முச்சந்தி

ஈரானில் மீண்டும் மன்னர் ஆட்சி ?; கலவரத்திற்கு முன்னாள் இளவரசர் காரணம்?…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(ஈரானில் தொடர் கலவரங்களின் பின்னர் மீண்டும் மன்னர் ஆட்சி திரும்புமா என்ற சந்தேகம் உள்ளது. ஆனாலும் தற்போதைய கலவரத்திற்கு முன்னாள் இளவரசர் காரணம் என்றும், முன்னாள் முடிக்குரிய இளவரசர் ரெசா பஹ்லவி அமெரிக்க கைக்கூலியாக செயல்பட்டு வருவதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது)
ஈரானில் வெடித்த மக்கள் கிளர்ச்சிகளில் முன்னாள் முடிக்குரிய இளவரசர் ரெசா பஹ்லவி(Reza Pahlavi) நாடு திரும்ப வேண்டும் என்ற குரல்கள் ஒலித்ததாகக் கூறப்படுகிறது. அவரே தற்போதைய கிளர்ச்சியில் ஈரானியர்களை வழிநடத்தும் விதமான அறிவித்தல்களை அமெரிக்காவில் இருந்துகொண்டு விடுத்து வருகிறார்.
நகர மையங்களை ஆக்கிரமித்துக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள் என்று ரெசா பஹ்லவி ஈரானியர்களுக்கு அழைப்பு விடுத்தார். இணைய சேவை முடக்கப்பட்டிருப்பதால் அங்கு உண்மையில் என்ன நடந்தது என்பதைப் பக்கச்சார்பற்ற செய்திகள் மூலம் உறுதிப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.
ஈரானில் பொருளாதாரம் மற்றும் விலைவாசி உயர்வு தொடர்பாக 2025 டிசம்பர் 28இல் தொடங்கிய போராட்டம், கமேனி ஆட்சி மற்றும் ஊழலுக்கு எதிரான பரந்த போராட்டமாக விரைவாக உருமாறியது.
கடந்த காலத்தைப் போலல்லாமல், சீர்திருத்தத்தை மட்டும் நாடவில்லை, மாறாக இஸ்லாமிய குடியரசையே போராட்டக்காரர்கள் நிராகரித்தனர்.
அதனால் நாட்டின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனிக்கு எதிராகப் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்தது.
கலவரத்திற்கு முன்னாள் இளவரசர் காரணம்?
ஈரான் கலவரத்திற்கு இந்த ரெஷா தான் காரணம், ஈரானில் இருந்து மக்களால் விரட்டப்பட்ட இந்த முன்னாள் இளவரசர் ரெஷா அமரிக்காவில் உட்கார்ந்து கொண்டு அமெரிக்காவின் கைக்கூலியாக மாறியுள்ளார். மீண்டும் மன்னர் ஆட்சியை கொண்டு வந்து, ஈரானின் வளங்களை அமெரிக்காவுக்கு கைமாற்றி விட முனைந்துள்ளார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் கை கூலிகளும், இஸ்ரேலின் மொசாத் ( MOSSAD) உளவு படையைச் சேர்ந்தவர்களையும் ஈரான் மக்கள் தெருவில் நேரிடையாக மோதி விரட்டுகின்றனர். கடந்த சில நாட்களாக ஈரான் போலீஸ் மொசாத் உளவாளிகளை தேடித்தேடி பிடித்து வருகிறதாக ஈரான் அரச செய்திகள் வெளியாகியுள்ளன.
டிரம்ப் அரசும் இஸ்ரேலும் ஈரானை மிரட்டுவததின் நோக்கம் எண்ணெய் வளங்களை கைப்பற்றுவதே என்று கூறப்படுகிறது. எனினும் ஈரான் மக்கள் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும், மீண்டும் மன்னர் ஆட்சி வேண்டாம் என்பதிலும் உறுதியாக உள்ளனர் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
யார் இந்த ரெசா பஹ்லவி?
ஈரானின் கடைசி மன்னர் ஷாவின் (Mohammad Reza Shah Pahlavi) புதல்வரே ரெசா பஹ்லவி. 1979 புரட்சியின் போது மன்னர் ஷாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. ஒரு காலத்தில் மேற்கு நாடுகளால் ஆதரிக்கப்பட்ட அவர் நாட்டை விட்டு வெளியேறி எகிப்தில் தஞ்சமடைந்த நிலையில் புற்றுநோயால் மரணமானார். அதன் பின்னர் அவரது குடும்பம் நிர்க்கதியாகியது.
புரட்சி நடந்து தந்தையின் ஆட்சி கவிழ்ந்த சமயத்தில் ரெசா பஹ்லவி அமெரிக்காவில் போர் விமானம் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். ஈரானின் சிம்மாசனத்தில் அமரவேண்டிய முடிக்குரிய இளவரசாகிய அவர் அதன் பின்னர் வோஷிங்டனிலேயே தலைமறைவு வாழ்க்கை நடத்த நேர்ந்தது.
இப்போது பல தசாப்தங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் ஈரானிய மக்களது அரசியல் மையத்தில் தோன்றுகிறார். புரட்சி உள்ளே இருந்து வெடிக்க வேண்டும் என்று கூறிவந்த அவர் தற்போதைய மக்கள் போராட்டங்களை வெளியே இருந்து நெறிப்படுத்துகிறார்.
மீண்டும் ஒரு மன்னர் ஆட்சி?
கிளர்ச்சியாளர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு இருக்கின்ற போதிலும் ஈரானியர்கள் மீண்டும் ஒரு மன்னர் ஆட்சியை ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே.
ஈரானின் அதியுயர் தலைவர் அயத்துல்லா அலி கொமேனி அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை அமெரிக்க அதிபரை மகிழ்விக்க முயற்சிக்கும் குழப்பகாரர்கள் என்று கூறி அவர்களை அடக்கி ஒடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
துப்பாக்கிச் சூடுகளும் தீவைப்புச் சம்பவங்களும் பரவலாக இடம்பெற்றன என்று பிபிசி செய்தி தெரிவித்தது. குறைந்தது 4000 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகள் காயக்காரர்களால் நிரம்பின என்ற தகவலை மருத்துவர்கள் வெளியிட்டனர்.
ஈரானிய மக்கள் முன்னெப்போதும் இருந்திராத விதத்தில் சுதந்திரத்தை நோக்கி நகர்கின்றனர். அமெரிக்கா அவர்களுக்கு உதவத் தயார் நிலையில் உள்ளது” என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூகவலைத் தளத்தில் எழுதியுள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு நடத்தினால் அவர்களைப் பாதுகாக்க அமெரிக்கா அங்கே இறங்கும் என்று அவர் முன்னர் எச்சரித்திருந்தார்.
இளவரசர் நாடு திரும்ப முடியுமா?
Coronation of the Shah of Iran, 10 November 1967.
தற்போதைய ஈரான் போராட்டத்தின் ஒரு பகுதியாக, 1979 புரட்சியின்போது தூக்கியெறியப்பட்ட ஈரானின் கடைசி ஷாவின் மகன் ரெசா பஹ்லவி திரும்ப வேண்டும் என்று சில மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதில் அமெரிக்கா தலையீடு இருப்பதாகக் குற்றஞ்சாட்டும் கொமேனி, அதற்கு எதிராக ஒருபோதும் தாம் இடமளிக்கப் போவதில்லை என எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே, ஈரானில் வெடித்துள்ள போராட்டங்கள் அந்நாட்டின் 47 ஆண்டுகால அரசியல் வரலாற்றையே புரட்டிப் போட்டுள்ளது. இந்தப் போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் மிக முக்கியமான பெயர் அதன் ரெசா பஹ்லவி.
ஈரானின் கடைசி மன்னரான முகமது ரெசா பஹ்லவியின் மூத்த மகனும் அந்நாட்டின் கடைசி இளவரசரும் ஆவார். 1925 முதல் 1979 வரை ஈரானை பஹ்லவி வம்சம் ஆட்சி செய்தது. ரெசா பஹ்லவியின் தந்தை மன்னராக இருந்தபோது ஈரான் எண்ணெய் பொருளாதார ரீதியாக வளர்ச்சி கண்டது. எனினும், 1979இல் ஏற்பட்ட புரட்சியால் மன்னராட்சி வீழ்த்தப்பட்டு, இளவரசர் பஹ்லவி குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார்.
கடந்த 47ஆண்டுகளாக வெளிநாட்டிலிருந்தே ஈரானில் ஆட்சி மாற்றம் வேண்டி போராடிவரும் 65 வயதான இளவரசர் பஹ்லவி, தற்போது ஈரானின் பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து மக்களைப் போராட அழைப்பு விடுத்துள்ளார். அவர் விடுத்த அழைப்பை ஏற்று, ஈரானில் மக்கள் வீதிகளில் இறங்கி பஹ்லவி திரும்புவார் என முழக்கமிட்டு வருகின்றனர். இதற்கிடையே, ரெசா பஹ்லவி ஈரான் திரும்ப முடியுமா என்ற் கேள்வியும் எழுந்துள்ளது.
முன்னாள் பட்டத்து இளவரசராக தெரியும் ரெசா பஹ்லவிக்கு, ஈரானில் ஓரளவு ஆதரவு இருந்தாலும், தற்போது அவர் அங்கு ஓர் எதிர்க்கட்சித் தலைவராகவே பதியப்படுகிறார். ஆகையால், கடந்த 47 ஆண்டுகளில் இவ்வளவு உயர்ந்த அளவிலான ஆதரவுடன் விளங்கும் இஸ்லாமிய குடியரசான ஈரானை, அவரால் எவ்வாறு கவிழ்க்க முடியும் என்கிற கேள்வியும் எழுகிறது.
மேலும், இதுவரை கொமேனியின் ஆட்சியே அங்கு நிலவுகிறது. ஆகையால், அவர் இருக்கும்வரை ரெசாவால் ஒருபோதும் ஈரானில் கால் வைக்க முடியாது என்பது சொல்லத் தேவையில்லை. தவிர, அவர் உடனடியாக கைதும் செய்யப்படுவார். ஒருவேளை, கொமேனி ஆட்சி கவிழ்ந்து ரெசா ஈரானுக்குள் வந்தாலும், அவரை கொமேனி ஆதரவாளர்கள் நீடிக்க விடுவார்களா என்பதும் சந்தேகமே என்கிறார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *