முச்சந்தி

சிரியாவில் குர்திய படைகளின் பின்னடைவு: தன்னாட்சி உரிமையை இழக்கும் குர்திஷ் மக்கள்!….  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(சிரியாவில் அமெரிக்க ஆதரவுடன் இருந்த குர்திய படைகளுக்கு பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சிரிய அதிபர் ஜூலானியின் புதிய உறவு அமெரிக்க அரசுக்கு கிடைத்ததன் காரணமாக, நீண்டகால உறவு இருந்துவந்த குர்திஷ் மக்களை அமெரிக்கா கைவிட்டுள்ளது. அமெரிக்கா தனது நலனுக்காக மாத்திரம் மற்றவர்களை பயன்படுத்துவது வழமை. அதாவது தனக்கு தேவைப்படும் போது பயன்படுத்துவதும், தேவை முடிந்தால் கைவிடுவதும் அமெரிக்கா நீண்ட காலங்ககளாக கடைப்பிடித்து வரும் கொள்கை என்பதனை இப்போதுதான் குர்திஷ் மக்கள் உணர்ந்திருப்பார்கள்)
 
சிரியாவில் 2024 டிசம்பரில் பஷர் அல்-அசாத் ஆட்சி வீழ்ந்ததைத் தொடர்ந்து, சிரியாவில் ஒரு புதிய இடைக்கால அரசாங்கம் அமைந்தது. இருப்பினும், வடகிழக்கு சிரியாவில் ஆதிக்கம் செலுத்தும் குர்துக்கள் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படைகள் (SDF) அலப்போ நகருக்குள் தொடர்ந்தும் சில முக்கிய பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
கடந்த சில வாரங்களாக சிரியாவின் அலப்போ (Aleppo) நகரில்
நிலவி வந்த கடுமையான போர்ச்சூழல், ஒரு முக்கிய திருப்பத்தை அடைந்துள்ளது. இவ்வருட ஜனவரி 6 முதல் அலப்போ நகருக்குள் நடந்த மோதல்கள் முடிவுக்கு வந்துள்ளன. அலப்போ நகரம் தற்போது முழுமையாக சிரிய இடைக்கால அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
முன்னர் அலப்போவின் ஷேக் மக்சூத், அஷ்ரஃபியா ஆகிய இரண்டு பிரதேசங்கள் குர்திஷ் படைகளின் வசம் செயல்பட்டு வந்தன. புதிய சிரிய அரசுக்கும், குர்திஷ் படைகளுக்கும் இடையே படைகளை ஒருங்கிணைப்பது தொடர்பான ஒப்பந்தங்கள்
தோல்வியடைந்த நிலையில், கடந்த ஜனவரி ஆரம்பத்தில் பலத்த மீண்டும் சண்டை வெடித்தது.
இதன் விளைவாக சிரிய அரசாங்கப் படைகள் குர்திஷ் கட்டுப்பாட்டில் இருந்த ஷேக் மக்சூத் மற்றும் அஷ்ரஃபியே பகுதிகளை முழுமையாகக் கைப்பற்றியுள்ளன. இதன் மூலம், ஒட்டுமொத்த அலப்போ நகரமும் இப்போது மத்திய அரசாங்கத்தின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது.
கடும் தாக்குதலைத் தொடர்ந்து, குர்திஷ் படைகள் இப்பகுதிகளில் இருந்து வெளியேற ஒப்புக்கொண்டுள்ளன. தற்போது குர்திஷ் போராளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பாதுகாப்பான வழித்தடங்கள் வழியாக வடகிழக்கு சிரியாவில் உள்ள அவர்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு (Qamishli மற்றும் Hasakah நோக்கி) பேருந்துகள் மூலம் வெளியேற்றப்பட்டனர்.
இதேவேளை துருக்கியில் குர்திஷ் SDF படைகள் பயங்கரவாத அமைப்பாகவே கருதப்படுகிறது. இந்த மோதலில் துருக்கி நேரடியாகத் தரைவழியாக ஈடுபடாவிட்டாலும், குர்திஷ் படைகளுக்கு எதிரான இந்த நடவடிக்கையை துருக்கி ஆதரிப்பதாகவே தெரிகிறது. சில அறிக்கைகளின்படி, துருக்கியின் ட்ரோன்கள் சிரிய அரசுப் படைகளுக்கு உதவியாக இருந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
அசாத் ஆட்சிக்குப் பிந்தைய சிரியாவில், புதிய அரசாங்கம் தனது அதிகாரத்தை நாடு முழுவதும் நிலைநிறுத்த முயற்சிப்பதன் ஒரு பகுதியாகவே இது பார்க்கப்படுகிறது. இது புதிய அரசுக்கும் குர்திஷ் படைகளுக்கும் இடையிலான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஒரு வார சண்டையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பலர் அஃப்ரின் மற்றும் பிற பகுதிகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். இரு தரப்பிலும் கணிசமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக ஷேக் மக்சூத் பகுதியில் நடந்த சண்டையில் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது அலப்போவில் குர்திஷ் படைகளின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது. நகரம் முழுவதும் சிரிய மத்திய அரசின் கொடியின் கீழ் வந்துள்ளது. ஆனால், இது வடகிழக்கு சிரியாவில் உள்ள குர்திஷ் நிர்வாகத்திற்கும், டமஸ்கஸ்ஸில் உள்ள மத்திய அரசுக்கும் இடையே ஒரு புதிய விரிசலைத் தொடக்கி வைத்துள்ளது.
தாயகம் இல்லாத குர்திஷ் மக்கள் :
மத்திய கிழக்கில் பாரம்பரியமாகவே வாழ்ந்து வரும் இனமான குர்திஷ் மக்கள் (Kurdish) தென்கிழக்கு துருக்கி, வட கிழக்கு சிரியா, வட ஈராக், வடமேற்கு ஈரான், தென்மேற்கு ஆர்மேனியா ஆகிய பகுதிகளில் அதிகம் வாழ்கின்றனர்.
ஆயினும் தாயகம் இல்லாத மிகப்பெரிய இனக்குழுவான குர்திஷ் மக்கள் துருக்கியிலும், சிரியாவிலும் பிற இடங்களிலும் நீண்டகாலமாக துன்புறுத்தலை எதிர்கொண்டுள்ளனர்.
ஐந்து நாடுகளில் சிதறி வாழும் குர்திஷ் மக்களின், பேரிடியாக ஐந்து நாடுகளிலுமே அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட இனமாக கருதப்படுகின்றனர். இதன் விளைவாக விடுதலை போராட்டத்திற்கும் தள்ளப்பட்டார்கள்.
5,000 ISIS உறுப்பினர் விடுதலை:
வடகிழக்கு சிரியாவில் குர்திஷ்
கட்டுப்பாட்டின்கீழ் இருந்த ராக்கா (Raqqa) நகரை சிரியாவின்
அரச படையினர் கைப்பற்றியதன் பின்னர், சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த ISIS இயக்கத்தின் சுமார் ஐயாயிரம் உறுப்பினர்களை சிரிய அதிபர் ஜூலானியின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பெரும் தொகையான ISIS இயக்கத்தினர் சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டதன் காரணமாக அவ்வியக்கம் மீண்டும் பலம்பெறும் என்று நம்பப்படுகிறது.
முன்னாள் HDS இயக்க தலைவரான இன்றைய சிரியாவின் அதிபர் ஜூலாணி அவர்கள், ஆரம்பகாலங்களில் ISIS இயக்கத்தின் இரண்டாவது தளபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அலப்போ அரசு வசம்:
சிரிய நாட்டு அரச படையினர் அலப்போ நகரை கைப்பற்றியதன் மூலம் அமெரிக்க ஆதரவு பெற்ற குர்திஷ் SDF படைகள் தற்போது பின்வாங்கி உள்ளனர். அமெரிக்கா தனது நலனுக்காக மாத்திரம் மற்றவர்களை பயன்படுத்துவது வழமை. ஜூலானியின் புதிய உறவு கிடைத்ததன் காரணமாக நீண்டகால உறவு இருந்துவந்த குர்திஷ் மக்களை அமெரிக்கா கைவிட்டுள்ளது.
அதாவது தனக்கு தேவைப்படும் போது பயன்படுத்துவதும், தேவை முடிந்தால் கைவிடுவதும் அமெரிக்கா நீண்ட காலங்ககளாக கடைப்பிடித்து வரும் கொள்கை என்பதனை இப்போதுதான் குர்திஷ் மக்கள் உணர்ந்திருப்பார்கள்.
இதேவேளை சிரியாவின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களை குர்திஷ் தன்னாட்சி அரசிடம் இருந்து கைப்பற்றியுள்ளது. கடந்த ஜனவரி 18, 2026 நிலவரப்படி, சிரிய இராணுவம் அல்-ஓமர் மற்றும் தனக் எண்ணெய் வயல்களையும், கோனோகோ எரிவாயு வசதியையும் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் வளங்கள் நிறைந்த இந்த டெய்ர் எஸ்-சோர் மற்றும் ரக்காவின் பகுதிகளில் பல ஆண்டுகளாக கு்திஷ் கட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
இந்த மிகப்பெரிய மாற்றம் டமாஸ்கஸ் மற்றும் குர்திஷ் தலைமைக்கு இடையே இராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பின்பற்றுகிறது. இந்த ஒப்பந்தம் ஒரு விரிவான போர்நிறுத்தத்தையும் குர்திஷ் SDF படைகளை தேசிய இராணுவத்தில் முழுமையாக ஒருங்கிணைப்பதற்கான ஒரு திட்டத்தையும் நிறுவுகிறது.
எண்ணெய் வளம் சிரிய அரசு வசம் :
சமீபத்தில் சிரிய அரசு கையகப்படுத்தப்படுவதற்கு முன்பு, குர்திஷ் படைகள் வசம் சிரியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களில் சுமார் 70% முதல் 80% வரை கட்டுப்பாட்டில் இருந்தது.
எண்ணெய் வயல்களில் இருந்து கிடைக்கும் வருவாயை தேசிய திட்டங்களுக்கு பதிலாக, தங்கள் தன்னாட்சி நிர்வாகம் மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க குர்திஷ் SDF பயன்படுத்தியது. அத்துடன் அதிக அளவு எண்ணெய் ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்திற்கு எல்லையைத் தாண்டி கடத்தப்பட்டது அல்லது இடைத்தரகர்கள் மூலம் விற்கப்பட்டது. இந்த “நிழல் பொருளாதாரம்” என்பது செல்வம் சிரிய பொதுமக்களுக்கு பயனளிக்கவில்லை என தற்போது சிரிய அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
அத்துடன் குர்திஷ் SDF படைகள் அசாத்தை எதிர்ப்பதாகக் கூறினாலும், அவரது மின் உற்பத்தி நிலையங்களை இயக்குவதற்கு திரைக்குப் பின்னால் அவருக்கு எண்ணெயை விற்றது. இதற்கிடையில், நாட்டின் பிற பகுதிகள் கடுமையான எரிபொருள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டன.
டெய்ர் எஸ்-சோர் போன்ற பகுதிகளில், உள்ளூர் பழங்குடியினர் குர்திஷ் SDF படைகளை திருட்டு கும்பல் என்று குற்றம் சாட்டினர். தங்கள் நிலத்திலிருந்து வளங்கள் குர்திஷ் தலைமையிலான திட்டங்களுக்கு பயனளிக்க எடுக்கப்பட்டதாகவும், அதே நேரத்தில் அவர்களின் சொந்த நகரங்கள் மோசமான வறுமையில் இருப்பதாகவும் கூறினர்.
இந்த முக்கிய வயல்களை சிரிய அரசு அதிகாரத்திற்கு மீட்டெடுத்ததன் மூலம், ஒட்டுமொத்தமாக சிரியர்கள் பொருளாதார மீட்சி மற்றும் தேசிய ஒற்றுமைக்கு சில படிகள் நெருக்கமாக நகர்ந்து, அதன் அனைத்து குடிமக்களுக்கும் நாட்டின் இயற்கை செல்வத்தை விடுவிப்பதற்கான நீண்டகால நம்பிக்கையை அளிக்கிறது என்று தற்போதய சிரிய அரசு தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *