அப்புவின் சால்வை…. கதை… ஏலையா க.முருகதாசன்

புத்தக அலுமாரியிலிருந்து புத்தகங்களை தேவைக்காக எடுத்தபின் அலுமாரியில் அங்குமிங்குமாக வைத்துவிடுவம்.புத்தகங்கள் ஒழுங்கீனமாக இருப்பது கண்ணை உறுத்தவே புத்தகங்களை அடுக்கிவைப்பதும்;. வுhசித்தவிட்டு மீண்டும் அவற்றை ஒழுங்கீனமாக வைப்பதும் திரும்பவும் அடுக்கி வைப்பதும் வழமையாக நடக்கும் ஒரு விடயந்தான்.
இது புத்தகங்களுக்கு மட்டுமல்ல, முக்கியமான ஆவணக் கோர்வைகள் உடுப்புக்கள் போன்வற்றினது ஒழுங்கமைப்பிலும்; இது போன்று நடப்பவைதான்.
எங்களுடைய மூன்று பிள்ளைகளும் திருமணம் செய்துவிட்டார்கள்.மூவரும் ஒருவர் மாறி ஒருவர் குடும்பத்துடன் வீட்டுக்கு வந்து போவார்கள்.
அன்றும் அப்படித்தான் இரண்டாவது மகன் சுதாகரன் குடும்பத்துடன் வீட்டுக்கு வந்திருந்தான்.நான் அலுமாரியில் அங்குமிங்குமாக இருந்த உடுப்புக்களையும் மடிப்புக்கள் குலைந்து கிடந்த உடுப்புக்களையும் கட்டிலில் தூக்கிப் போட்டு மடித்துக் கொண்டிருந்தன்.
எங்களுடைய அறைக்குள் வந்த இரண்டாவது மகன் சுதாகரனும் அவுனுடைய மனைவி பூவரசியும் கட்டிலில் உட்கார்ந்து கொண்டே அதில் சுதாகரன் „ என்னப்பா செய்யிறியள் என்றவன் நான் பதில் சொல்வதற்கு முன்பே உடுப்புக்களை எடுத்து மகன் மடிக்க, குலைந்து கிடந்த உடுப்புக்களை மருமகளும் மடித்து மடித்து வைத்தாள்.
இதற்கிடையில் எனது மனைவி „பூவரசி இந்தா பிள்ளை கோப்பி,உனக்கும் சுதாவுக்கும் மாமாவுக்கும் கொண்டு போய்க் குடு’ என்று அடுப்படியிலிருந்து குரல் கொடுக்க பூவரசி எழுந்து போய் ஒரு தட்டத்தில் மூன்று கோப்பிக் கோப்பைகளில் ;கோப்பியைக்; கொண்டு வந்து தந்தவள் மீண்டும் கட்டிலில் உட்கார்ந்து குலைந்து போன உடுப்புக்களை கணவருடன் சேர்ந்து மடித்துத்தர நான் ஒவ்வொன்றாக அலுமாரிக்குள் அடுக்கிக் கொண்டிருந்தன்.

சுதாகரன் „அப்பா நீங்கள் இருங்கள் நான் அடுக்கிறன் „ என்று என்னை இருக்கச் சொல்லிவிட்டு பூவரசி மடித்துக் கொடுத்த உடுப்புக்களை அடுக்கிக் கொண்டிருந்தான்.
குலைந்திருந்த பட்டுவேட்டிகளை எடுத்து மடித்துக் கொண்டிருந்த பூவரசி அடுத்து பருத்திநூல் சால்வையை கையிலெடுத்து மடிக்கவென அதனைக் குலைத்து மடிக்கப் போனவள், கிழிந்து தைத்திருந்த சால்வையைப் பார்த்ததும்’மாமா இதென்ன கிழிஞ்சு தைச்ச சால்வையை பவுத்திரமாக வைச்சிருக்கியள் சால்வை கனகாலத்தான் போல இருக்குது.கிழிஞ்ச இதை எறிஞ்சு போட்டு புது பருத்திச் சால்வை வாங்கலாந்தானே’ என்றவள்,கணவனிடம் „நாளைக்கு நாங்கள் டோட்முண்டுக்குப் போறமல்லோ அப்ப மாமாவுக்கு புதுசா ஒரு பருத்திநூல் வேட்டியும் சால்வையும் வாங்குவம், மாமா இதை எறியுங்கள் „ என்று கீழே போடப் போனவளை, „பிள்ளை……பிள்ளை அதைக் கீழை போட்டுடாதை, இது வெறும் சால்வையல்ல அது ஒரு வரலாறு,என்ரை அப்புவோடு,அதுதான் உன்ரை மனுசன்ரை பேரனோடு பதினைஞ்சு வருசமாக ஒன்றாக வாழ்ந்த அவரின் பாசமுள்ள ஒரு பொருள், இப்ப இந்தச் சால்வைக்கு வயசு அறுபத்தைஞ்சு….’ என்று சொல்லிக் கொண்டே,மருமகளிடமிருந்து அந்தச் சால்வையை வாங்கி முகத்தில் வைத்து அழுத்தி அதன் வாசனையை நுகர்ந்த போது அந்தச் சால்வையிலிருந்து அப்புவின் உடலிலிருந்து வரும் வாசனையை என்னால் மட்டுமே உணர முடிந்தது.
உடுப்புக்களை அடுக்கிக் கொண்டிருந்த மகன்,இந்தச் சால்வைக்கு ஒரு சரித்திரம் இருப்பதாக உணர்ந்து உடுப்புக்கள் அடுக்குவதை நிறுத்திவிட்டு கட்டிலில் உட்கார்ந்து ஆர்வத்துடன் என்னைப் பார்த்தான்.
மருமகள் பூவரசி’சொல்லுங்கள் மாமா அப்படி என்னதான் இந்தச் சால்வைக்கு முக்கியத்துவம் இருக்கின்றது என்பதை அறிய வேண்டுமென்று எனக்கும் ஆசையாகவிருக்கின்றது „ என்று சொல்ல,அந்தச் சால்வையைப் பற்றிச் சொல்ல நினைத்தவுடன் என் கண்கள் கசியத் தொடங்கின.
„அப்புவின் அந்தச் சால்வையால் கண்களையும் முகத்தையும் துடைத்த நான்’அப்பு எங்களைவிட்டுப் போவதற்கு பதினைஞ்சு வருசங்களுக்கு முந்தி, கதிர்காமம் போயிட்டு வரும் வழியில் இதைக் கொழும்பில் வாங்கியவர்.அவரிடம் பல சால்வைகள் இருந்த போதும், ஏனோ தெரியாது இந்தச் சால்வை மீது அவருக்கு விருப்பம் அதிகம்’.
„சீமெந்துத் தொழிற்சாலைக்கு வேலைக்குப் போகும் போதும், தோட்டத்துக்கு போகும்போதுகூட இந்தச் சால்வை அவரைப் பிரியாது இருக்கும் „.
„நான் சின்னப் பொடியனாக இருந்த போது இதை எனக்கு வேட்டியாக கட்டி மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலுக்கு கூட்டிக் கொண்டு போவார்’.
„தோட்ட வேலைகளில் முகமோ உடம்போ வியர்த்தால் அப்பு இந்தச் சால்வையால்தான் துடைத்துக் கொள்வார்’.

„தோட்டத்தில் இறைப்பு முடிஞ்சதும்,நான் அங்கையே குளிப்பன்.அப்பொழுது அப்பு தனது வியர்வையைத் துடைச்சுப் போட்டு வைச்ச இந்தச் சால்வையால் நான் குளிச்சு முடிஞ்ச ஈரத்தை துடைப்பன்’.
„இந்தச் சால்வைக்கும் அப்புக்கும் மட்டுமல்ல, எனக்கும் ஒரு பிணைப்பு இருந்தது.யாழ்ப்பாணத்தில் உள்ள சின்னக்கடைக்கு வெத்திலை விற்கப் போகும் போது, வெத்திலைக் கட்டை கரியரில் வைச்சு கட்டி விடுவதால் காண்டிலை இந்தச் சால்வையால் சுத்தி அதில் என்னை இருத்திக் கூட்டிக் கொண்டு போவார்’
„பண்டத்தரிப்புச் சந்தைக்கு அகத்தி இலை அகத்திப்பூ விற்கப் போகும் போதும் என்னைக் கூட்டிக் கொண்டு போகையில்,காண்டிலில் இந்தச் சால்வையைச் சுத்தி, அதில் இருக்கச் செய்துதான் கூட்டிக் கொண்டு போவார்’
„ஒரு வெள்ளிக்கிழமை அப்பு அம்மா அண்ணை நான் என நால்வரும் தெல்லிப்பழை புகையிரத நிலையத்தடி முத்துமாரியம்மன் கோவிலுக்குப் போயிருந்தம்’.
„அப்பொழுது, கோவிலின் தெற்குப்பக்க உள்வவீதியில் அவியல் சுரக் காய்ச்சலால் நான் மயங்கி விழுந்த போது, அப்பு இந்தச் சால்வையால் என்னைப் போர்த்தி, தோளில் போட்டபடி தெல்லிப்பழைச் சந்தியடிக்கு கார் பிடிக்கவென ஓட்டமும் நடையுமாக போக, அதற்கு முன்னாடி அண்ணை வேகமாக ஓடி காரைப் பிடிச்சுக் கொண்டு வர என்னை மூளாய் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனார்கள்.
„ஆஸ்பத்திரியில் நிற்கச் சொன்ன போது,ஆஸ்பத்திரிக்கு முன்னாலிருந்த கடையில் பாய் வாங்கிக் கொண்டு வரும் வரையில் இந்தச் சால்வையை கட்டிலில் விரிச்சு அதில் படுக்க வைச்சனர்.அதற்குப் பிறகும் பாய்க்குமேல் இந்தச் சால்வயை விரிச்சு படுக்க வைச்சனர்’.
„நான் ஆஸ்பத்திரியிலிருந்த போது அம்மா முத்துமாரியம்மனுக்கு மடிப்பிச்சை எடுத்து வந்து பொங்குவதாக நேர்த்திக்கடன் வைச்சிருந்தா…நான் ஆஸ்பத்திரியாலை வந்து ஒரு மாசத்துக்குப் பிறகு அம்மா என்னையும் கூட்டிக் கொண்டு வீடுவீடாக „அம்மா மடிப்பிச்சை போடுங்கோ அம்மா என்று அம்மா சொல்லிச் சொல்லி வீட்டுப் படலைகளில் நின்று அரிசி வாங்கிய போதும் அம்மா அப்புவின் இந்தச் சால்வையையே உடுத்தி விட்டிருந்தார்’.
„அப்ப நான் சின்னப் பொடியன்.காலமை நேரத்தோடை என்னை எழுப்பி தோய வார்த்து,தலைக்கு ஈரம் எடுத்து திருநீறு பூசி சந்தனம் வைச்சுத்தான் கூட்டிக் கொண்டு போனா,முத்துமாரியம்மனுக்கு பொங்கிய போதும் இந்தச் சால்வையைத்தான் அம்மா உடுத்திவிட்டா’.
„நான் வளர்ந்து இளந்தாரியான பிறகு அப்புவுடன் சேர்ந்து தோட்ட நிலத்தை மண்வெட்டியால் கொத்துவதுண்டு.அப்படி ஒருநாள் கொத்திக் கொண்டிருந்த போது மண்வெட்டியின் அலகு எனது அவதானக் குறைவால் கணுக்காலில் பட ஐயோ அம்மா என்று நான் குழற அப்பு பதறியடித்து இரத்தம் வழிந்து கொண்டிருந்த வெட்டுக் காயத்தைப் பொத்திப் பிடிக்க,புல்லுப் பிடிங்கிக் கொண்டிருந்த அம்மா எனக்கருகில் ஓடிவர,இஞ்சரப்பா அங்கை நிக்கிற குப்பைமேனி இலைகளைப் பிடுங்கி கசக்கிக் கொண்டு வந்து காயத்திற்கு மேலை வைச்சுஎன்ரை தலையிலை கட்டியிருக்கிற சால்வையை அவிட்டு தம்பியன்ரை காலை இறுக்கிக் கட்டு என்று சொல்ல அம்மா கண்கலங்கியபடி கட்டிவிட்டா’.
சால்வைக்கம் எனக்கும் உள்ள உறவு பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும் போது குரல் அடைத்தது.நான் செருமுவதைக் கேட்ட மனைவி ஒரு கிளாசில் தண்ணீரைக் கொண்டுவர,மருமகள் பூவரசி அதை வாங்கி „மாமா இந்தாங்கோ குடியுங்கள் „ என்று தண்ணீரைத்தர மனைவியும் பூவரசிக்குப் பக்கத்தில் கட்டிலில் உட்கார்ந்து கொண்டாள்.
மகனுடைய முகமும் மருமகளின் முகமும் நான் சொல்லிக் கொண்டிருந்த அப்புவின் சால்வையைப் பற்றிய கதையைக் கேட்டு, ஆர்வத்தையும் கவலையையும் வெளிப்படுத்தியதைக் கவனித்தன்.
எனது தோளில் மகனும் மருமகளும் கைவைத்து ஆறுதல்படுத்தினர்.நான் கதை சொல்வதைத் தொடர்ந்தன்.
„என்னைச் சைக்கிள் கரியரில் இருத்தி காங்கேசன்துறை கடற்கரையோடிருந்த அரசாங்க ஆஸ்பத்திரிக்கு அப்பு கூட்டிக் கொண்டு போக,காயம் பெரிசாய் இருந்ததால் ஐஞ்சு இழைப் போட்டு மருந்து கட்டி விட்டனர்’ „காயத்தைத் சுத்திக் கட்டியிருந்த இந்தச் சால்வை முழுக்க இரத்தகறையாக இருந்தது.அப்பு மருந்து கட்டியவரிடம் ஒரு பேப்பரை வாங்கி,சால்வையை வைச்சு மடிச்சுக் கொண்டு வந்தார்’.
„நானும் அப்புவும் ஆஸ்பத்திரியிலிருந்து வரும்வரை அம்மா பதகளிச்சுக் கொண்டிருந்தா,நான் சைக்கிளால் இறங்கி நொண்டிக் கொண்டு வந்ததைக் கண்டதும், ஆஸ்பத்திரியிலை என்ன சொன்னவை என்று அம்மா கேட்க,இழைப் போட்டிருக்கினம் மாறிவிடும் என்று அப்பு சொன்னதுடன்,காயப்பட்ட காலை இறுக்கி ஊன்றி நடக்க வேண்டாம் என்றும் சொன்னவை என்றும் அப்பு சொன்னார்’.
„தாயே அம்மாளாச்சி என்ரை பிள்ளைக்கு ஏற்புகீற்பு தாக்காமல் நீதானம்மா பார்த்துக் கொள்ள வேண்டுமென்று முற்றத்தில் நின்றபடி முத்துமாரியம்மன் கோவில் இருக்கும் கிழக்குப் பக்கமாக நின்று அம்மா கையெடுத்துக் கும்பிட்டிட்டு,வீட்டுக்குள்ளை போய் ஒரு துணியிலை ஒரு ரூபாயை வைச்சுத் சுத்தி அதை என்ரை கைமணிக்கட்டிலை கட்டி விட்டா’
„நான் காயம்பட்ட வலது காலை ஊன்றி நடக்கக்கூடாது என்பதற்காக அப்பு வளவிலை இருந்த பூவரசம் கதியால் ஒன்றை வெட்டி அதன் தோலை உரித்துப் போட்டு வீட்டு விறாந்தையில் சுவரோடு சாய்ந்திருந்த எனக்குப் பக்கத்தில் அதை வைத்தவர், எழும்பி நடக்கும் போது இதை ஊன்றி நட என்று சொன்னார்’
„அப்புவுக்கும் அம்மாவுக்கும் வெத்திலை பாக்குப் போடும் பழக்கமிருந்தது.அளவெட்டிக்கங்காலை விளான் என்ற இடத்திலை சுண்ணாம்புச்சூலை இருக்குது, அங்கை போய் அப்பு நிறைய சுண்ணாம்பு வாங்கி வாறவர்….’
„வீட்டிலை நிறையச் சுண்ணாம்பு இருந்தது.ஆஸ்பத்திரியிலையிருந்து கொண்டு வந்த எனது காலைக் கட்டியிருந்த சால்வையின் இரத்தகறை மீது அப்பு சுணணாம்பும் தண்ணியும் கலந்து பூசிய பிறகு கிணத்தடிக்கு கொண்டு போய் சவர்க்காரம் போட்டுக் கும்மி தோய்க்கிற கல்லிலை அடிச்சுத் தோய்ச்சுக் கொண்டு வந்து முற்றத்துக் கொடியிலை காயவிட்டார்…’
„ஆனால் இரத்தகறை முழுவதும் உடனடியாகப் போகவில்லை.சாதுவாக இருந்தது.அப்படியிருந்தும் அப்பு வேலைக்குப் போகிற போதும் சரி தோட்டத்துக்கு போகிற போதும் சரி அதை அவர் விடவில்லை.வேலைக்குப் போகிற போது தோளில் போட்டுக் கொண்டு போவார்.தோட்டத்துக்குப் போகும் போது தோளில் போட்டுக் கொண்டு போய் தோட்டத்துக்குள்ளை போனதும் தலைப்பாவாகக் கட்டுவார்’
„நான் துலா மிதிகு;கும் போது சில நேரங்களிலை நான் சாரத்தை அவிட்டு வைச்சிட்டு இந்தச் சால்வையைக் கொடுக்காகக் கட்டிக் கொண்டு துலா மிதிப்பன்…’
„அது என்ரை காலுக்கு பலம் சேர்ப்பது போல இருக்கும்’.10
„ஒரு நாள் இலந்தை முள்ளால் எங்கடை வளவு ஒழுங்கை வேலியை நானும் அப்பும் சேர்ந்து அடைச்ச போது,அப்ப நான் கட்டியிருந்த இந்தச் சால்வை இலந்தை முள்ளில் கொழுவிக் கிழிந்துவிட அம்மா அதைச் தைச்சுத் தந்தா,அதுதான் இந்தத் தையல்.இந்தத் தையலைப் பார்க்கும் போது அம்மாவின் தையலின் அழகு ஞாபகம் வரும்.அம்மா கிழிஞ்ச துணிகளை உருட்டி அழகாக தைப்பா…’

„அப்புவிடம் எத்தனையோ சால்வைகள் இருந்த போதும், நான் வேட்டி கட்டிக் கொண்டு கோவிலுக்குப் போகும் போதெல்லாம் இந்தச் சால்வையத்தான் வேட்டிக்கு மேலாலை கட்டிக் கொண்டு போவன்.அப்பு ஒன்றும் சொல்ல மாட்டார்..’
„மற்றச் சால்வைகளைவிட அப்புவின் வியர்வை அவரின் உடம்பின் வாசம் என்று இந்தச் சால்வைதான் அதிகம் உறவாடிய சால்வை’ „அம்மா இறந்து ஒரு வருடத்துக்குள்ளேயே அப்புவும் இறந்துவிட்டார்.இறுதிக் கிரிiயின் போது அப்பு விரும்பிப் பாவித்த உடுப்புகளை அவருடன் போட்டு எரிக்க வேண்டும் என்று சிலர் சொல்லியதால், எங்களுடைய உறவினர் ஒருவர் இந்தச் சால்வையை எடுத்த போது, நான் அதைக் குடுக்க மறுத்து அப்புவின் நினைவாக இந்தச் சால்வையை என்னுடன் வைச்சுக்கொண்டன்….’.அவர்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள்,நான் விடாப்பிடியாக மறுத்துவிட்டன்’.
„உங்கடை அம்மாவைக் கல்யாணம் செய்து, கொண்ணையை அம்மா வயித்திலை வைச்சிருந்த போது,அம்மாவுக்கும் வயித்திலை இருக்கிற பிள்ளைக்கும் எதுவும் தீங்கு வரக்கூடாது என்று முத்துமாரியம்மனுக்கு நேர்ந்திருந்தன்.கொம்மாவுக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் கொண்ணையும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பிறந்தான்.நேர்ந்தபடி முத்துமாரியம்மான் தேர்த்திருவிழாவின் போது தேருக்குப் பின்னால் இந்தச் சால்வையை கட்டித்தான் பிரதிட்டை செய்தன்,அது எனக்கு கவசமாக இருந்தது பொல உணர்ந்தன்….’
பலமுறை இந்தச் சால்வையை மனைவி மடித்து அலுமாரியில் அடுக்கி வைத்தவள் என்றாலும்கூட நான் இதைச் சொன்ன போது கண்கலங்கியபடி அந்தச் சால்வையை எடுத்துப் பார்த்தாள்.
„உறவுகள் மட்டுமில்லை.எம்மோடு வாழும் பொருட்களும் உறவுகள்தான்.அப்புவின் இந்தச் சால்வை அவரின் உழைப்பினதும் அவரோடு பின்னிப் பிணைந்து வாழ்ந்ததையும்,அவர் கதைத்த வார்த்தைகளையும் நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கின்றது…’
„எத்தனையோ கல்யாண வீடுகளுக்கு பட்டு வேட்டியில் போயிருக்கிறன்.அப்பவெல்லாம் சால்வையாக இதையே கழுத்தில் போட்டுக் கொண்டு போவன்,இல்லாட்டில் இடுப்பில் கட்டியிருப்பன்.பட்டு வேட்டிக்கு பருத்திச் சால்வையா என்று சிலர் கேட்பார்கள்.இது அப்புவின் சால்வை, எனது பொக்கிசம் என்று சொல்வன்..’
„எந்த விலை உயர்ந்த பட்டு வேட்டிக்கும் இந்தச் சால்வை ஈடாகாது.அப்புவின் உடலைத் தொட்டு வாழ்ந்ததால் இந்தச் சால்வை விலைமதிப்பற்றது’
„அம்மா தைச்ச தையலைப் பார்த்து கிழிஞ்ச சால்வையாக இருக்கிறதே என்பார்கள்.அது அம்மாவின் அழகான கைவண்ணம், அதுவும் பொக்கிசம் என்பன்’
„உங்கள் மூவரையம் சின்னஞ்சிறுசுகளாக ஜேர்மனிக்கு நானும் அம்மாவும் கூட்டிக் கொண்டு வந்த போது,மறக்காமல் இந்தச் சால்வையைக் கொண்டு வந்தோம்..’
„இந்தச சால்வையும் எங்கள் தனிமனித வரலாற்றின் ஆவணம் என்று சொல்லி முடிச்சன்’
„மாமா கவலைப்படாதீர்கள் நாங்களும் இந்தச் சால்வையைப் பாதுகாப்பம் என்றாள் மருமகள் பூவரசி’
அப்பொழுது மூத்த மகன் தனது மனைவி பிள்ளைகளுடனும்,மகள் தனது கணவன் பிள்ளைகளுடனும் இரண்டாவது மகனின் கைத்தொலைபெசி சூமில் தொடர்பு கொண்டு பார்க்கையில், கட்டிலில் உடுப்புகள் இருப்பதையும் நான் மனைவி,மகன்,மருமகள் என எல்லாரும் உட்கார்ந்திருப்பதையும் கண்டு,’ என்ன செய்யிறியள் „ என்று கேட்க அப்புவின் சால்வையை அவர்களுக்குக் காட்டிய இரண்டாவது மகன் அப்பா உடுப்புகளை அடுக்கி வைக்கையில் எங்கடை தாத்தாவின் இந்தச் சால்வையைப் பற்றிச் சொன்னவர்,அதைக் கேட்டுக் கொண்டிருந்தம் நெகிழ்ச்சியான கதை என்று சொல்ல,’அப்பா எங்களுக்கும் சொன்னவர் „என்றவன், தனது மகன்மார் இருவருக்கும் „அங்கை பாருங்கள் அந்தச் சால்வையை அது உங்கடை தாத்தாவின் அப்பாவின்ரை சால்வை’ என்று சொல்ல, அவர்கள் இருவரும் „ஓ..’ என்று வியப்புடன் பார்க்க,எங்களுக்கும் இந்தச் சால்வையைப் பற்றி அப்பா சொல்லியிருக்கிறார் என்று மகள் சொல்ல,’இந்தச் சால்வை அப்பாவின் அழகிய இனிய நினைவுப் பொருள்.பெரும் பொக்கிசம்.எங்கடை பரம்பரை மரம் பற்றிய விபரத்தில் மறக்காமல் எங்கடை தாத்தாவின் இந்தச் சால்வையின் வரலாற்றையும் எழுத வேண்டும் என்று தனது இரண்டு தமையன்மாருக்கும் மகள் சொல்லிய போது நான் பெரும் மகிழ்ச்சியடைந்தன்.
![]()