கதைகள்

உற்ற துணை…. கதை… ஏலையா க.முருகதாசன்

ஓவ்வொருவர் வாழ்க்கையிலும் அவர்களின் வயதையும் அவர்கள் கடந்து வந்த வாழ்க்கை பகுதிகளையும் கவனித்துப் பார்க்கும் போது,வாழும் காலத்தில் அவர்கள் அந்தந்த வயதுகளில் அனுபவித்த இன்ப துன்பங்கள் வலிகள் ஞாபகத்திற்கு வரும்.

வாழ்வின்,வாழும் காலத்தை விநாடிப் பொழுதுகளின் செயல்பாடுகளில் அவை ஞாபகங்களாக பதியப்பட்டுவிடும் ஞாபகங்கள் வரும் போதெல்லாம்,நிகழ்வுகள் எம்முன்னே தோன்றி அந்நிகழ்வுகளின் தன்மைகளை வெளிப்படுத்தி நிற்கும்.அவையின் நிகழ்வலைகள் நினைத்து நினைத்து பூரிப்படைய வைப்பனவாகவும்,எனக்காக வாழ்ந்த உயிர்களை,வாழ்ந்து கொண்டிருக்கும் எனது உயிருக்கு நிகரான உற்ற துணையையும் நினைத்து மனம் மகிழ்ந்தும் அவரின் தியாகத்தை நினைத்தும் மகிழ்ச்சிவெதும்பல் ஏற்படுவதுண்டு.

தந்தை தனது பிள்ளைகளுக்கு காப்பரணாகவும் தாய் பாசத்தை அரணாக்கி வாழும் வாழ்கைக்குப் பிறகு ஆண் மகனானால், மனைவி என்பவள்,மனைவி என்பதற்கும் மேலாக தகந்தையினதும் தாயினதும் வகிபாகத்தை வகிப்பவளாகவும் தனது பிள்ளைகளும், தனக்குக் கிடைத்திருக்கும் கணவனுமே தனக்கான முழு வாழ்வு என வாழத் தொடங்குவாள்.
இதை வாசிப்பவர்கள் இது குடும்ப தத்துவம் என யோசிக்கலாம்.ஆனால் இது நான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையின் ஒரு சிறுபகுதி.அவலப்பட்டு நின்ற எனக்கு, உங்களுக்கு நான் இருக்கிறேன் என வந்தவளுக்காக எழுதும் கதை இது.

இது எனது வரலாற்றின் மிகச் சிறிய பகுதி..இன்னொரு என்னை எனக்கு முன்னால் முன்னிறுத்தி என் கதையைக் கேள்,எனது வாழ்க்கை வரலாற்றைக் கேள் எனச் சொல்லும் கதை இது.

இன்னொன்றாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம். வாசகர்களாகிய உங்களுக்கு என் கதையைக் கேளுங்கள் எனச் சொல்லும் கதை இது.ஒவ்வொரு தாளிலும் எழுத்துக்களின் நிரைகளில் தோன்றும் சொற்களும்,சொற்களில் தோன்றும் வரிகளும்,வரிகளால் உணர்த்தப்படும் உணர்வுகள் நிகழ்வுகளாகி உங்களருகில் நானிருந்து சொல்வது போலத் தோன்றலாம்.எனது பெயரைச் சொல்லாமல் நான் என விளித்துச் சொல்லும் கதை இது.ஆனாலும் நான் என்பவன் யார் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

இனி எனது கதையைக் கேளுங்கள்,என்னைப் பற்றி நானும் எனது கதையை மீள நினைத்து அசை போட்டு உள்வாங்கிக் கொண்டு, உங்களையும் கேட்கச் சொல்கிறேன்.

சாப்பாட்டின் அருமை பசியில் தெரியும் என்பார்கள்.ஒரு அவல் சோற்றின் அருமை பசித்து சாப்பிட்டும்,பசியடங்காதுசாப்பாடு இவ்வளவுதான் என்ற போது தட்டில் ஒட்டியிருக்கும் இறுதி அவலையும் எடுத்து சாப்பிடுகிறோமே அப்பொழுதுதான் சாப்பாட்டின் அருமையையும் பசியின் கொடுமையையும் உணர முடியும்.சாப்பாடு என்பது ஒவ்வொருவருக்கும் மிகவும் இன்றிமையாதது.இளந்தாரி வயதில் சாப்பாடு என்பது மிகவும் தட்டுப்பாடாகவே இருந்தது.கொடிது கொடிது இளமையில் வறுமை என்ற ஒளவையாரின் முதுமொழிக்கு நானே சாட்சி.

சட்டைக் கொலரில் இருக்கும் அழுக்கைப் போக்க அதற்குக் கனக்கச் சவர்க்காரம் போட்டு அந்த இடத்தை தென்னம் பொச்சால் உரஞ்சு உரெஞ்சென்று உரஞ்சி தோய்த்து அலம்பிக் காயவிட்டு,காய்ந்த சட்டையை,வேட்டியை,லோங்ஸை மினுக்கிப் போடுவதில் நான் மகிழ்ச்சியடைவேன்.

கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் தனிமையில் வாழ்ந்தவன்.அந்தக் காலத்தில்தான் எனது தனிமையை நீர்த்துப் போகச் செய்ய அம்பனைக் கலைப்பெருமன்றத்தின் கலை,இலக்கிய,பொதுச் சேவை நடவடிக்கைகளிலும் நாடகத்துறையிலும் அதீத கவனம் செலுத்தினேன்.

நான் சொல்வதை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதாலும்,வாசகர்களாகிய நீங்களும் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையுடன் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
எனது மனைவியுடனான இணைந்த வாழ்வு ஆரம்பித்த முதல் நாளுக்கு முன்னரான அந்த ஐந்தாண்டுகளை எப்படிக் கடந்து வந்தேன் என்பதை அதை நினைக்கும் தோறும் இன்றுவரை எனக்கு ஆச்சரியமாகவே இருக்கின்றது.

கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் என்பது 1825 நாட்களாகும்.அந்நாட்களில் என்ன சாப்பிட்டேன் என்பது எனக்கு இன்னும் வியப்பாகவே இருக்கின்றது.

நான் இருந்த வீடும் எனது அல்ல.அது எனது அண்ணை கட்டிய வீடு. அவர் மட்டக்களப்புக் கச்சேரியில் வேலை செய்து கொண்டு மனைவி பிள்ளைகளுடன் ஏறாவூரில் குடியிருந்தார்.
நான் தேத்தண்ணி வைச்சுக் குடிச்சதும் எப்பவாவது ஒரு நாள் சோறும் ஒரு கறியும் வைச்சுச் சாப்பிட்டதும்,அரை இறாத்தல் றோஸ் பாணை வாங்கி மூன்றாகப் பிரிச்சு மூன்று வேளையும் வெங்காயத்துடன் சாப்பிட்டிருக்கிNறேன்.மற்றும்படி கடைகளில் இருக்கிற காசுக்கு ஏதாவது வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது அக்கா தனது பிள்ளைகளின் படிப்புக்காக என்னுடையஅண்ணனின் வீட்டில் வந்து வசிக்கத் தொடங்கினார்.அவர்களுடன்; எனது தாய்க்குச் சமனானவரும் அவர்களுடன் ஒன்றாக எனது அண்ணனின் வீட்டில் வசிக்கத் தொடங்கினார்.

நான் அன்றைய நாட்களில் ஒரு நாளைக்கு ஒருமுறையே அவர்களிடம் சாப்பிட்டு வந்தேன்.அக்காவும் பிள்ளைகளும் என்மீது காட்டிய பரிவோ பாசமோ எனது தாய்க்குச் சமனானவரிடம் கொஞ்சமும் காணப்படவில்லை.

என்மீதான அக்கறையிலும்,எனக்கும் சாப்பாடு தேவை என்பதிலும் அவரிடம் ஏனோதானோ என்ற நிலை இருந்ததைக் கண்ட போதும் என்னைப் பொருட்படுத்தாத அவரின் குணத்தை உணர்ந்த போது, எனது தாயை நினைச்சு பலமுறை அழுதிருக்கிறேன்.

ஆனால் கவலைப்படுகிறேன் என்பதை எனது அக்காவிடமோ பிள்ளைகளிடமோ என்றுமே காட்டிக் கொண்டதில்லை.

ஒரு நாள் நடந்த சம்பவத்தினால் நான் மிக மிகப் பாதிக்கப்பட்டேன்.அந்தச் சம்பவம் எனக்குள் ஒரு உறுதியையும்,தன்மான இருப்புக்கும் ஒரு திடத்தைக் கொடுத்தது.

ஒரு நாள்,நாள்முழுவதும் சாப்பிடாமல் அன்றிரவு சாப்பிடுவதற்காக அடுப்படிக்குள் போய் சாப்பாடு இருக்கிறதா என பார்த்த போது சட்டிகள் கழுவி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்த போது அதிர்ச்சியடையவில்லை,எந்நிலையை நினைச்சு கண்கள் கலங்கியது.

அப்பொழுது இரவு நேரம் பத்து மணி.இனி எந்தக் கடையில் போய்ச் சாப்பிடுவது என்ற போது எனது நிலையை நினைச்சு எனது மனமும் அழுதது.

பசியைக் கட்டுப்படுத்த முடியவில்லை.மகாஜனாவுக்கு வடக்குப் பக்கத்தில் இன்னொரு அண்ணையின் வீடு இருந்தது.

பசியின் கொடுமையைத் தாங்க முடியாதபடியால் அவரின் வீட்டுக்குப் போன போது அவர் வீட்டுப்படலையைப் பூட்டியிருந்தார்.படலையடியில் நின்று சின்னண்ணை சின்னண்ணை என்று கூப்பிட்ட போது அவர் வந்து படலையைத் திறந்து உள்ளே வா எனக் கூட்டிக் கொண்டு போன போது நான் அழுவதைக் கண்ட அவர் ஏன் அழுகிறாய் என்று கேட்க அங்கை சட்டிபானை கழுவி வைச்சுக்கிடக்குது சாப்பாடு எதுவும் இல்லை பசிக்குது என்றேன்.

சின்னண்ணையின் மனைவியான அண்ணி என்னைப் பார்த்துப் பரிதாபத்துடன் கவலைப்படாதையுங்கோ இஞ்சை சாப்பிடுங்கோ என்றவர் பழஞ்சோறுக்கென தண்ணீர் ஊற்றி வைச்ச சோறைப் பிழிஞ்சு கோப்பையில் போட்டு,சுண்டங்காய்க் குழம்பையும் விட்டுத் தந்தார்.
கண்களில் கண்ணீர் வழிய வழியச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன்.அழாமல் சாப்பிடுங்கள் என்றார் அண்ணி.அதற்குப் பிறகு தாயக்குச் சமனானவரிடம் சாப்பிடுவதில்லையென்று முடிவெடுத்தன்.

எதையும் பொருட்படுத்தாமல் சாப்பிடச் சொல்லி,அக்கா கேட்டார் அத்தான் கேட்டார்.ஆனால் சாப்பிடத் திடமாக எனது மனம் மறுத்துவிட்டது.ஒரு நாள் சம்பவம் எனக்கு வலுவான ஆழமான முடிவை எடுக்க வைத்தது.இளைஞர்களாகிய நாங்கள் இணைந்து நடத்திய கலை ,இலக்கியப் பொதுத் தொண்டாற்றும் மன்றத்தின் செயல்களில் நான் தளர்வில்லாமல் ஈடுபட்டன்.அதனால் எனது மனசு வேறொரு திசையில் பயணித்து ஆறுதலடையத் தொடங்கியது.ஆனால் அற்று எரியத் தொடங்கிய அன்றைய காலங்களின் வேதனை நெருப்பு இத்தனை வயதாகியும்,இத்தனை ஆண்டுகளாகியும் தொடர்ந்து எரிகிறது.

நாட்கள் சென்றன.பிள்ளைகளின் படிப்பு நிறைவுபெற அக்கா பிள்ளைகள் போய்விட்டார்கள்.ஆனால் என் பசி மட்டும் நிறைவுபெறவில்லை.சில நாட்கள் தேங்காயை உடைத்துச் சாப்பிட்டும்,மாங்காயைச் சாப்பிட்டும் பசியைப் போக்கியிருக்கிறேன்.
விடுமுறையில் ஊருக்கு வந்த அண்ணை எனது நிலையை அறிந்து சில உறவினர்களின் வீடுகளில் சாப்பிட ஒழுங்க செய்தார்.ஆனால் அதையம் தொடர முடியவில்லை.எனக்கு உணவு தந்தவர்களை இன்றும் நன்றியுடன் நினைவுகூருகின்றேன்.

இந்தக் கட்டத்தில்தான் நான் உறவினர் முறையான ஒருவரின் பிள்ளைகளுக்கு ரியூசன் கொடுக்கச் சம்மதித்து அங்கு போனேன்.

அங்குதான் எனது வாழ்க்கையின் இன்னொரு திருப்பம் ஒரு வசந்தம் ஆரம்பித்தது.அந்த வீட்டின் இரண்டாவது மகளுக்கும் எனக்கும் இடையில் விருப்புப் பிணைப்பு ஏற்பட்டது.
எனது நிலையை உணர்ந்த அவர்,தேநீரிலிருந்து சாப்பாடு வரை தனது தம்பிமாரிடம் கொடுத்து,என்னிடம் கொண்டு போய்க் கொடுக்கும்படி எனக்குக் கொடுத்தனுப்புவார்.

எங்களது மன்றத் தலைவரின் பாட்டி,எனது அன்புக்குரியவளின் போய் வருபவராதலால் எனது நிiலையை எடுத்துச் சொல்லியதுடன்,உன்னை வழிப்படுத்த அவள்தான் பொருத்தமானவள்,நீ ஏதாவது சாப்பிடுகிறியா இல்லையா என்று தெரியாது,ஆனால் உடுப்புகளை மினுக்கி அழகாகப் போடுவதிலிருந்து உன்னை விட்டுக் கொடுக்காமல் நடக்கிறாய் என்பதை ஊகிக்க முடிகிறது என்றார் அந்த ஆச்சி.

ஒரு நாள,; என்னுடையவளுக்கும் அவரின் தமக்கைக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் என்னிலையறிந்து எனக்காக அழுதார் என்னைப் பாதுகாக்கவென வந்தார்.இன்று வரை என்னைச் சூழ்ந்து நிற்பவர் அவர்தான்,மூன்று பிள்ளைகளையும் வளர்த்தெடுத்து அவர்களை நல்ல நிலைக்குக் கொண்டு வந்தவரும் அவரே,அவர்தான் எனது மனைவி,அவர்தான் எனது உற்ற துணை.அவரில்லையெனில் நானில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *