கத் தேவையான ராணுவ பலம் தற்போதைக்கு அந்தப் பகுதியில் போதுமானதாக இல்லை என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அதேவேளை வெற்றி நிச்சயமற்ற எந்த ஒரு ராணுவ நடவடிக்கையிலும் ஈடுபடப் போவதில்லை என்பதில் டிரம்ப் உறுதியாக இருந்ததாகத் தெரிகிறது.
ஆனால் ​தற்காலிகமாகத் தாக்குதல் தவிர்க்கப்பட்டிருந்தாலும், ஈரான் மீதான அச்சுறுத்தல் முழுமையாக நீங்கவில்லை. அமெரிக்கப் படைகள் இன்னும் தயார் நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளன. ஈரான் விளிம்பு நிலையில் இருந்தாலும், அடுத்தகட்ட நகர்வு என்ன என்பது உலக நாடுகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
​இந்நிலையில் வெற்றி நிச்சயம் இல்லாத போர் வேண்டாம் என்ற கொள்கையின் அடிப்படையில் இந்தத் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது. எனினும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் இந்த அமைதி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது கேள்விக்குறியே.
உள்நாட்டு போர் பதற்றம்?
ஈரானில் நிலவிய கடுமையான போராட்டங்களால் அதன் மையப்பகுதியையே ஆட்டம் காணச் செய்தது. பல தசாப்தங்களில் மிகப்பெரிய அமைதியின்மை அலைகளில் ஒன்றை ஈரான் சந்தித்தது.
இவ்வேளையில் ஈரானின் உச்ச தலைவர் ரஷ்யாவிற்கு அவசரமாக வெளியேறத் தயாராக இருந்தார் என்றும் கூறப்பட்டது.
தெஹ்ரானிலும் முக்கிய மாகாண நகரங்கள் உட்பட பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. மக்கள் கூட்டம் பாதுகாப்புப் படைகளை வெளிப்படையாக மீறி ஆட்சியின் முடிவுக்கு கோஷமிட்டனர். ஒரு காலத்தில் இறுக்கமாகக் கட்டுப்படுத்தப்பட்ட வீதிகள் எங்கும் கோபம், எதிர்ப்பு மற்றும் மோதலின் காட்சிகளாக மாறின.
இந்த நிலை அதிகரித்து வரும் அழுத்தம் ஈரானின் ஷாவை நாடுகடத்த வேண்டிய கட்டாயத்தில் ஆழ்த்திய 1979 ஆம் ஆண்டின் இறுதி நாட்களைப் போலவே நிலைமை எதிரொலிக்கத் தொடங்கியது என்றும் சில ஆய்வாளர்கள் வர்ணித்தனர். பொருளாதார சரிவு, தடைகள், உள் அதிகாரப் போராட்டங்கள் மற்றும் பொதுமக்களின் கோபம் ஆகியவை காரணமாக இருந்தது. அதேவேளை தகவல்கள் இறுக்கமாகக் கட்டுப்படுத்தப்பட்டு, ஊகங்கள், வதந்திகள் மற்றும் பயத்தைத் கட்டுப்படுத்த அரசு முயன்றது.
ஈரானில் அமெரிக்கா கால் பதிக்குமா ?
ஈரானில் உள்நாட்டு போர் போன்ற சூழல் உருவாகும் வரை காத்திருக்குமாறு இஸ்ரேல் அமெரிக்காவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளது. ஈரான் மேல் தாக்க முன்னர் பல தடவை யோசிக்க வேண்டிய நிலை உள்ளது.
ஹார்முஸ் நீரிணையை (ஜலசந்தி -Strait) ஈரான் மூடினால், உலகின் கடல் வழி போக்குவரத்து நிலைமை மோசமா போகும் என பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீதான தனது நிலைப்பாட்டை ஒவ்வொரு நாளும் மாற்றிக்கொண்டே இருக்கிறார். ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு மரண தண்டனைக்கு உள்ளாக்கப்படவிருந்த நிலையில், டிரம்பின் தலையீட்டால் தான் அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக சில தகவல்கள் வெளியாகின. இருப்பினும் ஈரான் அரசு தனது தேசிய தொலைக்காட்சியில் டிரம்பிற்கு வெளிப்படையான எச்சரிக்கையை தொடராக விடுத்துள்ளது.
மிகவும் கிண்டலாக, டிரம்பின் பிரசாரத்தின் போது அவர் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சி தாக்குதலைக் குறிப்பிட்டு, “இந்த முறை நாங்கள் இலக்கை தவறவிட மாட்டோம்” என்று ஈரான் கூறியிருப்பது, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பகை எந்த அளவிற்கு முற்றியுள்ளது என்பதை வெளிப்படையாக காட்டுகிறது.
ஆனால் ஈரானை தாக்குவது என்பது வெனிசுலா அல்லது சிரியாவை தாக்குவது போன்ற எளிய காரியம் அல்ல என்பதை டிரம்ப் நன்கு அறிவார். ஈரான் ஒருபோதும் மண்டியிடாது, அது தனது இறுதி மூச்சு வரை போராடும் வல்லமை கொண்டது என்று அமெரிக்க நம்புகிறது.
ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வெறும் வான்வழித் தாக்குதல்கள் மட்டும் போதாது. அங்கே தரைப்படை வீரர்களை உள்ளே அனுப்ப வேண்டியிருக்கும். ஆனால், ஈரானிய மக்கள் அந்நிய படைகளை மிக கடுமையாக எதிர்ப்பார்கள் என்பதால், டிரம்ப் இப்போதைக்கு தரைப்படையை அனுப்பத் தயங்குகுவார். இதனாலேயே ஈரானில் உள்நாட்டு போர் போன்ற சூழல் உருவாகும் வரை காத்திருக்குமாறு இஸ்ரேல் அமெரிக்காவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
அரபு நாடுகளின் நிலைப்பாடு :
கடந்த பல போர்களில் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அரபு நாடுகளின் நிலைப்பாடு மிகவும் சிக்கலானது. ஈரானை தாக்க வேண்டாம் என்று சவுதி அரேபியா மற்றும் கத்தார் போன்ற நாடுகள் அமெரிக்காவை கேட்டுக் கொள்கின்றன. இதற்கு முக்கிய காரணம், தங்கள் நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என்ற அச்சமே ஆகும்.
கத்தாரில் உள்ள அமெரிக்காவின் மத்திய கட்டளை தலைமையகம் ஈரானின் ஏவுகணைகளுக்கு மிக அருகில் உள்ளது. ஈரான் தனது ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் போன்ற ஆயுத குழுக்களை பயன்படுத்திப் போர் பரவலை முழு மத்திய கிழக்கு முழுவதற்கும் விரிவுபடுத்தும் அபாயம் உள்ளது.
ஈரான் ஒருவேளை தாக்கப்பட்டால், அது உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை பெருமளவில் பாதிக்கும். உலகிலேயே மிக முக்கியமான கடல் வழி பாதையான ஹார்முஸ் நீரிணை வழியாகத்தான் உலகின் இருபது சதவீத எண்ணெய் விநியோகம் நடைபெறுகிறது. இந்த சிறிய பாதையை முடக்கும் திறன் ஈரானிடம் உள்ளது.
அப்படி நடந்தால், மசகு எண்ணெய் விலைகள் விண்ணை தொடும், கப்பல் காப்புறுதி தொகைகள் பலமடங்கு உயரும், இது உலக பொருளாதாரத்தையே நிலைகுலைய செய்யும். இதனால்தான் அமெரிக்காவுடன் நல்லுறவில் உள்ள அரபு நாடுகளும் கூட ஈரான் மீதான தாக்குதலை விரும்பவில்லை.
உண்மையில் டொனால்ட் டிரம்ப் மனித உரிமைகள் குறித்து பேசுவது என்பது வெறும் திரைமறுவு நாடகம் போன்றது என்று விமர்சகர்கள் கருதுகின்றனர். அவரது உண்மையான நோக்கம் எண்ணெய் விநியோகத்தை கட்டுப்படுத்துவதும், அமெரிக்காவின் பொருளாதார நலன்களை காப்பதும் மட்டுமே.
ஈரானில் கொல்லப்படும் போராட்டக்காரர்கள் மீது அவருக்கு உண்மையான அக்கறை இருக்குமா என்பது கேள்விக்குறியே. இந்த அதிகார போட்டியில் சிக்குவது என்னவோ பொது மக்களும், உலக நாடுகளின் பொருளாதார நிலைத்தன்மையும் தான். வரும் நாட்களில் டிரம்பின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்தே மத்திய கிழக்குன் அமைதி தீர்மானிக்கப்படும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *