இலங்கை

இனங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிடும் அநுர – இது சட்டப்படி குற்றம் என்கிறார் திஸ்ஸ

ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுவது தொடர்பான முன்மொழிவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு இணக்கம் தெரிவித்துள்ளதாக அதன் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,

இரு கட்சிகளுக்கும் இடையிலான இணக்கப்பாடுகள் மற்றும் பேச்சுவார்த்தைகளை வழிநடத்தும் பொறுப்பு சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது இப்பேச்சுவார்த்தைகள் மிகவும் சாதகமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த 2024 ஜனாதிபதித் தேர்தலின் போது இந்த இரண்டு கட்சிகளும் பிரிந்து நின்றமையே தேர்தல் முடிவு விகாரமடையக் காரணமாக அமைந்ததாகவும், எனவே எதிர்காலத் தேர்தல்களில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதே ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், சுத்தமான அரசாங்கம் எனத் தன்னை அழைத்துக்கொள்ளும் இந்த ஆட்சியில் குறுகிய காலத்திற்குள் பல நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.

குறிப்பாக, துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பாக இதுவரை முறையான விசாரணைகள் நடத்தப்படவில்லை எனவும், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்காக நிலக்கரி இறக்குமதி செய்வதில் 750 முதல் 800 மில்லியன் ரூபாய் வரையிலான பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தகுதியற்ற நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளதோடு, தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளதன் மூலம் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு சுற்றுச்சூழலுக்கும் பெரும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக அவர் விவரித்தார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரை தொடர்பில் தனது கடும் அதிருப்தியை வெளியிட்ட திஸ்ஸ அத்தநாயக்க, தெற்கிலிருந்து வடக்கு நோக்கி வருபவர்கள் மனதில் வெறுப்பையே சுமந்து வருவதாக ஜனாதிபதி கூறியுள்ளமை பௌத்த மற்றும் தெற்கு மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

அரசியல் இலாபத்திற்காக இனங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தும் இத்தகைய கருத்துக்கள் சட்டப்படி குற்றம் எனவும், இது தெற்கில் வாழும் அனைத்து இன மக்களையும் அவமதிக்கும் செயல் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்துப் பேசிய அவர், தற்போதைய அரசாங்கம் புதிய திட்டங்கள் எதனையும் ஆரம்பிக்கவில்லை என்றும், கடந்த அரசாங்கங்கள் முன்னெடுத்த திட்டங்களை மட்டுமே திறந்து வைப்பதாகவும் தெரிவித்தார்.

மத்திய அதிவேக வீதி போன்ற திட்டங்களுக்கு கடந்த காலத்தில் ஜே.வி.பி உள்ளிட்ட குழுவினர் ஏற்படுத்திய தடைகளால் நாட்டுக்கு பாரிய நிதி நட்டம் ஏற்பட்டுள்ளதை அவர் நினைவுபடுத்தினார்.

அத்துடன், தரமற்ற மருந்து இறக்குமதி மற்றும் கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான குளறுபடிகளுக்கு அமைச்சர்கள் பொறுப்பேற்காமல், அரச அதிகாரிகள் மீது பழியைப் போட்டுத் தப்பிக்க முயல்வதாகவும், இந்த அரசாங்கம் பொய்களையும் ஏமாற்றங்களையும் மூலதனமாகக் கொண்டு இயங்குவதாகவும் அவர் மேலும் சாடினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *